1300 ஆண்டுகளாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலையா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

1,300 ஆண்டுகளாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை. அறிவியலை மிஞ்சிய ஆன்மீகம்.

மதிப்பீடு

விளக்கம்

ஆன்மீகம் சார்ந்த பதிவுகளில் அறிவியலை மிஞ்சிய ஆன்மிகம் என்ற வார்த்தையை நிச்சயம் உங்களால் பார்க்க முடியும். இதற்கு முன்பாக திருநள்ளார் சனி பகவான் கோவிலை செயற்கைக்கோள் கடக்க முடியாமல் ஸ்தமித்தது, நாசா வியந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பதிவுகளிலும் அறிவியலை ஆன்மிகம் மிஞ்சியதாக கூறியதை கண்டிருப்போம். எனினும், அந்த செய்திகளை வதந்திகள் என நிரூபித்து இருந்தோம்.

Advertisement

சமீபத்தில், ” 1300 ஆண்டுகளாக நீரில் மிதக்கும் விஷ்ணுவின் சிலை – அறிவியலை மிஞ்சிய ஆன்மிகம் ” என்ற தலைப்பிலான பதிவுகளை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிகம் பதிவாகி இருந்ததை காண முடிந்தது.

இந்த செய்தி எங்கெல்லாம் பரவி இருக்கிறது என தேடுகையில் செய்தி இணையதளமான தமிழ் சமயம் இனையதளத்தின் ஆன்மிகம் பிரிவில் வெளியாகி இருந்தது.

Advertisement

Website link | Archived link 

இதையடுத்து, செய்தியின் ஆரம்பம் எங்கிருந்து என்பதை அறிய முற்பட்ட பொழுது 2017-ல் டிசம்பர் 21-ம் தேதி ஆன்மிகம் எனும் இணையதளத்தில் நீரில் மிதப்பதாக கூறப்படும் விஷ்ணு சிலை குறித்த செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று சமூக ஊடகங்களில் பரவ காரணமாகியுள்ளது.

இணையத்தில் வைரலாகிய நீரில் மிதக்கும் விஷ்ணு சிலையின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம். நேபாளம் தலைநகரான காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் சிவபுரி மலையின் அருகில் இருக்கிறது புத்தானிகந்தா கோவில். இந்த கோவிலில் இருக்கும் விஷ்ணு சிலை பாற்கடலில் ஆதிசேஷன் மேல் படுத்துக் கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

சுமார் 14 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட விஷ்ணு சிலையின் கைகளில் சங்கு மற்றும் சக்கரம் இருப்பதை காணலாம். சிலையை சுற்றி குளத்தை போன்று உருவாக்கி, அதனுள் நீரை நிரப்பி உள்ளனர். மேலே இருந்து பார்க்கும் பொழுது விஷ்ணு சிலையானது நீரில் மிதப்பது போன்று அமைத்து இருப்பர். 7-ம் நூற்றாண்டில் லிச்சாவி சிற்பிகள் காலத்தில் வடிவமைக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.

உண்மையில் விஷ்ணு சிலையானது நீரில் 13 நூற்றாண்டுகளாக மிதக்கிறதா என தேடினோம். பெரும்பாலான தமிழ் பதிவுகளில் அப்படி இருப்பதை காண முடிந்தது. சிலையின் புகைப்படத்தை வைத்து தேடுகையில் Hiking Himalayas Treks and Expedition என்ற இணையதளத்தில் காட்மாண்டுவில் உள்ள கோவில்கள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டு இருந்தது.

அதில், புத்தானிகந்தா கோவில் சிலையும் இடம்பெற்று இருந்தது. குளத்தில் நீரில் இல்லாமல் விஷ்ணு சிலை தரையில் இருப்பதை தெளிவாய் காண முடிந்தது. சிலைக்கு அடியில் கற்கள் வைத்து சிலை நிறுவப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம். குளத்தில் நீர் வெளியேறவும், நிரப்பவும் வழிகள் உள்ளன.

முடிவு :

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் படி, காட்மாண்டுவில் பழமையான புத்தானிகந்தா கோவிலில் விஷ்ணு சிலை இருப்பது உண்மை. ஆனால், 1,300 ஆண்டுகளாக விஷ்ணு சிலையானது நீரில் மிதக்கிறது, அறிவியலை மிஞ்சிய ஆன்மீகம் எனக் கூறுவதெல்லாம் கட்டுக்கதையே. ஆன்மீகம் சார்ந்த சமூக வலைதள பதிவுகளை பகிர்வதற்கு முன்பாக அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளுங்கள்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button