ஃபோர்டு கார் தொழிற்சாலை உற்பத்தியை நிறுத்த திமுக அரசு காரணமா ?.. அப்போ குஜராத்தில் ?

பரவிய செய்தி

இந்த விடியல் ஆட்சியில் இது போன்ற இன்னும் எத்தனை தொழிற்சாலைகளுக்கு மூடு விழா நடத்த போரார்களா தெரியவில்லை…

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலை தனது கடைசி காரை உற்பத்தி செய்து முடித்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த சென்னை ஃபோர்டு தொழிற்சாலை ஜூலை 31-ம் தேதி மூடப்படுகிறது என செய்தி ஊடகங்களில் வெளியாகியது.

இந்த செய்தி பரவத் தொடங்கிய பிறகு, திமுக ஆட்சியில் இன்னும் இதுபோன்று எத்தனை தொழிற்சாலைகள் மூடப் போகிறதோ என தமிழக பாஜகவின் நிர்மல் குமார் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் அப்பதிவை பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மை என்ன ?

பாஜகவினர் கூற்றுப்படி பார்த்தால், ஃபோர்டு நிறுவனம் சென்னை மறைமலை நகரில் உள்ள ஆலையில் மட்டும் உற்பத்தியை நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால், அந்த நிறுவனம்  குஜராத்தில் உள்ள மற்றொரு ஆலையிலும் உற்பத்தியை நிறுத்தி உள்ளது. கடந்த ஆண்டே ஃபோர்டு இந்தியா நிறுவனம், சென்னை மற்றும் சனந்த் ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்தது.

Twitter link

2021-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி ஃபோர்டு இந்தியா வெளியிட்ட அறிவிப்பில், ” ஃபோர்டு நிறுவனம் தனது இந்திய செயல்பாடுகளை மறுகட்டமைப்பு செய்கிறது : சென்னை மற்றும் சனந்தில் செயல்பட்டு வரும் வாகன உற்பத்தியை நிறுத்துகிறது. 2021ன் நான்காம் காலாண்டில், ஏற்றுமதி செய்ய சனந்தில் நடைபெறும் கார் உற்பத்தி நிறுத்தப்படும் மற்றும் 2022-ன் இரண்டாம் காலாண்டில் சென்னையில் உள்ள வாகன இன்ஜின்/அசெம்பிளி ஆலையானது நிறுத்தப்படும். ஏற்றுமதிக்காக இன்ஜின் உற்பத்தி தொடரும் ” எனத் தெரிவித்து இருந்தது.

விற்பனை குறைவு மற்றும் கொரோனா காலம் என தொடர் பாதிப்பில் சிக்கி இருந்த ஃபோர்டு நிறுவனம் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள இரு தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தி உள்ளது. எனினும், வாடிக்கையாளர்களுக்காக ஃபோர்டு கார்கள் இறக்குமதி செய்யப்படும் எனத் தெரிவித்து இருந்தது.

இதையடுத்து, 2022 மே மாதம் ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத் சனந்த் ஆலையை டாடா மோட்டார் நிறுவனம் வாங்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்தது.

முடிவு :

நம் தேடலில், சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலை மட்டும் மூடப்படவில்லை, குஜராத்தில் உள்ள மற்றொரு ஆலையிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது. ஆனால், திமுக அரசின் காரணமாக தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மூடப்பட்டு உள்ளதாக தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader