இலங்கை தமிழர்களுக்கு 120 கோடி மதிப்பில் 2400 வீடுகள் வழங்கப்பட்டதா ?

பரவிய செய்தி
இலங்கையில் 120 கோடி மதிப்பில் உருவான 2,400 வீடுகளை தமிழ் முறைப்படி கிரகப்பிரவேசம் செய்து தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் வீடுகளை கட்டி வழங்கும் திட்டத்தின் மூலம் புதிதாக கட்டப்பட்ட முதல் மாதிரி கிராமம் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது.
ரூ.120 கோடி பங்களிப்பில் உருவாகும் 2400 வீடுகள் கொண்ட 100 மாதிரி கிராமத்தில் திறக்கப்பட்ட முதல் கிராமத்தில் முழுமையாக கட்டப்பட்ட வீடுகள் மக்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.
விளக்கம்
2009-ல் இலங்கையில் நடைபெற்ற ஈழப் போருக்கு பிறகு தங்களின் இருப்பிடங்கள், உடைமைகள் இழந்த தமிழ் மக்கள் ஏராளமானோர் சொந்த நாட்டிலேயே மக்கள் புலம் பெயர்ந்து வாழத் துவங்கினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் வீடுகளை கட்டி வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.
2010-ல் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு 50,000 வீடுகளை கட்டி தரும் Indian Housing project-ஐ அறிவித்தனர். அதன் அப்படையில், 40,000 வீடுகள் புத்துணர்வுடன் கட்டப்பட்டன. அதேபோல் சேதமடைந்த 1000 வீடுகள் சரி செய்து வழங்கப்பட்டன.
அதன் பிறகு மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, 2020-க்குள் போரில் பாதிக்கப்பட்ட மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசால் 60,000 வீடுகள் கட்டி வழங்கும் திட்டம் 2015-ல் உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க : இலங்கை தமிழர்களுக்கு 27,000 வீடுகள் கட்டி கொடுத்தவரா மோடி ?
60,000 வீடுகள் வழங்கும் திட்டத்தில் ஒன்றாக ரூ.120 கோடி மதிப்பில் மொத்தம் 2,400 வீடுகளை கொண்ட 100 மாதிரி கிராமங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்படி ராணிதுகமா பகுதியில் உருவாக்கப்பட்ட முதல் மாதிரி கிராமம் திறக்கப்பட்டு உள்ளது.
ராணிதுகமாவில் முதல் மாதிரி கிராமத்தை இலங்கையின் வீட்டு வசதி மற்றும் கலாச்சாரத் துறையின் அமைச்சர் சஞ்சித் பிரேமதாஸா, முன்னாள் குடியரசுத்தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஹை கமிஷனர் ஆப் இந்தியா ஷில்பாக் அம்புலே ஆகியோர் ஒன்றாக இணைந்து திறந்து வைத்தனர்.
திட்டத்தின்படி திறந்து வைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக இலங்கை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இலங்கையில் கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட வளர்ச்சித் தொடர்பான 70-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு இந்தியா உதவி வருவது குறிப்பிடத்தக்கது.