பிரான்ஸ் அரசு தொழுகை நடத்தும் முஸ்லீம்கள் மீது தண்ணீரை அடித்ததா ?

பரவிய செய்தி
அமைதியான முறையில் தொழுகை நடத்தும் முஸ்லீம்களை தண்ணீர் மற்றும் tear gas உபயோகித்து முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தும் பிரான்ஸ் அரசு. உன்மையில் நாம் போராட வேண்டியது உலக அளவில் உள்ள கிருத்துவ தீவிரவாதிகளுக்கு எதிராகத்தானே தவிர மாட்டு மூளை உள்ள சங்கிகளுக்கு எதிராக அல்ல. சங்கிகள் நமக்கு ஒரு விசயமே அல்ல.
மதிப்பீடு
விளக்கம்
பிரான்ஸ் நாட்டில் ஆசிரியர் ஒருவர் முகமது நபி தொடர்பான கேலிச் சித்திரத்தை மாணவர்களுக்கு காண்பித்த காரணத்திற்காக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை ” இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல் ” என அந்நாட்டு அதிபர் மக்ரோங் தெரிவித்தார். அவரின் கருத்திற்கு பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் தரப்பில் கண்டனங்கள் குவிந்தன. போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமைதியான முறையில் தொழுகை நடத்தும் முஸ்லீம்கள் மீது பிரான்ஸ் நாட்டு அரசு தண்ணீரைப் பாய்ச்சி அடிக்கும் காட்சி என இவ்வீடியோ இந்திய அளவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
இந்திய அளவில் வைரலாகும் வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், துருக்கி மொழியில் வெளியான செய்தியில் யுகசேகோவா எனும் பகுதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு நடைபெற்ற போராட்டத்தின் போது கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீரை பீச்சி அடித்தும் அங்கிருந்த மக்களை போலீசார் கலைத்து உள்ளனர் எனத் தெரிய வந்தது.
2012-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி Yüksekova Haber Portalı எனும் யூடியூப் சேனலில், ” Gaz bombalı ‘sivil Cuma namazı – Yüksekova – Gever ” என்ற தலைப்பில் இவ்வீடியோ வெளியாகி இருந்துள்ளது.
ensonhaber.com எனும் இணையதளத்தில் துருக்கி யுகசேகோவாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தண்ணீர் அடித்து கலைக்கும் புகைப்படங்கள் பல வெளியாகி இருக்கின்றன.
முடிவு :
நம் தேடலில், 8 ஆண்டுகளுக்கு முன்பாக துருக்கியில் தொழுகைக்கு பின்னர் நடைபெற்ற போராட்டத்தின் போது அங்கிருந்த மக்களை தண்ணீரை அடித்து கலைக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை பிரான்ஸ் நாட்டில் தற்போது நிகழ்ந்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள்.