டெல்லி போராட்டத்தில் போலீஸ் உடையில் ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
டெல்லி போராட்டத்தை அடக்க போனவர்களில் நிருபர்கள் கேள்வி கேட்ட போலீஸ் உடையில் இருந்த ஒருவரின் பேஸ்புக் ஐடி-யை கண்டுபிடித்து உள்ளதாகவும், அவர் பாஜக-வைச் சேர்ந்தவர், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் எனக் கூறி 2.59 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் போலீஸ் உடையில் நுழைந்ததாகக் கூறி பகிரப்படும் இதே வீடியோவின் முன்பகுதி கடந்த 2019-ம் ஆண்டில் என்ஆர்சி மற்றும் சிஏஏ-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் போலீஸ் உடையில் நுழைந்து விட்டதாகப் பரப்பி இருக்கிறார்கள்.
RSS POLICE WITHOUT NAME BATCH. Sare police waale ke name batch gir gaye..that’s how RSS people also entered police team n rest all knows.@stoppression @imMAK02 @AdityaMenon22 pic.twitter.com/Js4tUq3OV2
— Hyderabad Against NRC/CAA/NPR (@HydAganstNrcCAA) December 21, 2019
ஆனால், ஆர்.எஸ்.எஸ் உடை மற்றும் பாஜக பேனரில் காண்பிக்கப்பட்ட புகைப்படங்களில் இருப்பவர் ராஜஸ்தான் புந்தி தொகுதியின் பாஜக எம்எல்ஏ அசோக் தோக்ரா ஆவார். அவரது முகநூல் பக்கத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
ஆளும் கட்சியின் எம்எல்ஏ, அதுவும் ராஜஸ்தான் மாநில எம்எல்ஏ டெல்லி போராட்டத்தில் போலீஸ் உடையில் செல்வாரா என்றக் கேள்வி எழும் அல்லவா. அதேபோல், வைரலான வீடியோவில் இருக்கும் போலீஸ் அதிகாரியும், எம்எல்ஏ அசோக் தோத்ரா புகைப்படங்களை ஒப்பிட்டு பார்க்கையில் வெவ்வேறு நபர்களாகவே தெரிகின்றனர்.
வீடியோவில் காணப்பட்டு இருக்கும் போலீஸ் அதிகாரியின் பெயர் வினோத் நராங். அவர் 2019-ல் பூம்லைப் இணையதளத்திற்கு அளித்த தகவலில், ” மந்தி ஹவுஸ் பகுதியில் நடைபெற்றப் போராட்டத்தின் போது எதிர்ப்பாளர்களை சுற்றி வளைக்கும் போது தனது பெயர் பேட்ஜ் தவறியதாகவும், எனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை, அது ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராகவும் இருக்கட்டும் ” எனத் தெரிவித்ததாக வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : போலீஸ் வேடத்தில் வந்து மாணவர்களை தாக்குவது ABVP-ஐ சேர்ந்தவரா ?
அதேபோல், சிவில் உடையில் பாதுகாப்பு கவசங்கள் உடன் இருக்கும் ஒருவரின் புகைப்படத்தை காண்பித்து அவர் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர் என 2019-ல் பரவிய வதந்தியில் இடம்பெற்ற ஸ்க்ரீன்ஷார்ட்களும் இவ்வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், டெல்லி போராட்டத்தில் போலீஸ் அதிகாரி உடையில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர், பாஜக கட்சியைச் சேர்ந்தவர் ஊடுருவியதாக ஸ்க்ரீன்ஷார்ட், புகைப்படங்கள் உடன் பகிரப்படும் வீடியோ தவறானது. அந்த புகைப்படங்களில் இருப்பவர் பாஜக எம்எல்ஏ அசோக் தோக்ரா என்றும், போலீஸ் அதிகாரியின் பெயர் வினோத் நராங் என்றும் அறிய முடிகிறது.