உயிர்க்கொல்லி பூச்சியின் வைரஸால் கைகள் இவ்வாறு ஆகியதா ?

பரவிய செய்தி
இந்த பூச்சியை பார்த்தால் கையால் அடிக்கவோ தொடவோ வேண்டாம். இதில் இருக்கும் வைரஸ் நம் கையில் பரவி இது போன்று மாற வாய்ப்புள்ளது. இந்த பூச்சிகள் இந்தியாவில் தான் அதிகம் உள்ளது. மழைக் காலம் வந்தால் இவை இன்னும் அதிகரிக்கும். மேலும், தண்ணீரில் மிதந்து வரும். உடனடியாக இந்த செய்தியை அனைவருக்கும் பகிரவும்.
மதிப்பீடு
சுருக்கம்
பூச்சியின் மேலே மற்றும் கையில் உள்ள ஓட்டைகள் ஒரே மாதிரியாக இருப்பதால் இதை உண்மை என நினைத்து பகிர்வதால் சமூக வலைத்தளங்களில் இவை வைரலாகி உள்ளது. ஆனால், இவை அனைத்தும் வதந்தியே..
விளக்கம்
ராட்சத பூச்சிகளை பார்ப்பதற்கே அருவருப்பாகவும், ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும். அடுத்து, அந்த பூச்சிகள் மனிதர்களை கடித்து வீக்கம், அலர்ஜி போன்றவை ஏற்பட்டால் சிலருக்கு பார்க்கவே பிடிக்காது. அது போன்ற அருவருப்பான படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இந்த ராட்சத விஷப் பூச்சியை எங்காவது பார்த்தால் கைகளால் தொடவோ அல்லது அடிக்கவோ வேண்டாம். இதன் மேல் இருக்கும் பகுதியை தொடுவதால் உடனடியாக வைரஸ் பரவி உங்கள் கைகளில் இதுபோன்று பாதிப்பு ஏற்படும். இம்மாதிரியான பூச்சிகள் இந்தியாவில் தான் அதிகம் உள்ளன. தண்ணீரில் மிதந்து வரக் கூடிய இப்பூச்சிகள் மழைக் காலங்களில் அதிகளவில் உருவாகின்றன. இந்த தகவலை உடனடியாக பகிரவும் என்றுக் கூறி பரவிய செய்தி தற்போது ஆயிரக்கணக்கான லைக் மற்றும் ஷேர்களை பெற்று அதிகம் வைரலாகி வருகிறது.
ஒரு சில விஷப் பூச்சிகள் கடித்தால் உடலில் அலர்ஜி அல்லது பிற பாதிப்புகள் ஏற்படுவதை பலரும் அறிந்ததால் இதை உண்மை என நினைத்து பகிர்கின்றனர். மேலும், பூச்சியுடன் பரவிய படத்தில் காண்பிக்கப்பட்ட அருவருப்பான கை விரல்கள் மற்றும் உள்ளங்கையில் உள்ள ஓட்டைகள் பார்ப்பது உண்மையானவை போன்றே காட்சியளிப்பது மற்றொரு காரணம்.
Giant Water Bugs:
புதிய உயிர்க்கொல்லி பூச்சிகள் எனக் கூறி வைரலாகிய படங்களில் இருப்பது Giant Water bugs. குளம், குட்டை என தண்ணீர் நிறைந்த பகுதிகளில் அதிகம் காணப்படும் இந்த வகை பூச்சிகள் பார்ப்பதற்கு மட்டுமின்றி உடல் அமைப்பிலும் விசித்திரமானவை. காரணம், முட்டைகளை இடும் பெண் பூச்சிகள், அந்த முட்டைகளை பாதுக்காப்பாக இருக்க ஆண் பூச்சிகளின் முதுகுப் பகுதியில் வைக்கின்றன.
படங்களில் நாம் பார்த்த பூச்சி முட்டைகளை தாங்கிக் கொண்டு சுற்றித் திரிந்த ஆண் பூச்சி ஆகும். Water bugs பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் அவை கைகளில் துளையிடம் அல்லது வைரஸ் பரப்பும் உயிர்க்கொல்லி பூச்சிகள் அல்ல. இவ்வகை பூச்சிகள் வட அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவில் காணப்படும் மனிதர்களுக்கு பாதிப்பில்லாதவை
Trypophobia :
Trypophobia என்பது துளைகளை பார்ப்பதால் ஏற்படும் வெறுப்பு அல்லது அச்சத்தை குறிப்பவை. பல மனிதர்களுக்கு அருவருப்பான துளை போன்றவற்றை பார்க்கும் பொழுது அச்சம் உருவாகியதாக கூறியுள்ளனர். அவர்களை போன்றவர்களுக்கு பல போலியான வினோத துளை கொண்ட படங்களை இனையத்தில் வெளியிடுவது ஒரு பொழுதுபோக்காக உள்ளது.
குறிப்பாக, தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒருவகை தாமரையில் ஒழுங்கற்ற வடிவில் அமைந்திற்கும் துளையில் காணப்படும் விதைகள் பார்ப்பதற்கு அச்சமூட்டும் வகையில் இருக்கும்.
பூச்சிகளுடன் பரவிய கையில் அருவருப்பான துளைகள் கொண்ட கைகள் இருக்கும் படங்கள் போலியானவை. ஆம், பெண் ஒருவர் தனது கையில் சில பொருட்களை வைத்து செய்த போலியான வடிவம் அது. Youtube தளத்தில் Trypophobia பார்வையாளர்களுக்காக செய்யப்பட்ட வீடியோவே அது.
மேலும், விரல்களில் மிகப்பெரிய அளவில் துளைகள் போன்று இருக்கும் படங்கள் காண உண்மையானவை போன்று தென்பட்டாலும் அவையும் போலியே. பார்ப்பதற்கு பற்கள் கொண்ட கடல் விலங்கு போல் காட்சியளிக்கும் இந்த உறைகளை விரலில் மாட்டிக் கொண்டு எடுத்த புகைப்படத்தை பூச்சி கடித்து ஏற்பட்டதாக வதந்தி பரப்பியுள்ளனர்.
ஆக, வைரலாகும் படத்தில் இருக்கும் Giant Water Bugs ஒரு உயிர்க்கொல்லி பூச்சியும் அல்ல, வைரஸ் பரவியதால் பாதிக்கப்பட்டது என்று காண்பிக்கப்பட்ட படத்தில் இருப்பது உண்மையானவையும் அல்ல என்பதை இதிலிருந்து தெளிவாக அறிய முடிகிறது.