இரயில் நடைமேடை அருகே நின்றவரின் செல்போன் மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி

இரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருக்கும் போது செல்போன் மூலமாக மின்சாரம் இழுக்கப்பட்டு உயிர் சேதம். ஆகவே நடைமேடையில் மஞ்சள் நிற கோட்டிற்கு அருகில் செல்ல வேண்டாம்.

மதிப்பீடு

விளக்கம்

இரயில் நிலையத்தின் நடைமேடையில் இருவர் நின்று பேசிக் கொண்டிருக்கையில் திடீரென ஒருவரின் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்படும் காட்சி அடங்கிய 1 நிமிட சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், நடைமேடை அருகே செல்போன் பயன்படுத்தியதால் மின்சாரம் இழுக்கப்பட்டதாகவும், எனவே நடைமேடையில் மஞ்சள் நிற கோட்டிற்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்து பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ?

வைரல் வீடியோ குறித்து தேடுகையில், மேற்கு வங்க மாநிலத்தின் கரக்பூர் இரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரின் மீது மின்சாரம் தாக்கியதாக டிசம்பர் 13ம் தேதி இந்தியா டுடே உள்ளிட்ட முன்னணி செய்தி சேனல்களில் வெளியாகி இருக்கிறது.

டிசம்பர் 9ம் தேதி டைம்ஸ் நவ் செய்தி இணையதளத்தில் வெளியான செய்தியில், ” கரக்பூர் இரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் மீது மின்கம்பி விழுந்ததாக ” குறிப்பிடப்பட்டு உள்ளது.

Twitter link| Archive link 

டிசம்பர் 8ம் தேதி இரயில்வே அதிகாரி ஆனந்த் ரூபனகுடி என்பவரின் ட்விட்டர் பதிவில், ” இது ஒரு வினோதமான  விபத்து. ஒரு நீளமான தளர்ந்த கேபிள் ஆனது எப்படியோ பறவை ஒன்றால் OHE வயருடன் தொடர்பு ஏற்பட்டு, மறுமுனை கீழே வந்து டிக்கெட் பரிசோதகர் தலையில் விழுந்துள்ளது. அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளன. ஆனால் ஆபத்தில்லை, அவர்  சிகிச்சையில் உள்ளார் ” எனக் கூறி இருக்கிறார்.

முடிவு : 

நம் தேடலில், இரயில் நிலைய நடைமேடையில் செல்போன் மூலம் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்ததாகப் பரப்பப்படும் தகவல் தவறானது. பரப்பப்படும் வீடியோவில் டிக்கெட் பரிசோதகர் மீது மின்சார கம்பி விழுந்து பாதிக்கப்பட்டு இருக்கிறார், செல்போன் மூலம் மின்சாரம் பாயவில்லை என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader