பைக்கில் பெட்ரோல் டேங்க் முழுவதுமாக நிரப்பினால் வெடிக்குமா ?

பரவிய செய்தி

இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் கவனத்திற்கு.. வானிலையில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக பெட்ரோல் டேங்க் வெடிக்கக்கூடிய அபாயம் உள்ளது. பெட்ரோல் டேங்கை முழுவதுமாக நிரப்பும் போது காற்று சுழற்சிக்கு இடமில்லாத காரணத்தால் பெட்ரோல் சூடாகி டேங்க் வெடிக்கும் அபாயம் ஏற்படும். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, பாதி டேங்க் மட்டுமே பெட்ரோல் நிரப்பவும். இது INDIAN OIL நிறுவனத்தின் அறிவிப்பு.

மதிப்பீடு

சுருக்கம்

இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் எரிபொருள் டேங்க் முழுவதும் நிரப்பப்படுவதால் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக பரவும் செய்திகள் வதந்திகள் என Indian oil நிறுவனம் தன் ட்விட்டரில் தெரிவித்து உள்ளது.

விளக்கம்

கோடைக்காலம் நெருங்கும் நேரத்தில் இப்படியான எச்சரிக்கைப் பதிவு அதிகம் வைரலாகி வரும். எனினும், இம்முறை இரு சக்கர வாகனத்துடன் ஒருவர் எரிந்து இறந்த புகைப்படமும் இணைக்கப்பட்டு பகிரப்படுகிறது.

Advertisement

Indian oil corp ltd :

அதிக வெப்பக் காலங்களில் இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்புவது ஆபத்து, அதனால் சூடாகி வெடிக்கச் செய்யும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் எச்சரிக்கை செய்ததாகக் கூறி வதந்தியைப் பரப்பி வருவதாக அந்நிறுவனமே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

மேலும், “  குளிர்காலம் மற்றும் கோடைக்காலம் வரை உற்பத்தியாளர்களால் வரையறுக்கப்பட்ட உச்ச அளவு வரையிலும் வாகனங்களில் எரிபொருளை நிரப்புவது மிகவும் பாதுகாப்பானது “ என தெரிவித்து உள்ளனர்.

எரிந்த வாகனம் : 

Advertisement

டேங்க் முழுவதும் பெட்ரோலை நிரப்பியதாலே வாகனம் வெடித்து ஒருவர் இறந்து உள்ளதாக பரவும் படங்கள் இதற்கு முன்னாள் வட இந்தியாவிலும் இதே தகவலுடன் பரவி இருந்தது.

ஆனால், படத்தில் காட்டப்பட்ட புல்லெட் வண்டி டேங்க் முழுவதுமாக பெட்ரோல் நிரப்பியதால் வெடித்து எரியவில்லை.

2016-ல் தென்மேற்கு டெல்லியில் NH8 சாலையில் 32 வயதான மாணிக் கூர் புல்லெட் வாகனத்தில் வேகமாக சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது டெம்போ வாகனத்தில் மோதி சறுக்கி விழுந்ததில் பெட்ரோல் வெளியேறிய போது வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில், வாகனத்திற்கு அடியில் மாணிக் சிக்கிக் கொண்டுள்ளார். அதிக எடை கொண்ட புல்லெட் என்பதால் தப்பிக்க முடியாமல் தீயில் எரிந்து இறந்துள்ளார் என Hindustan Times பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது.

பெட்ரோல் டேங்க் :

வெப்பநிலை அதிகமாக இருப்பதால் முழு கொள்ளளவில் இருக்கும் வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடிப்பதாக வதந்திகள் பரவுகின்றன. இதே போன்ற வதந்தி பாகிஸ்தான் நாட்டில் பரவிய போது அதற்கான விளக்கத்தை Pakistan state oil கூறி இருந்தது.

“ பெட்ரோலின் Auto Igniting temperature ஆனது பாகிஸ்தானின் கோடைக்கால வெப்பநிலையை விட மிக அதிகம். டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்புவதில் எந்தவித ஆபத்தும் இல்லை “ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் கொள்ளளவு குறித்த வதந்திகள் பற்றியும் ஆங்கிலப் பத்திரிகையான Forbes ஆனது “ Yes, Its Hot : But No , Your Gas Tank Won’t Explode if You Fill it Up “ என்றத் தலைப்பில் கட்டுரை வெளியிட்டு தெளிவுப்படுத்தி இருந்தது.

கோடைக்காலத்தில் இரு சக்கர வாகனமோ அல்லது காரோ அதன் முழு அளவிற்கு பெட்ரோல், கேஸ் நிரப்புவதில் எத்தகைய ஆபத்தும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button