This article is from Sep 29, 2020

ஹரியானாவில் பிஜேபி எம்எல்ஏ முகத்தில் விவசாயிகள் சாணியை பூசும் வீடியோவா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

நெற்றியில் சந்தனம் வைப்பது போல் அருகில் சென்று ஹரியானா பிஜேபி எம்.எல்.ஏ முகத்தில் சாணியை பூசி செருப்பால் அடித்த விவசாயிகள். விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!

மதிப்பீடு

விளக்கம்

நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது தொடர்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஹரியானா மாநிலத்தின் பிஜேபி எம்எல்ஏ-வின் முகத்தில் விவசாயிகள் சாணியைப் பூசி செருப்பால் அடித்ததாக இவ்வீடியோ இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து தெரிந்து கொள்ள தீர்மானித்தோம்.

உண்மை என்ன ? 

வீடியோவில் இருந்து புகைப்படத்தை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஹரியானாவில் எம்பி சைனி முகத்தில் மையைப் பூசியதாக 2016 நவம்பர் 7-ம்தேதி பஞ்சாப் கேசரி எனும் யூடியூப் சேனலில் வைரலாகும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

கிடைத்த கீ வார்த்தைகளை கொண்டு தேடுகையில், 2016-ல் ஹரியானா அரசாங்கத்திடம் இட ஒதுக்கீட்டு கேட்டு ஜாட் சமுதாய மக்கள் போராடியதற்கு எதிர்த்து பேசிய பாஜகவின் குருசேஷ்திர எம்பி ராஜ்குமார் சைனியின் முகத்தில் ஐந்து பேர் மையை பூசி தாக்கியதாக ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

2016 அக்டோபர் 16-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில், ” பாஜக எம்பி ராஜ்குமார் சைனியை தாக்கிய 5 பேரின் மீது ஐபிசி பிரிவு 307 கீழ் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட 5 பேரும் ஹைசர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 4 பேர் மாணவர்கள் மற்றும் சந்தீப் என்பவர் வழக்கறிஞர் ஆக பணியாற்றி வருகிறார். அவரே தாக்குதலை திட்டமிட்டுள்ளார். அவர்கள் ஆசாத் கிசான் மிஷன் மற்றும் பாரதிய கிசான் பிரிகேட் ஆகிய இரு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ” எனப் போலீசார் கூறியதாக வெளியாகி இருக்கிறது.

சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு பிணையும் வழங்கப்பட்டு உள்ளது. பின்னர், போலீசார் விசாரணையில் சைனி முகத்தில் பூசியது சாதாரண கருப்பு மை மட்டுமே எனக் கூறி கொலை முயற்சி வழக்கு திரும்பப் பெறப்பட்டது. அவ்விரு அமைப்புகளும் விவசாய அமைப்புகளே. எனினும், நடந்த சம்பவத்திற்கும் தற்போதைய போராட்டத்திற்கும் தொடர்பில்லை.

முடிவு : 

நம் தேடலில், 2016-ல் ஜாட் சமுதாய மக்கள் ஹரியானாவின் பாஜக எம்பி ராஜ்குமார் சைனி முகத்தில் கருப்பு மையைப் பூசி தாக்கிய வீடியோவை தற்போது(2020) நிகழ்ந்து வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தவறாக தொடர்புப்படுத்தி பகிர்ந்து வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader