This article is from May 12, 2019

போலியான நபரை வைத்து பிரச்சாரம் செய்தாரா கவுதம் கம்பீர் ?

பரவிய செய்தி

டெல்லியில் டூப் போட்டு ஓட்டு கேட்கும் கவுதம் காம்பீர்.

மதிப்பீடு

விளக்கம்

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டு இருக்கையில், கவுதம் கம்பீர் மீது குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களும் எழுகிறது.

அதில், கவுதம் கம்பீர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வெயிலில் நிற்க முடியாமல், அவருக்கு பதிலாக போலியான நபர் ஒருவரை வைத்து பிரச்சாரம் செய்ததாகவும், அப்பொழுது காரின் முன்பக்கத்தில் அமர்ந்து இருக்கும் கவுதம் கம்பீர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில், செய்திகளிலும் வைரலாகி வருகிறது.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் முதல் பல்வேறு கட்சியினர், பொது மக்கள் அனைவரும் கவுதம் கம்பீரின் தேர்தல் பிரச்சார புகைப்படங்களின் தொகுப்பை ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த நபர் யார் ? 

கவுதம் கம்பீருக்காக போலியான ஒரு நபரை பிரச்சாரம் செய்ய வைத்துள்ளதாக காண்பிக்கப்படும் படத்தில் இருப்பவரின் பெயர் கௌரவ் அரோரா. அவருக்கும் கவுதம் கம்பீருக்கும் நீண்ட காலம் பழக்கம் இருந்திருக்கக்கூடும் எனத் தெரிவிக்கிறது. கவுதம் கம்பீர் உடன் கௌரவ் அரோரா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்க முடிந்தது. அதில், தேர்தலுக்கு முன்பாக 2018 டிசம்பரில் கம்பீருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பை கௌரவ் அரோரா தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஜீப்பில் கம்பீர் அமர்ந்து இருந்த இடத்தில் கௌரவ் அரோரா இருந்து கூட்டத்தை நோக்கி கையை அசைத்துக் கொண்டு இருக்கிறார், அருகில் இருப்பவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனால், காரின் அருகில் இருந்தவர்கள் கௌரவ் அரோரா-ஐ நோக்கி கை அசைக்கவில்லை, முன் இருக்கையில் அமர்ந்து இருந்த கவுதம் கம்பீரை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு இருந்துள்ளனர்.

அருகில் இருப்பவர்களுக்கு கை அசைப்பது கவுதம் கம்பீர் இல்லை என்று தெரிந்து இருந்தாலும், தொலைவில் மற்றும் மாடிகளில் இருந்து பார்க்கும் மக்களுக்கு ஜீப்பில் மாலைகள் உடன் அமர்ந்து கை அசைக்கும் கௌரவ் அரோரா-வின் தோற்றம் ஒரு வேட்பாளர் போன்றே காட்சியளித்து இருக்கும்.

பத்திரிகையாளர்கள் தகவல் :

இது தொடர்பான கட்டுரையை வெளியிட்ட Alt News தளத்தில், அந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்த இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞர் அபினவ் சஹா அளித்த பதிலை வெளியிட்டு இருந்தனர். அதில், ” முதலில் நான் புகைப்படங்கள் எடுக்கும் பொழுது வாகனத்தில் கம்பீர் இருந்தார். பின் ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்கு சென்று புகைப்படங்கள் எடுக்கும் பொழுது கம்பீர் இருந்த இடத்தில் கௌரவ் அரோரா இருந்தார். அப்போழுது மாடிகளில் இருந்தவர்கள் தங்களை நோக்கி கவுதம் கம்பீர் கை ஆசைப்பதாக மகிழ்ச்சி அடைந்தனர். மாடிகளில் இருந்து பார்க்கும் அனைவருக்கும் கை ஆசைப்பவர் கவுதம் கம்பீர் என்றே நினைக்க தோன்றும். கம்பீர் ஜீப்பில் நின்று கொண்டு இருக்கும் பொழுது அரோரா உடன் இருக்கவில்லை, கம்பீர் முன் இருக்கைக்கு சென்ற பிறகே அரோரா அங்கு வந்துள்ளார் ” என தெரிவித்து உள்ளார்.

இதைப் பற்றி மற்றொரு பத்திரிகையாளர் அளித்த தகவலில், ” கம்பீர் வாகனத்தில் நின்று கொண்டு இருக்கும் பொழுது அரோரா வேறொரு காரில் அமர்ந்து கொண்டு இருந்தார். கம்பீர் காரின் முன் இருக்கைக்கு சென்ற உடன் அவரின் இடத்திற்கு கௌரவ் அரோரா வந்து விட்டார். ஒரு அரை மணி நேரம் மக்களை நோக்கி கௌரவ் அரோரா அசைத்துக் கொண்டு இருந்தார் ” என தெரிவித்து இருந்தார்.

பிஜேபி மறுப்பு :

கவுதம் கம்பீருக்கு பதிலாக போலியான நபர் ஒருவரை வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் செய்திக்கு பிஜேபி கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் மறுப்பு தெரிவித்து இருந்தார். அதில், ” 11.30 மணியளவில் தேர்தல் பிரச்சாரத்தில் வெயிலின் தாக்கத்தால் கவுதம் கம்பீருக்கு சிறிது தலைசுற்றிய காரணத்தினால் வாகனத்தின் முன் இருக்கைக்கு சென்று 10-15 நிமிடம் அமர்ந்து இருந்துள்ளார். அந்த நேரத்தில், கட்சியைச் சேர்ந்தவர்கள் வாகனத்தில் இருந்து மக்களை நோக்கி கை அசைத்துக் கொண்டே பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும், அங்கிருந்த ஆதரவாளர்கள் மாலைகளை அணிவித்து உள்ளனர்.

கவுதம் கம்பீர் மற்றும் கௌரவ் அரோரா ஆகிய இருவரும் 25 வருடங்களாக நண்பர்கள். கௌரவ் அரோராவின் தந்தை மனோகர் அரோரா பிஜேபி கட்சியை சேர்ந்தவர் ” என பிஜேபி செய்தி தொடர்பாளர் மற்றும் டெல்லி பிஜேபி பொறுப்பாளரும் தெரிவித்து இருந்தனர்.

முடிவு :

கவுதம் கம்பீர்க்கு வெயிலின் தாக்கத்தால் தலைச்சுற்றிய காரணத்தினால் காரின் முன் இருக்கைக்கு சென்றதாக பிஜேபி கட்சியினர் தெரிவித்து உள்ளனர். போலியான நபரை வைத்து பிரச்சாரம் செய்வதாக கூறுவதை அவர்கள் ஏற்கவில்லை. எனினும், கவுதம் கம்பீர் காரில் பிரச்சாரம் செய்தவரை அவருடன் கௌரவ் அரோரா இல்லை. கம்பீர் சென்ற பிறகே அவரின் இடத்தில் அமர்ந்து உள்ளார்.

உருவ ஒற்றுமை உள்ள நபரை வைத்து பிரச்சாரம் செய்ததாக சித்தரிப்பது சரியல்ல. அவர் பாஜக நிர்வாகி ஆவார். இந்த சம்பவத்தில் ஏற்பட்ட குழப்பத்தை வைத்து போலி நபர் என்று பரப்பப்பட்டுள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader