விவசாயிகள் போராட்டத்தில் வைரலாகும் கார் மதிப்பு ரூ.2 கோடியா ?

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகள் 2 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் வாகனத்தில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
மாரிதாஸ் காணொளிகள் எனும் ரசிக பக்கத்தில் வெளியான பதிவு ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கோடி கணக்கில் பணத்தை செலவு செய்து வாங்கிய காருடன் விவசாயிகள் போர்வையில் போராட்டம் நடைபெறுவதாக இப்புகைப்படம் இந்திய அளவில் பரவிக் கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
” We are Farmers ” என எழுதப்பட்டு இருக்கும் கருப்பு நிற காரின் மேலே இருவர் அமர்ந்து இருக்கும் வைரல் புகைப்படம் டிசம்பர் 19-ம் தேதி மன்ப்ரீத் சிங் என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டெல்லி சிங்கு எல்லையைக் குறிப்பிட்டு வெளியாகி இருக்கிறது.
காரின் உரிமையாளர் மன்ப்ரீத் சிங் காருடன் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். டிசம்பர் 15-ம் தேதி மன்ப்ரீத் சிங் குண்டலி எல்லையைக் குறிப்பிட்டு காரில் செல்லும் மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அப்புகைப்படத்தில் வாகன பதிவு எண் PB 12Z 8282-ஐ பார்க்கலாம். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வாஹன் இணையதளத்தில் கார் பதிவு எண் மூலம் கார் தொடர்பான பதிவு விவரங்கள் கிடைத்தது.
வைரலாகும் பதிவுகளில் கூறுவது போன்று, கார் குறித்த விவரங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பெயரோ அல்லது கார் மாடல் மெர்சிடிஸ் ஜி வாகன் என்றோ இல்லை. Force motor limited உடைய Gurkha FM2.6CR-4X2 மாடல் வாகனம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. Force Gurkha இணையதளத்தில் அதன் விலை 9 முதல் 10 லட்சதிற்குள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்ப்ரீத் சிங் காரில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் லோகோ இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இந்தியாவில் ஃபோர்ஸ் கூர்கா வாகனத்தை மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் ஆக மாடிஃபைடு செய்து பயன்படுத்தவும் செய்கின்றனர்.
” நான் ஒரு தொழில்முனைவோர், என்னுடைய குடும்பத்தின் உறுப்பினர்கள் விவசாயிகள். டிசம்பர் 5 முதல் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தரப்பு மக்களும் எல்லையில் உள்ளனர். வைரலாகும் புகைப்படத்தில் உள்ளது என்னுடைய கார். இது மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகனின் பிரதி மட்டுமே. நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. நானும் வரி செலுத்தி வருகிறேன். விவசாயிகளின் எதிர்ப்பை இழிவுபடுத்த என் காரின் புகைப்படத்தை பயன்படுத்துவதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது ” என மன்ப்ரீத் சிங் ஆல்ட் இணையதளத்திற்கு பேட்டி அளித்து இருக்கிறார்.
மேலும், தமிழில் வைரலாவது போன்று தனது காரின் விலை குறித்து பதிவிடும் பாஜக ஆதரவாளர்கள் பதிவை இணைத்து கிண்டல் செய்யும் விதத்தில் இரு பதிவுகளை தன் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
மாடிஃபைடு செய்யப்பட்ட ஃபோர்ஸ் மோட்டார் கூர்கா வாகனத்தில் சீக்கியர்கள் அமர்ந்து இருப்பது, சுற்றி நிற்கும் புகைப்படத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வசதி படைத்தவர்கள் என சித்தரித்து உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அமர்ந்து இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2 கோடி மதிப்புடைய ஜி வேகன் கார் அல்ல என்றும், மன்ப்ரீத் சிங் என்பவர் 10 லட்சம் மதிப்புள்ள தன் ஃபோர்ஸ் மோட்டார் கூர்கா வாகனத்தை மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் ஆக மாடிஃபைடு செய்துள்ளார் என்றும் அறிய முடிகிறது.