This article is from Jan 14, 2020

10 ஆண்டில் 4.7 லட்சம் கோடி அளவிற்கு விவசாயக் கடன் தள்ளுபடி !

பரவிய செய்தி

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் கடந்தாண்டு வரையில் மட்டும் ரூ.3,00,000 கோடி அளவிற்கு விவசாயக் கடன் தள்ளுபடி

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் முதன்மை தொழிலாக விளங்கும் விவசாயம் கடன் சார்ந்த ஒன்றாக மாறி விட்டது. அப்படி கடனை பெறும் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கும் காரணத்தினாலும், வேளாண் மக்களின் கோரிக்கைகாகவும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. சில நேரங்களில் அரசியல் கட்சிகளின் வெற்றியையும் விவசாயக் கடன் தள்ளுபடி தீர்மானிக்கிறது.

கடந்த 2015 முதல் 2019 வரையிலான நிதியாண்டில் 3 லட்சம் கோடி அளவிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக எஸ்பிஐ வங்கியின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாட்டில் உள்ள 10 பெரிய மாநிலங்கள் அறிவித்த தொகையானது 3,00,240 கோடியாகும். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 4.70 லட்சம் கோடி அளவிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், 2017-க்கு பிறகு மட்டுமே 2 லட்சம் கோடியை தொடுகிறது.

2015 நிதியாண்டில், ஆந்திரா அரசு 24,000 கோடி மதிப்புள்ள விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது, அதே ஆண்டில் தெலங்கானா மாநிலமும் 17,000 கோடி ரூபாய் அளவிற்கு கடன் தள்ளுபடியில் ஈடுபட்டது, தமிழகத்தில் 5,280 கோடி அளவிற்கு கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

2018 நிதியாண்டில் மகாராஷ்டிரா மாநிலம் 34,020 கோடியை தள்ளுபடி செய்தது, உத்தரப் பிரதேசம் 36,360 கோடி , பஞ்சாப் 10,000 கோடி , கர்நாடகா 18,000 கோடியும், 2019 நிதியாண்டில் மற்றொரு 44,000 கோடியையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

மேலும், 2019-ல் ராஜஸ்தான் 18,000 கோடியும், மத்தியப் பிரதேசம் 36,500 கோடியும், சண்டிகர் 6,100 கோடியும் மற்றும் கடந்த மாதத்தில் மகாராஷ்டிராவில் 45,000-51,000 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

” ஆனால், இந்த தள்ளுபடி விசயம் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. எழுத்து வடிவில் கூறப்படும் பெரும்பாலான விசயங்கள் காகிதத்தில் மட்டுமே உள்ளன, செயல்படுத்துவதில் 60%-ஐ தாண்டாமல் உள்ளது. அதே நேரத்தில் மிகக் குறைந்த விநியோகமாக மத்திய பிரதேசத்தில் 10% மட்டுமே உள்ளன ” என எகானாமிக்ஸ் பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது.

மற்றொரு ஆச்சரியமான விசயம் என்னவென்றால், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட ஆண்டுகளில் புதிய விவசாயக் கடன்கள் பெறும் விகிதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது.

நாட்டில் உள்ள பல மாநிலங்களில் விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது மகிழ்ச்சியாக இருந்தாலும், அது கடன் பெற்ற விவசாயிகளுக்கு முறையாக பயன் அளிக்கிறதா, அது மட்டுமே தீர்வாகுமா என்ற கேள்விகளும் எழுகின்றன.

2019-ல் கடன் தள்ளுபடி விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்குமா என்ற தலைப்பில் பிபிசி வெளியிட்ட கட்டுரையில் இருந்து , ” தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 2014-2018 ஆண்டுகளில் நிகழ்ந்த 14,034 விவசாயிகள் தற்கொலையில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவை 2017-ல் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் நிகழ்ந்து உள்ளது என்பதைக் காட்டுகிறது.

விவசாயக் கடன் தள்ளுபடியால் பயனடைபவர்களில் தவறுகள் இருப்பதும் கண்டறியப்படுகிறது. இதில், தகுதி வாய்ந்த விவசாயிகள் கடன் தள்ளுபடி பயனை பெற முடியாமலும், தகுதியற்ற விவசாயிகள் பயன் பெறுவதும் அடங்கும். இத்தகைய நிவாரணத் திட்டமானது விவசாயக் கடன் தள்ளுபடி என்பது வங்கிகள் மற்றும் அதிகாரப்பூர்வ சில நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை மட்டுமே அடங்கும். ஆனால் கடன் பெற்று விவசாயம் செய்பவர்கள் வங்கிகள், நிதி நிறுவனங்கள் தவிர்த்து ஊர் மக்களிடம், நண்பர்களிடம் கடன் பெறுவதையும் பார்க்க வேண்டி இருக்கிறது “.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதால் மட்டுமே பிரச்சனைகள் தீருமா என்பது முடிவுக்கு வர இயலாதது. ஏனெனில், விவசாயம் பார்ப்பவர்கள் கடன் பெறும் முறைகளில் வேறுபாடுகள் உள்ளன. ஆகையால், வேறு சில திட்டங்களும் கொண்டு வரப்படுகின்றன. விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் சில மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மத்திய பட்ஜெட்டில் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6,000 வழங்கும் திட்டம் போன்றவை. அதில், தற்பொழுது தான் முதல் தவணையை பெருகுகின்றனர்.

சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு மாற்று வழிகளை கண்டுபிடித்து, அவற்றின் மூலம் நிரந்தர தீர்வு கொண்டு வருவது அவசியமாகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader