குழந்தை கடத்துபவர் என நினைத்து குழந்தையின் தந்தையை தாக்கிய மக்கள்..!

பரவிய செய்தி
குழந்தையை கடத்தி செல்வதாக நினைத்து 2 வயது மகளுடன் சென்ற தந்தையை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
கர்நாடகாவில் குழந்தை கடத்தும் கும்பல் என்ற வாட்ஸ் ஆஃப் செய்தியால் குழந்தையின் தந்தையையே தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விளக்கம்
கர்நாடகாவின் மங்களூர் உஜிரே பகுதியை சேர்ந்த கலீத் என்பவர் தனது 2 வயது மகளுடன் ஆட்டோவில் செல்லும் பொழுது தன் குழந்தையை திட்டிக் கொண்டும், அடித்துக் கொண்டும் சென்றுள்ளார். இதனால் குழந்தை விடாமல் அழுதுக் கொண்டே இருந்துள்ளது. குழந்தை அழுவதை பார்த்த பைக்கில் சென்ற இருவர் ஆட்டோவை நிறுத்த சொல்லி என்ன ? ஏது ? என்று விசாரித்துள்ளனர்.
ஆனால், கலீத் அதற்கு பதில் அளிக்க மறுத்து பேசாமல் இருந்துள்ளார். இது போதுமே கண்டிப்பாக இவன் குழந்தையை கடத்தியுள்ளான் என நினைத்துள்ளனர். அதன்பின் இருவரும் குழந்தையின் தந்தையை தாக்க அப்பகுதியில் கூட்டம் கூடியது. குழந்தையின் தந்தை கலீத் அதிகமாக குடித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
குழந்தை கடத்தி செல்கிறான் என்று நினைத்த மக்களும் தங்கள் பங்கிற்கு அடித்துள்ளனர். வலித் தாங்க முடியாமல் கலீத் அவள் என்னுடைய குழந்தை என்று அழுதவாறே கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டு சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.
” சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கலீத் மற்றும் அவரை தாக்கிய நபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், 2 வயது குழந்தை கலீத் உடைய மகள் என்று தெரியவந்தது. குழந்தையின் தாய் ஹமீனா காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகு எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் விடுவித்துள்ளனர் “.
குழந்தையின் தந்தையை தாக்கியவர்களிடம் வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் கும்பல் என்று வதந்திகள் பரவி வருவதாகவும், ஒருவேளை சந்தேகம் இருந்தால் சட்டத்தை கையில் எடுக்காமல் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி போலீசார் தெரிவித்தனர்.
” கடந்த சில மாதங்களாக குழந்தைகளை கடத்தும் கும்பல் என்ற forward செய்தி அதிகளவில் வைரலாகி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே. பல உயிர் பலிகளும் கூட நிகழ்கிறது “.தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமின்றி வடமாநிலத்தில் கூட வதந்தியால் உயிர் பலிகள் ஏற்படுகிறது. இவ்வாறு பரவும் வதந்திகள் தொடர்பாக வாட்ஸ் ஆஃப் நிறுவனத்திடம் மத்திய அரசு உதவி கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் ஆஃப்பில் ஒரு செய்தியை பகிர்வதற்கு முன்பு அது உண்மையா என்று ஆராய்ந்த பிறகு பகிர வேண்டும். இவ்வாறு வதந்திகள் பரவுகின்றன என்பதை நம்மை சுற்றியுள்ளவர்களிடமும் கூறி வதந்தி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.