அப்பா மகளையும், அம்மா மகனையும் திருமணம் செய்து கொண்டதாக பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
முஸ்லீம் குடும்பத்தில் தந்தை தனது மகளை திருமணம் செய்து கொண்டதால் கோபமடைந்த தாய் தனது மகனை திருமணம் செய்து கொண்டதாக சிறுமி ஆண் ஒருவருடன் மாலை அணிந்து இருக்கும் புகைப்படமும், சிறுவன் பெண் ஒருவருடன் மாலை அணிந்து இருக்கும் புகைப்படமும் இணைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், வைரல் செய்யப்படும் பதிவுகளில், புகைப்படத்தில் இருப்பவர்கள் யார், எங்கு, எப்போது சம்பவம் நிகழ்ந்தது என்கிற எந்த விவரங்களும் அளிக்கப்படவில்லை. ஆகையால், இது தொடர்பாக ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
முதலில் சிறுமி ஆண் ஒருவருடன் மாலை அணிந்து இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2016-ல் இஸ்லாமிய முகநூல் பக்கமொன்றில், ” வாழ்த்துக்கள்.. தந்தையும், மகளும் ஒரே வகுப்பில் பட்டம் பெற்றவர்கள்(ஹபீஸ்-உல்-குர்ஆன், குர்ஆனை மனப்பாடம் செய்வது) ” எனப் புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதேபோல், 2016-ல் இஸ்லாமிக் போர்டு எனும் இணையதளத்தில் அதே வாசகத்துடன் அப்புகைப்படம் பதிவிடப்பட்டு இருக்கிறது. அந்த ஆண்டில் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் உருது மற்றும் ஆங்கிலத்தில் குர்ஆன் சார்ந்த வாசகத்துடன் அதிகம் பகிரப்பட்டு இருக்கிறது.
அடுத்ததாக உள்ள சிறுவன் மற்றும் பெண் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2020 அக்டோபர் மாதம் முகநூல் பக்கம் ஒன்றில் இரு புகைப்படங்கள் உடன் உருது மொழியில் இருந்த வாசகத்தை மொழிமாற்றம் செய்து பார்க்கையில், ” எனது மகன் இன்று திருக்குர்ஆன் பூர்த்தி செய்துள்ளான் ” என காண்பித்தது. தாய் தனது மகன் குர்ஆன் நூலை படித்தது தொடர்பாக பதிவிட்ட புகைப்படங்களை வாழ்த்து கூறி 2020ல் பலரும் பகிர்ந்து இருக்கிறார்கள்.
இஸ்லாம் மார்க்கத்தின் புனித குர்ஆனை ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக வாசிப்பது அல்லது மனப்பாடம் செய்து முடித்த பிறகு நடைபெறும் நிகழ்ச்சியில் சிறுவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் வரை மாலை அணிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. இதுதொடர்பாக, பல புகைப்படங்களையும், வீடியோவும் காண நேரிட்டது. அதை திருமணம் என தவறாகப் பரப்பி வருகிறார்கள்.
எனினும், இரு புகைப்படத்தில் இருப்பவர்கள் பற்றிய விவரங்களை தனிப்பட்ட முறையில் நம்மால் பெற முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படத்தை வைத்து ஒரே குடும்பத்திற்குள் திருமணம் செய்து கொண்டதாக வதந்தியை உருவாக்கி இருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், அப்பா மகளை திருமணம் செய்தார், கோபத்தில் அம்மா மகனை திருமணம் செய்து கொண்டார் என பரப்பப்படும் தகவல் தவறானது. புகைப்படத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. முதல் புகைப்டம் 2016-ல், இரண்டாவது புகைப்படம் 2020-ல் குர்ஆன் வாசிப்பது தொடர்பாக வைரலானது.
குர்ஆனை முழுமையாக வாசிப்பது தொடர்பான நிகழ்விற்கு பிறகு மாலை அணிந்து இருப்பதை குடும்பத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டதாக வீண் வதந்தியை உருவாக்கி பரப்பி வருகிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.