எரிபொருள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என அண்ணாமலை கூறியதாகப் போலிச் செய்தி !

பரவிய செய்தி
பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்காவிட்டால் நான் தீக்குளித்து சாவேன் அண்ணாமலை சபதம் !
மதிப்பீடு
விளக்கம்
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்த்தப்பட்டு வருவதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. டாஸ்மாக் மதுபான விலை உயர்த்திய போது தமிழக அரசை குற்றம்சாட்டிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை எரிபொருள் விலை உயர்விற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்காவிட்டால் நான் தீக்குளித்து சாவேன் என அண்ணாமலை கூறியதாக தமிழ் கேள்வியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
அண்ணாமலை குறித்து பரவும் நியூஸ் கார்டு போலியானது, நாங்கள் வெளியிடவில்லை என தமிழ் கேள்வியின் செந்தில்வேல் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
உ.பி யில் பாஜக வென்றால் நான் சாவேன் எனசங்கிகள் வதந்தி பரப்பினர் இப்போது இப்படி ஒரு போலி கார்டு பரவுகிறது. பெட்ரோல் விலை உயர்வுக்கு சங்கிகளை சாகச் சொல்வது நாகரீகமன்று விலைவாசிஉயர்வுக்கு நீங்கள் எப்போது சாவீர் என நான் கேட்க மாட்டேன் அதுபோல் ஏதும் செய்து விடாதீர்.இந்த கார்டு போலி. pic.twitter.com/aHQ1OFivwB
— Senthil (@Senthilvel79) March 26, 2022
இதுகுறித்து ஊடகவியலாளர் செந்தில்வேல், ” உ.பி தேர்தலில் பாஜக வென்றால் நான் சாவேன் எனச் சொன்னதாக சங்கிகள் வதந்தி பரப்பினார்கள். இப்போது திரு. அண்ணாமலை படத்துடன் இப்படி ஒரு போலி கார்டு பரவுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக அண்ணாமலையை சாகச் சொல்வது நாகரீகமன்று. நீ எப்போது சாகப்போகிறாய் என்று என்னை சங்கிகள் கேட்டது போல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக நீங்கள் எல்லாம் எப்போது சாகப்போகிறீர்கள் என்று ஒருபோதும் நான் கேட்க மாட்டேன். தயவு செய்து அதுபோல் எதுவும் செய்து விடாதீர்கள். இணையத்தில் பரவும் இந்த கார்டு போலியானது ” என ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிடவையில் பதிவிட்டு இருக்கிறார்.
அண்ணாமலை குறித்த போலியான செய்தியை அர்ஜுன் சம்பத் பெயரில் உள்ள போலியான ட்விட்டர் பக்கம் ” நானும் தீக்குளிப்பேன் ” எனப் பதிவிட்டு உள்ளது. சமீபத்தில் சில நாட்களாக, இந்து மக்கள் கட்சி மற்றும் அர்ஜுன் சம்பத் பெயரில் போலியான ட்விட்டர் பக்கங்கள் உருவாக்கப்பட்டு தவறான பதிவுகள் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.
முடிவு :
நம் தேடலில், பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்காவிட்டால் நான் தீக்குளித்து சாவேன் அண்ணாமலை சபதம் எனப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது .