பிரான்ஸ் வன்முறையில் எடுக்கப்பட்டதாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள் !

பரவிய செய்தி
வீடியோ 1 :
பிரான்ஸ் ஒரு தேசியவாத பெண்ணை விட்டு ஒரு மதச்சார்பற்ற லிபரல் மக்ரானை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தது, முடிவைப் பாருங்கள்.
வீடியோ 2 :
பிரான்ஸ் வீழ்ந்தது
வீடியோ 3 :
மதிப்பீடு
விளக்கம்
பிரான்ஸில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி நஹெல் என்ற 17 வயது சிறுவன் கடந்த ஜூன் 27ம் தேதி அந்நாட்டுக் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
கலவரக்காரர்கள் முதலில் அரசு கட்டிடங்களைத் தாக்கி வந்த நிலையில், பின்னர் ஆப்பிள், நைக் போன்ற தனியார் நிறுவனங்களின் கடைகளையும் தாக்கத் தொடங்கினர். போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஆயிரக்கணக்கானோரை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரான்ஸ் கலவரத்துடன் தொடர்புபடுத்தி மூன்று வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதில் ஒரு வீடியோவில் அந்நாட்டில் நடக்கும் வான்வழித் தாக்குதலைக் காட்டுவதாக ‘பிரான்ஸ் எதிர்ப்பு’ என்ற ஹேஷ்டேக்குடன் பரப்பப்படுகிறது.
மற்றொரு வீடியோவில் ஒருவர் துப்பாக்கியால் சுடுவதும், கட்டிடத்தின் மீதிருந்து கார்கள் சாலையில் விழும் வீடியோவைவும் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன :
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டும், முக்கிய வார்த்தைகளைக் கொண்டும் தேடியதில் அவை பழைய வீடியோக்கள் என்பதையும், தற்போது பிரான்சில் நடக்கும் போராட்டத்திற்கும் இந்த வீடியோக்களுக்கும் தொடர்பில்லை என்பதையும் கண்டறிந்தோம்.
உண்மை 1 :
ஒரு கட்டிடத்தின் மேல் இருந்து கார்கள் கீழே விழுந்து நொறுங்கி தீ பிடித்து எரியும் காட்சிகள் கொண்ட கட்டுரை ஒன்று ‘மிரர்’ தளத்தில் 2016ம் ஆண்டு பதிவிடப்பட்டுள்ளது. அதில் ‘Fast and Furious stunt caught on camera’ என்றுள்ளது. அப்படத்தின் காட்சிகள் ஓஹியோவின் கிளீவ்லேண்ட் எனும் பகுதியில் படப்பிடிப்பின் போது யாரோ ஒரு ரசிகர் அதனை வீடியோ எடுத்துள்ளார்.
அக்காட்சிகள் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 8ன் காட்சிகள் எனக் குறிப்பிடும் பல யூடியூப் வீடியோக்கள் காணப்படுகின்றன. 2016, ஜூன் மாதம் ‘El San’ எனும் யூடியூப் பக்கத்திலும் அக்காட்சி பதிவிடப்பட்டுள்ளது. அதேபோல் கட்டடத்தின் மேல் இருந்து கார்கள் விழும் காட்சி, திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பகுதி 2017, ஜூலை மாதம் ‘Movieclips’ யூடியூபில் பதிவிடப்பட்டுள்ளது.
உண்மை 2 :
பிரான்சில் ஈபிள் டவர் அருகே வான்வழித் தாக்குதல் எனக் கூறப்படும் வீடியோ, ஒரு வருடத்திற்கு முன்பு ‘Independent’ இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. அது ‘Deep Fake’ வீடியோ என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வீடியோவை 2022, மார்ச் மாதம் ‘Al Jazeera’ என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதன் நிலைத் தகவலில் ‘உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம், பாரிஸ் மீதான இராணுவத் தாக்குதலைச் சித்தரிக்கும் உருவகப்படுத்தப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை 3 :
ஸ்னைப்பர் துப்பாக்கியுடன் ஒருவர் இருக்கும் வீடியோ 2023, மார்ச் மற்றும் மே மாதங்களில் டிக்டாக் மற்றும் ட்விட்டரில் பரவியுள்ளது. கிடைத்த ஆதாரங்களில் 2022, மார்ச் 14ம் தேதி பதிவிடப்பட்டதே மிகவும் பழைய பதிவாகும். அந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை.
ஆனால், அது முதல் முதலில் பதிவிடப்பட்ட 2022ம் ஆண்டு காலக்கட்டத்தை வைத்து, பிரான்ஸ் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது.
Tete a tete contre un bus pic.twitter.com/JCF1GfFxzn
— COMPTE FERMÉ (@Adaminho) March 13, 2022
முடிவு :
நம் தேடலில், துப்பாக்கியால் சுடும் வீடியோ, கட்டிடத்தின் மேல் இருந்து கார்கள் விழும் வீடியோ, ஈபிள் டவர் அருகே வான்வழி தாக்குதல் எனப் பரவும் வீடியோக்களுக்கும் பிரான்ஸ் வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிய முடிகிறது.