ஆவினின் ஊதா நிற செறிவூட்டப்பட்ட பால் விஷத்தன்மை கொண்டது எனப் பரப்பப்படும் வதந்திகள் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
ஆவின் நிறுவனம் சார்பில், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (Double Toned Milk) மெஜந்தா நிறத்திலும், சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) நீல நிறத்திலும், நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardised Milk) பச்சை நிறத்திலும், கொழுப்புச் சத்து நிறைந்த பால் (Full Cream Milk) ஆரஞ்சு நிறத்திலும் என்று மக்களுக்கு இதுவரை விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் புதிய பால் வகைகள் மற்றும் பால் பொருட்கள் ஆவினில் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இது செறிவூட்டப்பட்ட பசும்பால் என்ற புதிய பால் வகையாக ஆவின் நிறுவனத்தால் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி கலவையுடன் ஊதா நிற பாக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் அரை லிட்டர் பாலின் விலை, பால் அட்டைதாரர்களுக்கு 21 ரூ என்றும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையாக (M.R.P.) மற்றவர்களுக்கு 22 ரூ என்றும் விற்கப்படுகிறது. மேலும் இதில் Fat மற்றும் S.N.F.-ன் அளவுகள் முறையே 3.5% மற்றும் 8.5 % என்ற விகிதத்தில் உள்ளது. இதன் மூலம் இவை, ஏற்கனவே இருந்த நிலைப்படுத்தப்பட்ட பால் வகையான (Standardised Milk) பச்சை நிற பால் பாக்கெட்டின் விலையிலேயே விற்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.
இந்நிலையில் இந்த ஊதா நிற பாக்கெட்டில் விஷத்தன்மை உள்ளது என்றும், மக்களுக்கு வைட்டமின் D மற்றும் வைட்டமின் A குறைபாடு இருந்தால் மட்டுமே இவற்றை சேர்க்க வேண்டும், ஆனால் இவர்கள் வாழ்நாள் முழுவதும் வைட்டமின் D மற்றும் வைட்டமின் A கலந்த பாலை குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்பது போன்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.
Poison in a purple packet! pic.twitter.com/zHIym49zgX
— வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) (@vennilaVT) May 10, 2023
உண்மை என்ன?
பாலைப் பதப்படுத்துதல் (Pasteurization) முறை என்பது பாலில் உள்ள நுண்கிருமிகளை அழிக்க பயன்படுத்தும் முறையாகும். இதன் மூலம் பாலில் பாக்டீரியா போன்றவை நுழைவதைத் தடுக்கலாம். அதே போன்று Homogenization முறை என்பது அதிக அழுத்தத்தைப் பயன்படுத்தி பாலில் உள்ள கொழுப்பு மேலே குடியேறாது கலக்கும் செயல்முறையாகும். இந்த முறைகளே இதுவரை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆவின் பாலில் Fortification (செறிவூட்டம்) என்னும் முறையை நேற்று அறிமுகப்படுத்தி வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி கலவையுடன் செறிவூட்டப்பட்ட பசும்பால் என்ற ஊதா பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஊதா பால் பாக்கெட் வகையோடு தற்போது உள்ள மொத்த பால் வகைகளின் விலை விபரங்களையும் அதில் அடங்கியுள்ள Fat மற்றும் S.N.F.-ன் அளவுகளையும் கீழேக் காணலாம்.
எனவே இந்த செறிவூட்டப்பட்ட பசும்பால் குறித்தும், இவ்வாறு செறிவூட்டப்படுவதால் இவை விஷத்தன்மைகள் கொண்டதாக மாறிவிடுமா என்பது குறித்தும் பொது நல மருத்துவரான பிரவீன் அவர்களிடம் யூடர்ன் தரப்பிலிருந்து கேட்ட பொழுது, “பொதுவாக Fortification என்னும் செயல்முறை எண்ணெய், பால், உப்பு போன்ற பல உணவு பொருட்களில் செயல்படுத்தப்படுகிறது.
உதாரணமாக உப்பை எடுத்துக் கொண்டால் சோடியம் மற்றும் குளோரைடு மட்டுமே அதில் இருக்கும். அயோடின் குறைபாடு மக்களுக்கு பெரும்பான்மையாக இருந்து வருகிறது. எனவே அயோடினை தனியாக கொடுத்தால் மக்கள் சாப்பிட மாட்டார்கள். இலவசமாக கொடுத்தால் கூட சாப்பிட மாட்டார்கள். அதனால் தான் உப்பில் செறிவூட்டல் செய்யப்பட்டு அயோடின் கலந்த உப்பு மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. எனவே இது போன்று தான் பாலிலும் வைட்டமின் D மற்றும் வைட்டமின் A செறிவூட்டல் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உணவில் இல்லாத ஒரு சத்துப் பொருள் செறிவூட்டல் செய்யப்பட்டு சேர்க்கப்படுகிறது.” என்றார்.
மேலும் சமூக வலைதளங்களில் பரவி வரும் பதிவுகளில் மக்களுக்கு வைட்டமின் D மற்றும் வைட்டமின் A குறைபாடு இருந்தால் மட்டும் தான் கொடுக்க வேண்டும். ஆனால் இவர்கள் வாழ்நாள் முழுதும் குடிக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்கள். பொதுவாக ஒவ்வொரு மனிதருக்கும் ஒருநாளைக்கு இவ்வளவு ஊட்டச்சத்து எடுக்க வேண்டும் என்று ஒரு அளவு உள்ளது. அதை RDA (Recommended Dietary Allowance) என்று சொல்வார்கள். அதாவது ஒரு நாளைக்கு இவ்வளவு அளவு எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது குழந்தைகளுக்கு இவ்வளவு, வயது வந்தவர்களுக்கு இவ்வளவு என்று மாறுபடும். இதில் குறிப்பிட்டுள்ள எல்லா சத்துகளையும் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் Fortification Process-இல் RDA வில் உள்ள மொத்த ஊட்டச் சத்துகளையும் சேர்க்க மாட்டார்கள். RDA அளவு படி வைட்டமின் ஏ ஒரு நாளைக்கு 700 to 900 ug எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த ஊதா நிற செறிவூட்டப்பட்ட பசும்பாலில் 27 ug (100 மில்லி லிட்டருக்கு) சேர்த்துள்ளார்கள். இதே போன்று வைட்டமின் டி ஆனது 70 வயதுக்குட்பட்டவர்களுக்கு 15 mcg அளவு இருக்க வேண்டும். இதில் 0.5 ug (100 மில்லி லிட்டருக்கு) அளவே உள்ளது. இதனால் தேவையான அளவை மீறி போவது கிடையாது. இதுபோக மீதம் தேவைப்படும் ஊட்டச்சத்துகளை நாம் மற்ற உணவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே இந்த செறியூட்டப்பட்ட பாலை குழந்தைகள் முதல் அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் எந்த விஷத்தன்மையும் ஏற்படுவது இல்லை” என்றார்.
மேலும் இது தொடர்பான பாதிப்புகள் குறித்து, மரபியல் துறை ஆராய்ச்சியாளர் முனைவர் தேவி அவர்களிடம் கேட்ட போது, “பொதுவாகவே ஒரு அரசின் கடமை என்னவென்றால், மக்களுக்கு வரும் சிறியளவு ஊட்டச்சத்து குறைபாடுகளைக்(Micron Nutrient Deficiency) கூட கணக்கிட்டு, அதை எவ்வாறு சரி செய்வது என்று பார்ப்பார்கள். அதற்கு உதாரணமான செயல் தான் உப்பில் அயோடினைக் கலந்து மக்களுக்கு விற்பனை செய்தது. அதே போன்று தான் தற்போது வைட்டமின் டி குறைபாடு (Vitamin D deficiency), போலிக் ஆசிட் குறைபாடு (Folic Acid Deficiency) என்பதையெல்லாம் ஆராய்ந்து, நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவோடு Micron Nutrient-யையோ, வைட்டமின்களையோ சேர்த்துக் கொடுப்பார்கள்.
சமீபகாலமாக வைட்டமின் டி குறைபாடு இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. யாரும் அதிகமாக சூரிய ஒளியை எடுத்துக் கொள்வதில்லை. அதுக்கான ஒரு சிறந்த வழிமுறை தான் ஆவினின் இந்த திட்டம். இது வரவேற்கத்தக்கது.” என்றார்.
