விவசாயிகள் போராட்டத்தில் பாஜகவினர் பாகிஸ்தான் ஆதரவு கோசத்தை எழுப்பினரா ?

பரவிய செய்தி
அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிட்டு போராட்டத்தை மடைமாற்ற நினைக்கும் சங்கிகள். எப்படியாவது கலவரத்தை நடத்த துடிக்கும் BJP RSS கும்பல். விவசாயிகள் போராட்டத்தில் புகுந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோசம் போட்ட பாஜக சங்கி உமேஷ் சிங்க வெளுத்து எடுத்த விவசாயிகள்.
மதிப்பீடு
விளக்கம்
விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோசத்தை எழுப்பிய பாஜகவின் உமேஷ் சிங் என்பவரை விவசாயிகள் பிடித்து தாக்கியதாக 42 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
42 நொடிகள் கொண்ட வீடியோவில் பாகிஸ்தான் ஆதரவு அல்லது காலிஸ்தான் ஆதரவு கோசம் என எதுவும் இடம்பெறவில்லை. வீடியோவில், ஒரு நபரை இழுத்து செல்வதும், தாக்குவதும், போலீஸ் அவரை கூட்டத்தில் இருந்து காப்பாற்றவும் செய்கின்றனர் உள்ளிட்டவையே பதிவாகி இருக்கிறது.
2020 டிசம்பர் 14-ம் தேதி பாரத் சமாச்சர் எனும் உள்ளூர் இந்தி சேனலின் ட்விட்டரில், ஊடகத்திடம் தவறாக பேசியதற்காக அருண் என்பவரை விவசாயிகள் தாக்கியதாகக் கூறி இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.
#Ghaziabad ||
➡धरने पर आए किसानों ने शख्स को पीटा
➡मीडिया में इंटरव्यू देने पर की गई पिटाई
➡दिल्ली निवासी शख्स को किसानों ने पीटा
➡अरूण नाम के शख्स की जमकर पिटाई
➡पिटाई का वीडियो हो रहा जमकर वायरल
➡दिल्ली यूपी बॉर्डर पर किसानों ने की पिटाई.@ghaziabadpolice pic.twitter.com/RCFvYRxvif
— भारत समाचार (@bstvlive) December 14, 2020
” வீடியோவில் தாக்கப்பட்ட நபர் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோசத்தையும் எழுப்பவில்லை. அவர் சஹரன்பூரில் வசிக்கும் அருண்குமார். உள்ளூர் சேனலின் நிரூபரிடம் பேசிக் கொண்டிருக்கையில், வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை உருவானது. போராட்டத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக நினைத்து சுற்றியுள்ள விவசாயிகள் அந்த நபர் மீது கோபமடைந்து தாக்கி உள்ளனர் ” என கோடா போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக பூம்லைவ் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியில் உமேஷ் சிங் எனும் பெயரில் தலைவர் இருப்பதாக எந்தவொரு தகவலும் இல்லை. விவசாயிகளால் தாக்கப்பட்டு வீடியோவில் இடம்பெற்ற நபரின் பெயர் அருண் குமார். அவர் பாஜக தலைவரும் அல்ல, பிற கட்சியுடன் தொடர்புடைவர் அல்ல.
முடிவு :
நம் தேடலில், விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசத்தை எழுப்பிய பாஜக தலைவர் உமேஷ் சிங் தாக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ தவறானது. விவசாயிகள் போராட்டத்தில் அருண்குமார் என்பவர் உள்ளூர் சேனல் நிரூபரிடம் மோதலை உருவாக்கியதால் விவசாயிகள் அவரைத் தாக்கியுள்ளனர் என அறிய முடிகிறது.