விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசங்களா ?

பரவிய செய்தி
முழுக்கமுழுக்க தேசபிரிவினைவாதிகள் சட்ட விரோத ஊடுருவல்காரர்கள் தீவிரவாதிகள் இவர்களை ஒருங்கிணைத்து தேசத்திற்கு எதிராக போராடும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய். பஞ்சாப் விவசாயி பாக்கிஸ்தான் கொடி, பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் டர்பன் கட்டினால் சீக்கியரா மண்டைய மறைச்சாலும் கொண்டைய மறைக்க மறந்துடுறீங்களே குல்லா பாய்ஸ்.
மதிப்பீடு
விளக்கம்
புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதிலும் கவனம் பெற்று வருகிறது. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை வைத்து பல வதந்திகளும், பழைய வீடியோக்களும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் போல் டர்பன் கட்டி வந்த இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் ஜிந்தாபாத், காலிஸ்தான் ஜிந்தாபாத் என கோசங்களை முழங்கியதாக 15 நொடிகள் கொண்ட இவ்வீடியோ சமூக வலைதளங்களில் இந்திய அளவில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் கொடிகளை ஏந்தியவர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத், காலிஸ்தான் ஜிந்தாபாத் கோசமிடும் வீடியோ போராட்டக் களத்தினைப் போன்று இல்லை. வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட்களை எடுத்து ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவு கொடியுடன் கோசங்கள் எழுப்பப்பட்டதாக ” வீடியோவுடன் கூடிய செய்தி கிடைத்தது.
2019-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி ” Sikhs in UK denounce pro-Khalistan slogans during World Cup matches ” எனும் தலைப்பில் ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ” இங்கிலாந்தில் வசிக்கும் சீக்கியர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது காலிஸ்தான் ஜிந்தாபாத் மற்றும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசங்களை எழுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது.
2019 உலக கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியின் போது காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் காலிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு கோசங்களை எழுப்பியதாக இந்திய செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டத்தில் டர்பன் அணிந்த வந்த இஸ்லாமியர் என வதந்தி வீடியோ !
விவசாயிகள் போராட்டம் தொடங்கியதில் இருந்து பழைய வீடியோக்களை வைத்து போராட்டம் குறித்த வீண் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், 2019 உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து நாட்டில் சீக்கியர்கள் காலிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு கோசங்களை எழுப்பிய போது எடுக்கப்பட்ட வீடியோவை இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்தில் நிகழ்ந்ததாக வதந்தியைப் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.