ஆடு மேய்த்த பெண் பிரான்ஸ் நாட்டின் கல்வித்துறை அமைச்சரா ?

பரவிய செய்தி
ஒரு காலத்தில் ஆடு மேய்பவராக இருந்த நஜத் வள்ளட்-பெல்காசெம் என்ற பெண் தற்போது பிரான்ஸ் நாட்டின் கல்வித்துறை அமைச்சராகி உள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
பிரான்ஸ் நாட்டின் கல்வி அமைச்சருக்கும், ஆடு மேய்பவராக காண்பிக்கப்பட்ட குழந்தைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அப்படமானது 2015 ஆம் ஆண்டில் யுனிஃசெப்பின் குழந்தைத் தொழிலாளர் பற்றிய கட்டுரைக்காக எடுக்கப்பட்ட புகைப்படம்.
விளக்கம்
மொரோக்கோ நாட்டில் ஆடுகள் மேய்த்து வந்த நஜத் வள்ளட்-பெல்காசெம் என்ற சிறுமி தற்போது பிரான்ஸ் நாட்டின் கல்வித்துறை அமைச்சர் ஆக உயர்ந்துள்ளார். தன்னமிக்கையும், விட முயற்சியும் இருந்தால் எத்தகைய உயரத்திக்கெல்லாம் செல்லலாம் என்பதற்கு இப்பெண்னே உதாரணம் என்று இந்தியாவின் ஊடகங்களிலும், இணையங்களிலும், சமுக வலைதளங்களிலும் செய்திகளும், படங்களுமாக அதிகளவில் பேசப்பட்டன.
இந்திய ஊடகங்களில் பேசப்பட்டதால் இப்படங்களையும், செய்திகளையும் உண்மையென்று நினைத்து அனைவரும் பகிரத் தொடங்கினர். பல ஆண்டுகளாக இப்படங்கள் இணையங்களில் தொடர்ந்து வலம் வருகிறது.
எனினும், இச்செய்திகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பது நம்மில் பலரும் அறியாததே.!
ஆம், ஆடு மேய்பவராகக் காண்பிக்கப்பட்ட பெண்ணிற்கும், பிரான்ஸ் நாட்டின் கல்வி அமைச்சர் நஜத் வள்ளட்-பெல்காசெம்-க்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பிரான்சின் கல்வி அமைச்சர் நஜத் வள்ளட்-பெல்காசெம் மொரோக்கோவில் அக்டோபர் 4, 1977-ல் பிறந்தார். தனது குடும்பத்துடன் நான்கு ஆண்டுகள் மட்டுமே அப்பகுதியில் வாழ்ந்து வந்தார். கல்வி அமைச்சர் பற்றி இணையத்தில் தேடினால் ஆடு மேய்க்கும் பெண்ணாக தொடர்புப்படுத்திய செய்திகளே அதிகம் காணக்கூடியதாக இருந்தது.
இது ஒன்றும் முதல் முறை அல்ல என்றும், பல வெளிநாட்டு ஊடகங்களும், வலைதளங்களும் நஜத் வள்ளட்-பெல்காசெம் பற்றிய தவறான செய்திகளை பல ஆண்டுகளாகப் பரவி வருகின்றனர் என்றும் பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இயற்கை வரலாற்றுத் தேசிய அருகாட்சியகத்தில் உரையாற்றிய நஜத் வள்ளட்-பெல்காசெம் வலைதளங்களில் பரப்படும் தனது மீதான வதந்தியை பற்றி எடுத்துக் கூறியுள்ளார்.
நஜத் வள்ளட்-பெல்காசெம் எனக் கூறி பரவிய ஆடு மேய்க்கும் பெண்ணின் படமானது மொரோக்கோவில் கியாகோமோ என்ற புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்டது.
ஃப்யூசியா என்ற எட்டு வயது சிறுமி ஆடு மேய்பவராக பணியாற்றிய போது பல படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு யுனிஃ செப் என்ற வலைதளத்தில் வெளியான “குழந்தைத் தொழிலாளர்கள்” பற்றிய கட்டுரையில் ஆடு மேய்க்கும் பெண்ணின் படங்கள் இடம் பெற்றிருக்கும்.
இதைப் பற்றி முழுமையாக அறியாமல் வெளிநாட்டு மற்றும் இந்திய ஊடகங்களும் தவறானச் செய்திகளை வெளியிட்டதின் விளைவாக சமூக வலைதளங்களிலும் இச்செய்திகள் வைரலாகி வருகிறது.