மருதாணி வைத்த மாணவிக்கு ரூ.500 அபராதமா ?| எப்பொழுது நிகழ்ந்தது.

பரவிய செய்தி
தமிழகத்தில் இந்து மாணவி கையில் மருதாணி ஓடு சென்றதற்கு ரூ.500 அபராதம் . சொந்த நாட்டில் அகதிகளை போல் வாழும் இந்துக்கள். நடுநிலை இந்துக்களே இனியாவது திருந்துங்கள் .
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தில் கிறிஸ்தவ பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவி கையில் மருதாணி வைத்த காரணத்தினால் பள்ளி நிர்வாகம் ரூ.500 அபராதம் விதித்து உள்ளதாக மீம்ஸில் அபராதம் விதிக்கப்பட்ட ரசீது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக முகநூலில் தேடிய பொழுது இந்து மக்கள் மீடியா என்ற முகநூலில் சமீபத்தில் ” கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனக் கூறி பதிவான மீம்ஸ் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது. அதன் கமெண்ட்களில் யூடர்னை குறிப்பிட்டு ஒருவர் கமெண்ட் செய்து இருப்பதை பார்க்க முடிந்தது.
பல தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு கையில் மருதாணி வைக்க கூடாது , நெய்ல் பாலிஷ் போடக் கூடாது , ஆடை , அணிகலன்கள் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் இருப்பதை அனைவரும் அறிந்ததே. இதில், மருதாணி வைத்த மாணவிக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தது குறித்த செய்திகளை தேடினோம்.
நமது தேடலில் 4 ஆண்டுகளுக்கு முன்பு 2015-ம் ஆண்டில் ” கையில் மருதாணி வைத்ததற்கு பள்ளி நிர்வாகம் அபராதம் ” என தமிழ் செய்திகள் கிடைத்துள்ளன. அதில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகும் அதே அபராத ரசீது இடம்பெற்று இருக்கிறது. மேலும் , அபராதம் விதிக்கப்பட்டது மாணவிக்கு அல்ல , 2-ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கே.
அரசாங்க ஊழியரான மாணவனின் தந்தை ஜெயக்குமார் கூறுகையில் , செப்டம்பர் 23-ம் தேதி(2015) நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் மருதாணி வைக்கப்பட்டது. அப்பொழுது காலாண்டு தேர்வு விடுமுறைகள் விடப்பட்டன. அக்டோபர் 5-ம் தேதி பள்ளி திறக்கப்பட்ட பொழுது மருதாணியின் நிறம் மங்கி உள்ளது. பள்ளி திறக்கப்பட நாளில் மாணவர்களை பரிசோதித்து உள்ளனர். எனது மகனின் கையில் மருதாணி அடையாளங்கள் இருப்பதை கண்ட ஆசிரியர் , உடனடியாக அபராதம் விதிக்க செய்துள்ளார் ” எனக் கூறி இருக்கிறார்.
மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் பலன் இல்லாத காரணத்தினால் அபராத தொகையை செலுத்தி ரசீதை பெற்றுள்ளனர். அந்த ரசீதே சமூக வலைதளங்களில் மட்டுமின்றி செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது. இப்படி பள்ளி நிர்வாகம் கடுமையாக நடந்து கொண்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
சென்னை வேப்பேரியில் இயங்கி வரும் Doveton ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளியின் நிர்வாகம் கூறுகையில், இந்த கட்டுப்பாட்டின் நோக்கம் மாணவர்களின் மத்தியில் சீராக இருப்பதை உறுதி செய்யவே, பள்ளி மாணவர்களை தண்டிக்கவில்லை, விதிமுறைகளை கடைபிடிக்காத பெற்றோர்களுக்கே ” எனத் தெரிவித்து இருந்தனர்.
குறிப்பாக, தனியார் பள்ளிகள் பலவற்றிலும் இதுபோன்ற பல கட்டுப்பாடுகள் இருக்கவே செய்கின்றன. பெற்றோர்களும் இதனை அறிந்தே தங்களின் குழந்தைகளை சேர்க்கின்றனர். தனியார் பள்ளிகளின் கட்டுப்பாடுகள் குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை எம்மாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதை மக்களே கேள்வி கேட்க வேண்டும்.
மேலும் படிக்க : தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை.
இதற்கு முன்பாக 2017-ல் திருச்சியில் இயங்கி வரும் தனியார் பள்ளி, தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை வழங்கியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகியது. அதற்காக வழக்குகள் தொடரப்பட்டன. அது குறித்தும் , நாம் செய்தி வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, கிறிஸ்தவ பள்ளியில் மருதாணி வைத்து சென்ற மாணவிக்கு 500 ரூபாய் அபராதம் விதித்ததாக பரவும் செய்திகள் 4 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. மேலும், அபராதம் விதிக்கப்பட்டது மாணவிக்கு அல்ல , 2-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கே.
2015 அக்டோபரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு 2019-ம் ஆண்டு அக்டோபரில் நடவடிக்கை எடுக்க சொல்லி தவறாக பகிர்ந்து வருகின்றனர்.
தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்க்க நினைக்கும் பெற்றோர்கள் அப்பள்ளியில் இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து அறிந்து இருப்பது நல்லது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.