முன்னாள் குடியரசுத்தலைவர் பக்ருதீன் குடும்பம் அகதிகள் முகாமில் உள்ளார்களா ?| புகைப்படம் உண்மையா ?

பரவிய செய்தி
முன்னாள் குடியரசுத்தலைவர் பக்ருதீன் குடும்பம் வாழும் நிலையை பாருங்கள் ! அகதி முகாமில் அடைப்பட்டு உள்ளார்கள்.
மதிப்பீடு
விளக்கம்
தேடிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் அசாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பொழுது என்ஆர்சி பட்டியலில்19 லட்சம் பெயர்கள் விடுபட்டது நாடு முழுவதிலும் பெரிதாய் பேசப்பட்டது. அவ்வாறு பட்டியலில் விடுபட்ட பெயர்களில் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி குடும்பத்தினர் பெயர்களும் விடுபட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியது.
என்ஆர்சி பட்டியலில் பெயர் விடுபட்ட காரணத்தினால் பக்ருதீன் அலி குடும்பத்தினர் அகதிகள் முகாமில் வாழும் நிலையை பாருங்கள் என Mohmed Meeran Saleem என்ற முகநூல் பக்கத்தில் வெளியான புகைப்படம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் வீடுகள் இழந்த நிலையில் தற்காலிக கூடாரம் அமைத்து இருப்பவர்களின் அருகே வயதான முஸ்லீம் ஒருவர் அமர்ந்து இருக்கிறார். இதைப் பார்க்கையில், அங்குள்ளவர்களை நலம் விசாரிக்கவோ அல்லது மேற்பார்வையிடவோ வந்தது போல் உள்ளது.
இதையடுத்து, அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் கடத்த 2019 டிசம்பர் மாதம் தி குய்ண்ட் இணையதளத்தில் ” 426 Families evicted in assam , bjp mla claim they are bangladeshi ” எனும் தலைப்பில் வெளியான செய்தி கிடைத்தது.
2019 டிசம்பர் 5 மற்றும் 6-ம் தேதி அசாம் மாநிலத்தின் சோட்டியா சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 450 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதற்கு காரணம், அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் என அரபு செய்தியில் வெளியாகி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்கள். அங்கிருந்து அவர்கள் பிற பகுதிகளுக்கு சென்று தற்காலிக கூடாரங்கள் அமைந்து தங்கி உள்ளனர்.
பெரும்பாலான முஸ்லீம் குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்ட காரணத்தினால் ஜமாத்-இ-இஸ்லாமி-ஹிந்த் (JIH) அமைப்பினர் அப்புறப்படுத்தப்பட்ட மக்களின் நிலைய குறித்து கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போழுது, ஜமாத்-இ-இஸ்லாமி-ஹிந்த் அமைப்பின் தேசிய செயலாளர் மொஹமத் அஹமத் மக்களை நேரில் பார்வையிட்டதாக வைரலாகும் புகைப்படம் Indiatomorrow.net என்ற இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
சோட்டியா பகுதியின் எம்எல்ஏ கூறுகையில், ” அவர்கள் அனைவரும் ஆக்கிரமிப்புக்காரர்கள் மற்றும் பங்களாதேஷிகள், எனவே அவர்களை இங்கே தங்க அனுமதிக்கமாட்டோம் ” என்றுள்ளார்.
ஒருபுறம் அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் என்ஆர்சி பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் என குற்றச்சாட்டும், மறுபுறம் அவர்களிடம் இந்திய குடிமக்கள் என ஆதாரங்கள் இருப்பதாகவும் கண்டனம் எழுந்தது. ஆனால், இது தொடர்பாக அப்பகுதியின் மாவட்ட ஆணையர் சிங் கூறுகையில், அவர்கள் அனைவரும் இந்திய குடிமக்களாக அல்லது இல்லாமல் இருக்கலாம் அது முக்கியமில்லை. அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்ததால் தான் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளார்கள் எனத் தெரிவித்து உள்ளதாக தி குய்ண்ட் வெளியிட்டு உள்ளது.
Assam:Names of family members of 5th President of India Fakhruddin Ali Ahmed missing from #NRCList. SA Ahmed,nephew of Fakhruddin,in Kamrup says,“Names of 4 family members missing from NRC list.We’ll go to authorities after 7 Sept&follow the process to get names included in list” pic.twitter.com/lc4Acq0N2u
— ANI (@ANI) September 1, 2019
2019 செப்டம்பர் 1-ம் தேதி ஏஎன்ஐ நியூஸ் வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் 5-வது குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அஹமத் குடும்பத்தினரின் பெயர்கள் என்ஆர்சி பட்டியலில் விடுபட்டுள்ளது. பக்ருதீன் அலி உறவினர் எஸ்ஏ அஹமத் கூறுகையில், என்ஆர்சி பட்டியலில் குடும்ப உறுப்பினர்கள் 4 பேரின் பெயர்கள் இல்லை. செப்டம்பர் 7-க்கு பிறகு அதிகாரிகளை சந்திக்க செல்ல உள்ளோம் மற்றும் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான நடைமுறையை பின்தொடர உள்ளதாக ” வெளியாகி உள்ளது.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, முன்னாள் குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அஹமத் உறவினர் குடும்பத்தினரின் பெயர்கள் என்ஆர்சி பட்டியலில் விடுபட்டது உண்மை. ஆனால், அவர்கள் அகதிகள் முகாமில் அடைக்கப்படவில்லை.
முன்னாள் குடியரசுத்தலைவர் பக்ருதீன் குடும்பத்தினர் நிலை என வைரல் செய்யப்படும் புகைப்படம் அசாம் மாநிலத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தங்கி இருந்ததாக கூறி அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்ட மக்களை ஜமாத்-இ-இஸ்லாமி-ஹிந்த் அமைப்பின் தேசிய செயலாளர் மொஹமத் அஹமத் சந்தித்த பொழுது எடுக்கப்பட்டது. தவறான செய்திகளை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.