விந்தணு கருவை துளைக்கும் சிற்பம்: தமிழர்கள் செதுக்கியதா ?

பரவிய செய்தி
இன்று Microscope மூலம் கண்டுபிடித்த Fertilization எனப்படும் ஆணின் விந்தணு கருவை துளைக்கும் காட்சியை 2000 ஆண்டுகளுக்கு முன்பே கோவிலில் செதுக்கிருக்கின்றனர் தமிழர்கள். இந்த சிற்பம் சென்னையில் உள்ள வரமூர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
சென்னை சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள வரமூர்த்தீஸ்வரர் கோவிலின் மண்டபத்தில் செதுக்கப்பட்டு இருப்பது பாம்பின் உருவமே. விந்தணு கருவை துளைக்கும் காட்சி அல்ல.
விளக்கம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்காவில் உள்ள அரியத்துறை பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு.வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில். வரமூர்த்தீஸ்வரர் கோவில் சிவா பெருமானின் பஞ்ச பிரம்ம ஸ்தலங்களில் ஒன்றாகும்.
இக்கோவிலில் நவகிரகங்களின் சன்னதி முதலில் அமைக்கப்படாமல் இருந்துள்ளது. அதன்பின் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தான் அக்கோவிலில் நவகிரக சன்னதி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.( ஆண்டுகள் கணக்கு துல்லியமானவை அல்ல, அதற்கு ஆதாரங்களும் இல்லை. எனினும், சன்னதி பிற்பாடே அமைக்கப்பட்டு உள்ளது).
“ கோவிலின் கருவறைக்கு வெளியே உள்ள மண்டபத்தின் மேற்பகுதியில் பாம்பு, மீன், பல்லி உள்ளிட்டவையின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை சர்ப்ப தோஷம் மற்றும் நாக தோஷம் எனக் கூறும் தோஷங்களின் பரிகாரத்தை குறிப்பதாக கூறப்படுகிறது “
நிலவை பாம்பு விழுங்குவது போன்றும், சிவா லிங்கத்தை பாம்பு நெருங்குவது போன்றும் உள்ள சிற்பத்தையும், இரு மீன்கள் நெருங்கும் சிற்பத்தையும் ஆணின் விந்தணு கருவை துளைக்கும் காட்சி என நினைத்து தவறான தகவலை பதிவிட்டு உள்ளனர்.
வரமூர்த்தீஸ்வரர் கோவிலில் பாம்பு சிற்பங்கள் இடம்பெற்ற பகுதியில் பல வண்ணங்களில் பெய்ன்ட் அடித்து உள்ளனர். ஆகையால், சிற்பத்தின் உருவம் நன்றாக தெரியும் புகைப்படங்கள் கிடைத்துள்ளன.
தமிழர்கள் சிற்ப கலையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பல அரிய சிற்பங்களை செதுக்கியுள்ளனர் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
எனினும், விந்தணு கருவை துளைக்கும் காட்சி, சைக்கிளை கண்டுபிடித்து தமிழர்கள் தான், தமிழர்கள் செதுக்கிய மடிக்கணினி சிற்பம் என்று தவறான செய்திகளை பரப்புவதும், அதை அறியாமல் பகிர்வதும் அறிவுடைமையாகாது.
சைக்கிளை கண்டுபிடித்தது தமிழனா ? கல்வெட்டு ஆதாரம் நம்பலாமா ?
லேப்டாப் கருவியை கண்டுபிடித்தது தமிழர்கள்.. கல்வெட்டு ஆதாரம் உண்மையா ?