2ஜி விவகாரம்: முன்னாள் சிஏஜி வினோத் ராய் மன்னிப்பு கேட்டது எதற்காக ?

பரவிய செய்தி
2ஜி சம்பந்தமாக நான் சொன்னது அனைத்தும் பொய். டெல்லி உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய முன்னாள் சிஏஜி வினோத் ராய்.
மதிப்பீடு
விளக்கம்
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை உரிமங்களை மிகக் குறைவான உரிமைக் கட்டணங்களுக்கு விற்றதால் அரசாங்கத்துக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக ஒரு தணிக்கை அறிக்கை வெளியாகியது. இந்திய அரசியலில் 2ஜி அலைக்கற்றை தாக்கத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்தவர் வினோத் ராய்.
இதுதொடர்பான வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் திகார் சிறைக்கு சென்றனர். ஆனால், டிசம்பர் 21, 2017-ல் சி.பி.ஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனீ, ” வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் விடுதலை என்று ஒரே வரியில் தீர்ப்பளித்தார். தீர்ப்பிற்கு பிறகு நீதிபதி சைனீ, 2ஜி வழக்கில் சி.பி.ஐ தரப்பானது தகுந்த ஆதாரங்களை சமர்பிக்கவில்லை. சி.பி.ஐ குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது. கடந்த இத்தனை வருடங்களாக வழக்கு தொடர்பாக தகுந்த ஆதாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்ததாகவும் ” கூறி இருந்தார். எனினும், இந்த வழக்கில் மேல் முறையீடு மேற்கொள்ளப்பட்டது.
அக்டோபர் 28-ம் தேதி கலைஞர் செய்தியில், ” 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறான கருத்துகளை வெளியிட்டதற்காக டெல்லி நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராய்! ” என வெளியிட்ட நியூஸ் கார்டை பயன்படுத்தி மீம்ஸ் மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால், 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சொன்னது அனைத்தும் பொய் என வினோத் ராய் கூறியதாக மீம்ஸ் மற்றும் கனிமொழி மற்றும் ஆ.ராசா குறித்த பதிவுகளும் திமுகவினரால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
2014-ம் ஆண்டு செப்டம்பரில் டைம்ஸ் ஆப் இந்தியா சேனலில் அர்னாப் கோஸ்வாமிக்கு வினோத் ராய் அளித்த பேட்டியின் போது, ” 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தமது தணிக்கை அறிக்கையில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பெயர் இடம் பெறாமல் இருக்க காங்கிரஸ் எம்.பிக்கள் சஞ்சய் நிரூபம், சந்தீப், அஸ்வானி உள்ளிட்டோர் நெருக்கடி கொடுத்ததாக ” தெரிவித்து இருந்தார்.
வினோத் ராயின் பேச்சை எதிர்த்து சஞ்சய் நிரூபம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் வினோத் ராய் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு எழுத்து மூலமாக சமர்ப்பித்த வாக்குமூலத்தை ட்விட்டரில் சஞ்சய் நிரூபம் பகிர்ந்து இருக்கிறார்.
Finally former CAG Vinod Rai tendered an unconditional apology to me in a defamation case filed by me in MM Court, Patiyala house, New Delhi today.
He must apologize to the nation now for all his forged reports about 2G and Coal block allocations done by the UPA Govt.#VinodRai pic.twitter.com/OdxwZXonCq— Sanjay Nirupam (@sanjaynirupam) October 28, 2021
