விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் வேடத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியரா ?

பரவிய செய்தி
விவசாய போராட்டத்தில் அவ்வளவு பிசியாக இருப்பதால் வேஷத்தை கலைக்க டைம் கிடைக்கவில்லையாம்.
மதிப்பீடு
விளக்கம்
கால்டுவெல்ஜீ எனும் முகநூல் பக்கத்தில், விவசாயப் போராட்டத்தில் சீக்கியர் வேடத்தில் பங்கேற்ற இஸ்லாமியர் வேஷத்தை கலைக்க நேரம் இல்லாததால் அப்படியே தொழுகை செய்ததாக முஸ்லீம்கள் உடன் தொழுகை செய்யும் சீக்கியரைக் குறிப்பிட்டு பகிர்ந்த இப்புகைப்படம் 5 ஆயிரத்திற்கும் மேல் ஷேர் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
தொழுகை செய்யும் சீக்கியரின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2016-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி Shaykh Mohammed Aslam எனும் முகநூல் பக்கத்தில் சீக்கியர் தொழுகை செய்யும் இப்புகைப்படம் பதிவாகி இருக்கிறது.
முகநூல் பதிவில், ” இந்த சீக்கிய மனிதர் ஜூம்ஆ நாளில் மசூதிக்குள் வந்து வுது நிகழ்த்தினார், ஆச்சரியமாக ” அல்லாஹு அக்பர் ” எனக் கூறி அனைவரின் முன்னால் பிராத்தனை செய்தார். இந்த அழகான மதத்தை அல்லாஹ் உலகம் முழுவதும் பரப்பட்டும் ” எனக் கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது, அந்த புகைப்படத்தில் தொழுகை செய்யும் சீக்கியர் யார் என்கிற விவரங்கள் ஏதும் தெரியவில்லை. விவசாயிகள் போராட்டத்தில் முஸ்லீம்களை வைத்து வதந்தி பரப்புவது இது முதல்முறை அல்ல.
மேலும் படிக்க : முஸ்லீம் நபர் சீக்கிய விவசாயியாக வேடமிட்டதாகப் பரப்பப்படும் ஃபோட்டோஷாப் வதந்தி!
இதற்கு முன்பு கூட, விவசாயிகள் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் மாறுவேடத்தில் கலந்து கொண்டதாக பல தவறான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பரப்பப்பட்டன.
மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டத்தில் டர்பன் அணிந்த வந்த இஸ்லாமியர் என வதந்தி வீடியோ !
மேலும் படிக்க : டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதியா ?
முடிவு :
விவசாயிகள் போராட்டம் 2020-ல் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்த பிறகே தொடங்கியது, அதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவாகி இருக்கிறது என அறிய முடிகிறது.