கண்ணாடியை துடைப்பது போல் ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கரை ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஸ்கேன் செய்து நூதன கொள்ளையா ?

பரவிய செய்தி

கார் – லாரிகளில் ஃபாஸ்ட்டேக் வழிப்பறி.. வாகன ஓட்டிகளே உஷார்..! கண்ணாடியை துடைப்பது போல கைவரிசை. கார் கண்ணாடி-யை cleaning பண்ணும் போது கையில் உள்ள watch-ல் இருக்கும் scaner/sencor மூலம் உங்கள் Fastag பணத்தை அபேஸ் செய்கிறார்கள்..

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

” மகாராஷ்டிரா மாநிலத்தில் புறநகர் பகுதிகளில் சொகுசு காரில் சென்றவர்கள் சிக்னலுக்காக காத்திருந்த போது, அங்கு வந்து காரின் கண்ணாடியை துடைத்த சிறுவனுக்கு டிப்ஸ் கொடுத்து அங்கிருந்து சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்களின் ஃபாஸ்ட்டேக் வங்கி கணக்கில் இருந்து மொத்த பணமும் எடுக்கப்பட்டு இருக்கிறது. எந்தவொரு சுங்கச்சாவடியையும் கடக்காமல் எப்படி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது என யோசித்தனர்.

அந்த சிறுவனின் வழியாக இருக்கலாம் என நினைத்து இரு வாரங்கள் கழித்து அதே பகுதிக்கு சென்று சிக்னலில் காத்திருந்த போது அங்கு வந்த மற்றொரு சிறுவன் கண்ணாடியை துடைப்பது போல் நடித்து கையில் ஸ்மார்ட் வாட்ச் போனில் இருந்த டிஜிட்டல் ஸ்கேனர் மூலம் ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்வதையும், அதில் சிவப்பு நிற விளக்கு எரிவதையும் கண்டுபிடித்தனர்.

ஸ்மார்ட் வாட்ச் விலையை கேட்ட உடன் அந்த சிறுவன் அங்கிருந்து ஓடியுள்ளான். இந்த நூதன வழிப்பறி சம்பவத்தை விவரித்து அந்த இரு இளைஞர்களும் வீடியோ பதிவிட்டு உள்ளனர் ” என பாலிமர் செய்தியில் வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியாகி இருக்கிறது.

உண்மை என்ன ? 

சுங்கச்சாவடியை கடந்து செல்ல கார், லாரிகளில் ஒட்டப்பட்டுள்ள ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து பணத்தை திருட முடியும் என்றால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கார்களில் இருந்து ஸ்கேன் செய்து பணத்தை எடுத்து விட முடியும் தானே. வைரல் செய்யப்படும் வீடியோ எடுக்கப்பட்ட பகுதியை பார்க்கையில் சாலையில் சிக்னல் நடுவே எடுக்கப்பட்டது போல் இல்லை, வீடியோ எடுப்பதற்காக சாலையோரமாய் காரை நிறுத்தியது போல் உள்ளது.

அதுமட்டுமின்றி, வைரல் வீடியோவில் ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் அருகே சிறுவன் துணியால் துடைக்கும் போது கையில் இருக்கும் ஸ்மார்ட் வாட்ச் சிவப்பு நிறத்தில் நேரத்தையே காண்பிப்பதை பார்க்க முடிந்தது.

இந்த வீடியோ குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர் தினேஷ் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, சுங்கச்சாவடியில் வரும் வாகனங்களில் உள்ள ஃபாஸ்ட்டேக்கை ரீட் செய்ய அங்கு ரீடர் இருக்கும். அந்த ரீடர் வேலை செய்யவில்லை என்றால் கையில் கன் மாறி ஒன்றை வைத்து எடுப்பார்கள். ஆனால், இந்த வீடியோவில் கான்பிக்கப்பட்டு இருப்பது முற்றிலும் பொய்யானது. அவர்கள் வைரல் செய்ய வேண்டும் என்பதற்காக வீடியோவை எடுத்துள்ளனர்.

ஃபாஸ்ட்டேக் (RFID Tag) விசயத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் நிறையவே உள்ளன, அதில் அச்சுறுத்தல் இருக்கிறது. அதற்காக இவ்வளவு எளிதாக ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஸ்கேன் செய்து பணத்தை எடுக்க வாய்ப்பில்லை. இது போலியாக சித்தரிக்கப்பட்டு எடுத்த வீடியோவே ” எனத் தெரிவித்து இருந்தார்.

Twitter link 

ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கரை ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஸ்கேன் செய்து பணத்தை எடுப்பதாக இவ்வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகவே, சைபர் பாதுகாப்பு மற்றும் எத்திகல் ஹாக்கிங்கை சார்ந்தவர்கள் ” இந்த வீடியோ சித்தரித்து எடுக்கப்பட்ட போலியான வீடியோ ” என ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், காரின் கண்ணாடியை துடைப்பது போல் சிறுவன் தன் கையில் உள்ள ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து நூதன முறையில் கொள்ளை அடிப்பதாக பரப்பப்படும் மற்றும் செய்தியில் வெளியான வீடியோ போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader