ரஜினியை சங்கி என ரசிகர் அழைத்ததாக பரப்பப்படும் எடிட் வீடியோ !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிஏஏ-விற்கு ஆதரவான கருத்தினை பதிவு செய்து இருந்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் மற்றும் சமூக ஊடகங்களில் அவருக்கு எதிரான கருத்துக்கள் பதிவாகி வந்தன.
இந்நிலையில், விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செல்லும் பொழுது ரசிகர் ஒருவர் ரஜினியை சங்கி என அழைத்ததாக பாலிமர் செய்தியின் வீடியோ ஒன்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
Bharathi rajan என்பவரின் முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோ 1.29 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது. பாரதிராஜன் முகநூல் பக்கத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நகரச் செயலாளர் என இடம்பெற்று இருக்கிறது. அரசியல் சார்ந்த ஆதரவாளர்களே முகநூல் குழுக்களில் அதிகம் பகிர்ந்து உள்ளனர்.
உண்மையில் ரஜினி குறித்து பரப்பப்படும் வீடியோவில் ” சங்கி ” என்ற வார்த்தையை ஓரிடத்தில் மட்டுமே தனியாக பதிவு செய்து இருக்கிறார்கள். பாலிமர் செய்தியில் வெளியான வீடியோ என்பதால், அதன் உண்மையான வீடியோவைத் தேடி பார்த்தோம்.
பிப்ரவரி 5-ம் தேதி பாலிமர் சேனலில் ” ரசிகர் கூறிய ஒற்றை வார்த்தை.. ஸ்டைலாக திரும்பி ரஜினி செய்த செயல் ” என வெளியான வீடியோவில், ” சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போழுது அவரது ரசிகர் அருகே ரஜினி வரும் பொழுது ” சார் நீங்க கெத்து சார் ” என கூறியுள்ளார். இதை கேட்ட உடன் சிறிது தூரம் சென்ற ரஜினி ஸ்டைலாக திரும்பி பார்த்து புன்னகைத்து உள்ளார் ” என வெளியிட்டு உள்ளனர்.
அந்த வீடியோவிற்கு பின்னால் ஒருவர் ” சார் நீங்க கெத்து சார் ” எனக் கூறுவதும் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ வெளியான நாளில் தான் ரஜினி சிஏஏ-விற்கு ஆதரவான கருத்தினை பதிவு செய்த வீடியோக்களும் வெளியாகி உள்ளன.
எதிர் கருத்து கொண்டவர்களை கருத்து சார்ந்து கேள்வி எழுப்ப வேண்டுமே தவிர போலியான படங்கள், தகவல்கள், எடிட் செய்யப்பட்ட வீடியோ மூலம் அல்ல. அது யாராக இருந்தாலும் சரி. ரஜினியை பார்த்து அவரின் ரசிகர் கெத்து சார் எனக் கூறிய வீடியோவை தவறான எடிட் செய்து சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே பரப்பி வருகிறார்கள்.