சட்டம் தெரியுமா ? வாகனம் வாங்கினால் ஹெல்மெட்கள் வழங்க வேண்டும்.

பரவிய செய்தி
1989 மத்திய மோட்டார் வாகன விதிகள் 138 (4)(எஃப்)-ன் படி புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக இரு ஹெல்மெட்கள் வழங்கப்பட வேண்டும்.
மதிப்பீடு
சுருக்கம்
மோட்டார் வாகன விதியின்படி இரு சக்கர வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் இருந்தாலும் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது.
விளக்கம்
ஆண்டுதோறும் வாகன விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைகவசம் அணியாமல் செல்வதால் விபத்தில் உயிரிழக்கும் சூழல் உருவாகிறது.
தலைகவசம்(ஹெல்மெட்) பயன்படுத்தாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இந்நிலையில், இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமே வாடிக்கையாளருக்கு தலைகவசம் வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் உள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோட்டார் வாகன சட்டம் :
1989 மத்திய மோட்டார் வாகன விதிகள் 138 (4)(எஃப்)-ன் படி இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதுகாப்பான தலைகவசத்தை இரு சக்கர வாகனம் வாங்கும் பொழுது வழங்க வேண்டும் என கூறுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் :
2016-ல் ராஜஸ்தான் போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், இரு சக்கர வாகனங்கள் விற்கும் பொழுது உடன் BSI தர உறுதி அளிக்கப்பட்ட இரு தலைகவசம் இலவசமாக வழங்க வேண்டும் என்பதே அறிவிப்பு. ஆனால், இதற்கு இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களிடம் உடன்பாடு இல்லை.
ஏனெனில், இலவசமாக தலைகவசம் வழங்கினால் அது வாகனத்தின் குறைந்தபட்ச லாபத்தை கணிசமாக குறைக்கும். மேலும், ஹெல்மெட்கள் உடன் வாகனத்தை ஏற்றுமதி செய்யும் நிலையில் வரிகள் மற்றும் சேவைக்கான தொகையும் அதிகமாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டது.
கேரள மாநிலம் :
கேரளாவில் விற்பனை செய்யப்படும் இரு சக்கர வாகனங்களுடன் தலைகவசம், நம்பர் ப்ளேட், பின்புறம் பார்க்கும் கண்ணாடிகள், சரி கார்ட் மற்றும் பின்புறம் அமர்பவருக்கான கைப்பிடி உள்ளிடவையை இலவசமாக வழங்க வேண்டும் என்ற சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.
இரு சக்கர வானங்கள் விற்பனை செய்யும் பொழுது டூல் கிட் மற்றும் முதலுதவி பெட்டி வழங்குவது போன்று தலைகவசத்தையும் வழங்க வேண்டும் என்பது மாநில அரசுகள் எண்ணம்.
விற்பனையாளர்கள் கூறுவதென்ன ?
ஒரு இரு சக்கர வாகனம் விற்பனை செய்தால் டீலருக்கு ரூ.2,200 கிடைக்கும். அது, டீலரிடம் இருந்து சப்-டீலர் மூலம் விற்பனையாகும் பொழுது ரூ.1,600 ஆகக் குறைகிறது. இந்நிலையில், வாகனத்துடன் குறைந்தபட்சம் ரூ.1,000 மதிப்புடைய தலைகவசம் வழங்கும் பொழுது ரூ.600 தான் மிஞ்சும் என்கிறார்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவு :
2009-ல் டெல்லி உயர் நீதிமன்றம் தலைகவசம் வழங்குவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை எதிர்த்து Society of Indian Automobile Manufacture (Siam) உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால், 2010-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து விற்பனையாளர்கள் BSI தர தலைகவசம் வழங்க வேண்டும் என அறிவித்தது.
தலைகவசம் இலவசமாக வழங்க வேண்டும் என்பது சட்ட விதிகளில் இருந்தும், அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும் நடைமுறையில் இல்லை என்பதே உண்மை.