அர்ஜென்டினா-பிரான்ஸ் இறுதிப் போட்டியை ரொனால்டோ நேரில் பார்த்ததாக தவறான செய்தியை வெளியிட்ட மாலைமுரசு !

பரவிய செய்தி
அர்ஜென்டினா – பிரான்ஸ் இடையே நேற்று நடைபெற்ற ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டியை நேரில் தனது குடும்பத்தினருடன் பார்த்த ரொனால்டோ
மதிப்பீடு
விளக்கம்
கத்தார் நாட்டில் நடைபெற்ற 2022 ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் அர்ஜென்டினா-பிரான்ஸ் இடையேயான இறுதிப் போட்டியில் 3(4)-3(2) என்ற கோல் கணக்கில்(ஃபெனால்டி முறையில்) அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது.
பிரபல கால்பந்து விளையாட்டு வீரரும், போர்சுக்கல் நாட்டின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானா ரொனால்டோவின் போர்சுக்கல் அணி காலிறுதிப் போட்டியிலேயே உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், அர்ஜென்டினா-பிரான்ஸ் இடையேயான இறுதிப் போட்டியை ரொனால்டோ தன் குடும்பத்தினருடன் நேரில் பார்த்ததாக மாலை முரசு செய்தியில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
உண்மை என்ன ?
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியில் மெஸ்சியின் தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்ற செய்திகளே இணையத்தை ஆக்கிரமித்து உள்ளன. அந்த அளவிற்கு இறுதிப் போட்டிக் குறித்த செய்திகள் கவனம் பெற்றன.
ரொனால்டோ இறுதிப் போட்டியைக் காண நேரில் வந்தது தொடர்பாக தேடுகையில், அப்படியான செய்திகளே எங்கும் வெளியாகவில்லை. ஃபிஃபா, ரொனால்டோவின் அதிகாரப்பூர்வ பக்கங்களிலும் ரொனால்டோ இறுதிப் போட்டிக்கு வந்ததாக எந்தப் பதிவும் இல்லை.
மாலைமுரசு செய்தியில் வெளியிடப்பட்ட, ரொனால்டோ பார்வையாளர்களுக்கான அமரும் இடத்தில் இருந்து போட்டியைக் காணும்படி எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2018ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி தி சன் எனும் செய்தி இணையதளத்தில் அப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
அந்த செய்தியில், ” 2018ல் தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் சாம்பியன்ஸ் லீக் விளையாட்டு போட்டியின் போது ரொனால்டோ தனது காதலி மற்றும் தாயுடன் கால்பந்து போட்டியை பார்த்ததாக ” பல புகைப்படங்களுடன் வெளியாகி இருக்கிறது.
2018 அக்டோபர் 3ம் தேதி, ” Juventus vs Young Boys 3-0 full highlights & goals ” எனும் தலைப்பில் யூடியூப் சேனல் ஒன்றில் வெளியான வீடியோவில் ரொனால்டோ தன் குடும்பத்தினருடன் இருப்பதை காணலாம்.
டிசம்பர் 10ம் தேதி உலகக்கோப்பை போட்டியின் காலிறுதியில் போர்சுக்கல் அணி தோல்வி அடைந்து வெளியேறிய பிறகு டிசம்பர் 14ம் தேதி ஸ்பெயின் நாட்டில் உள்ள மட்ரிட் வல்டிபெபாஸ் பேஸில் ரொனால்டோ பயிற்சியில் ஈடுபட்டதாக இன்சைடர் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், அர்ஜென்டினா-பிரான்ஸ் இடையே நேற்று நடைபெற்ற ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டியை ரொனால்டோ தனது குடும்பத்தினருடன் நேரில் பார்த்ததாக மாலைமுரசு வெளியிட்ட செய்தி தவறானது. ரொனால்டோ உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டியை நேரில் பார்த்ததாக எந்த பதிவுகளுமே இல்லை. மாலைமுரசு வெளியிட்ட புகைப்படம் 2018ல் இத்தாலியில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.