பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசமிட்ட பெண் எனப் பரப்பப்படும் வளர்மதியின் புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரில் ” அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் ” என்ற தலைப்பில் சிஏஏ-விற்கு எதிரான பொதுக்கூட்டத்தில் மஜ்லிஸ் கட்சி எம்.பி அசாதுதீன் ஓவைசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் அமுல்யா என்ற பெண் மேடையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழங்கினாள்.. அவளும் டெல்லி விவசாய சங்க போராட்டத்தில் ” எனும் நிலைத்தகவல் உடன் இப்புகைப்படங்கள் தமிழ் மட்டுமின்றி இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற மாநாட்டில் ஹைதராபாத் எம்.பி ஓவைசி முன்னிலையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டதால் சர்ச்சையில் சிக்கிய பெண் அமுல்யா லியோனா. இதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் இருந்தார். எனினும், 110 நாட்களுக்கு பிறகு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அந்த பெண் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு உள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வளர்மதியின் புகைப்படத்தை தவறாகப் பரப்பி வருகிறார்கள். வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஜனவரி 25-ம் தேதி ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் எனும் முகநூல் பக்கத்தில் இப்புகைப்படம் பதிவாகி இருக்கிறது.
ஜனவரி 25-ம் தேதி வளர்மதி தன்னுடைய முகநூல் பக்கத்தில், ” விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும். விவசாயிகளுக்கு துணைநிற்போம்! தடைகளை மீறி டிராக்டர் பேரணி! டெல்லி டிராக்டர் பேரணியில் பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம், பெண்கள் எழுச்சி இயக்கம், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, CPDR தோழர்கள்! விவசாயிகளுக்கு துணைநிற்போம்! வேளாண்சட்டத்தை திரும்பப் பெறு! ” என போராட்டத்தில் கலந்து கொண்ட வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
2017-ம் ஆண்டு சேலத்தில் கல்லூரி ஒன்றின் வாயிலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்கம் கொடுத்த காரணத்திற்காக வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அதை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. தமிழகத்தைச் சேர்ந்த வளர்மதியின் புகைப்படத்தை அமுல்யா லியோனா என தவறாகப் பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோசமிட்டு சர்ச்சையில் சிக்கிய அமுல்யா லியோனா விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரப்பப்படும் புகைப்படம் தமிழகத்தைச் சேர்ந்த வளர்மதியின் புகைப்படம் என்றும், வளர்மதி போராட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை இந்திய அளவில் தவறாக பரப்பி வருகிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.