அரசின் இலவச “அமரர் ஊர்தி” சேவை பற்றி தெரிந்து கொள்ளுவோம் !

பரவிய செய்தி

ரயில் பெட்டியில் இறந்த உடல் செலவு இல்லாம எடுத்துச்செல்ல. அனைத்தையும் படிக்க. அனைத்தும் தெரிந்து கொள்ளுங்க. பிறருக்கும் அனுப்பி வைக்க. இப்படி ஒரு
சேவையை Red Cross சொசைட்டி செய்வது உங்களுக்கு தெரியுமா ? இதை படிக்கும் வரை!
படியுங்கள். பகிருங்கள்!

விலையில்லா அமரர் ஊர்தி எண் : 155377.  THANKS TO :  INDIAN RED CROSS SOCIETY – TN & GOVT OF TN . படித்ததும் பகிர்கின்றேன்! நீங்களும் பகிருங்கள்!

மதிப்பீடு

விளக்கம்

சென்னையில் இறந்த ஒருவரின் உடலை சொந்த ஊரான தேவக்கோட்டைக்கு எடுத்துச் செல்ல தனியார் வாகனத்தை அணுகாமல் ரயிலின் மூலம் திருச்சி கொண்டு சென்று அங்கிருந்து இலவச அமரர் ஊர்தி வழியாக அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்து சென்ற நிகழ்வையும், அதற்கு உதவிய ரெட்கிராஸ் சொசைட்டி குறித்தும் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த தகவலை அனுப்பி அதன் உண்மைத்தன்மை குறித்தும் ஃபாலோயர்கள் பலரும் கேட்டு இருந்தனர்.

Advertisement

இலவச அமரர் ஊர்தி : 

அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல இத்தகைய இலவச ஊர்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது . “108 ஆம்புலன்ஸ் சேவை ” போன்று தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை இருப்பது பலருக்கும் தெரியாமல் உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவனைகள் ஆகிய பகுதிகளில் மொத்தம் 160 இலவச அமரர் ஊர்திகளை கொண்டு செயல்பட்டு வரும் திட்டம் 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு உள்ளது . ஊர்திகள் இருக்கும் மருத்துவமனைகள் மட்டுமின்றி எந்த அரசு மருத்துவமனைகளிலும் ஒருவர் இறந்தால் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கு செய்ய வேண்டியது ” 155377 ” என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு எந்த ஊருக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும் . இதற்கென ” இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ” இயங்கி வருகிறது. சொந்த ஊருக்கு அழைத்து எடுத்துச் செல்ல ஊர்தி சேவை தேவைப்படுபவர்கள் 155377 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ரெட்கிராஸ் சொசைட்டிக்கு பேசினால் ஊர்தி தேவைப்படும் இடத்திற்கு அனுப்பி உதவுவார்கள்.

Advertisement

Facebook post

குறிப்பாக, இலவச அமரர் ஊர்தி சேவை நூறு கிலோமீட்டர் தொலைவிற்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. சென்னையில் இறந்தவரின் உடலை தேவகோட்டைக்கு ஊர்தியில் அழைத்து செல்ல முடியாத காரணத்தினால், அங்கிருந்து ரயிலின் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அருகே இருக்கும் முக்கிய ரயில் நிலையத்திற்கு உடலை அனுப்பி வைக்கின்றனர். உடலுடன் உறவினர் ஒருவரும் செல்லலாம். உடன் செல்பவருக்கு பயணசீட்டும் அளிக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அவர்களே ஏற்படுத்தி தருகிறார்கள். பணம் செலுத்த வேண்டி இருக்காது.

ரயில் நிலையத்திற்கு உடல் வந்த உடன் அங்கு காத்திருக்கும் அப்பகுதியை சேர்ந்த இலவச அமரர் ஊர்தி மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்து இறப்பவர்களின் உடல்களை இந்த சேவையின் மூலமாக அவர்களின் சொந்த ஊருக்கு ரயிலில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது எனக் கூறுகின்றனர்.

இத்தகைய சேவை குறித்து பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. இது வரவேற்கக்கூடிய திட்டமாகும். எனினும், இந்த சேவைக்கு பயன்படுத்தப்படும் ஊர்திகளின் ஓட்டுனர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் சம்பவங்களும் நிகழ்வதுண்டு என்ற செய்திகள், குற்றச்சாட்டுகள் வருகின்றன. அதுபோன்ற செயல்கள் இத்தகைய திட்டத்தை பாதிக்கின்றன. அவை சரி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வது போன்று, தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலுடன் இருக்கும் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சேவை பயன்பட ஏற்பாடு செய்வது சிறந்தது. தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தகவலை அதிகம் பகிருங்கள்.

இலவச அமரர் ஊர்திக்கு தொடர்ப்பு கொள்ள வேண்டிய எண்கள் : 155377 மற்றும் 28888180 .

மருத்துவமனையின் நிலைய அதிகாரியையும் (Resident medical officer ) தொடர்பு கொள்ளலாம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button