மேலும் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஏ பாலில் சேர்ப்பது பற்றியும், வைட்டமின் டி ஏன் முக்கியம் என்றும் அவரிடம் கேள்வி எழுப்பிய போது. “கால்சியம் சத்தை உடல் கிரகித்துக் கொள்வதற்கு வைட்டமின் டி அவசியமானது. இந்த வைட்டமின் டி பற்றாக்குறையினால் எலும்பு சார்ந்த நோய்கள் மட்டுமன்றி அயற்சி, சோர்வு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, மனநல ஆரோக்கியமின்மை முதலான பல உடல் நலக்கோளாறுகள் உண்டாகும்.
இதுமட்டுமின்றி 2021ல் நடத்தப்பட்ட Meta-analysis ஆய்வு முடிவின் படி (பங்குபெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை: 38672) ஏறத்தாழ 67சதவீதம் பேர் வைட்டமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
மேலும் 2022-ல் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வறிக்கையின் படி, தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 14.3% பேர் வைட்டமின் டி குறைபாட்டுடனும் (deficiency – ரத்தத்தில் 20ng/ml க்கும் குறைவான வைட்டமின் டி இருப்பது), 42.1% பேர் வைட்டமின் டி பற்றாக்குறையுடனும் (insufficiency – ரத்தத்தில் 20ng/ml ~ 30ng/ml அளவு வைட்டமின் டி இருப்பது) இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வில் மிகக் குறைவான நபர்களே பங்கு கொண்டனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.” என்றார்.
மேலும் இந்த புதிய வகை செறிவூட்டப்பட்ட பசும்பால் குறித்தும், இது தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டுவிட்டதா என்பது குறித்தும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி அவர்களிடம் பேசிய போது, இந்த செறிவூட்டப்பட்ட பால் சென்னைக்கு வருவதற்கு முன்பே கோவையில் கடந்த பிப்ரவரியிலும், தூத்துக்குடியில் கடந்த மார்ச்சிலும் ஆவின் பசும்பால் என்று வந்துவிட்டது.
மேலும் இவை கோயம்பத்தூரில் பச்சை பாக்கெட் நிறத்திலேயே இருக்கிறது. நெல்லை தூத்துக்குடியில் ஆரஞ்சு நிற பாக்கெட்டிலும், சிவகங்கை, விழுப்புரத்தில் மஞ்சளிலும் விற்றதை, தற்போது சென்னையில் ஊதா நிறமாக மாற்றியிருக்கிறார்கள். எனவே அதை இப்போது செறிவூட்டப்பட்ட பால் என்று மாற்றி மார்க்கெட் செய்கிறார்கள். விலை அதே பச்சைப் பால் பாக்கெட்டின் விலை தான். மேலும் பச்சை பாலில் இருக்கும் 4.5% Fat இல் இருந்து 1 சதவீதத்தைக் குறைத்து 3.5% Fat என்று ஊதா பாக்கெட்டில் செறிவூட்டப்பட்ட பசும்பால் என்று மார்கெட் செய்து வழங்குகிறார்கள்.” என்றார்.
மேலும் அவரிடம் மக்களிடம் எந்த அளவு இந்த பாலுக்கு வரவேற்பு இருக்கிறது என்ற கேள்விக்கு, “மக்களிடம் வரவேற்பே இல்லை. பச்சை கலர் ஆவின் பால் பக்கெட்டை இவர்கள் நிறுத்த போகிறார்கள். அதனால் தான் இதை கொண்டு வந்திருகிறார்கள். இரண்டு நாளாக நாங்கள் வாங்கி வைத்த ஊதா பால் பாக்கெட்டுகள் அனைத்தும் அப்படியே இருக்கிறது. எங்கும் விற்கவில்லை. முகவர்களுக்கு இழப்பாக இருக்கிறது. இது தொடர்பாக நாளை நாங்கள் அமைச்சரை சந்தித்து பேச இருக்கிறோம்.” என்றும் தனது குற்றச்சாட்டை முன் வைத்தார்.
முடிவு:
நம் தேடலில், ஆவினின் ஊதா நிற செறிவூட்டப்பட்ட பால் பாக்கெட் விஷத்தன்மை கொண்டது என சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை. சராசரியாக, ஒரு மனிதனுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி-யின் மொத்த சதவீதத்தில் குறிப்பிட்ட அளவே (100 மில்லி லிட்டர் பாலில் 27 ug மற்றும் 0.5ug) கொண்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.