மகாத்மா காந்தி ஆங்கிலேயரிடம் மாதம் ரூ100 பெற்றதாக தவறான தகவலைப் பரப்பும் பாஜகவின் உமா ஆனந்தன் !

பரவிய செய்தி
இறுதியாக இந்த கடிதம் தேசிய காப்பகங்களில் கிடைத்தது… காந்தி 1930-இல் ஆங்கிலேயர்களிடம் இருந்து மாதந்தோறும் ரூ.100 பெற்று தனிப்பட்ட செலவுகளை செய்து வந்துள்ளார். அப்போது 100 ரூபாயின் சந்தை மதிப்பு தற்போதைய 2.88 லட்சம் ரூபாய்க்கு அருகில் இருந்துள்ளது. அவர் ஏன் பணம் பெற்றார்? சக்கரம் நம்மை விடுதலையாக்கியது..Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக அப்போதைய பாம்பே அரசு (Government of Bombay) இந்திய அரசுக்கு எழுதிய, ஜூன் 15, 1930 என்ற தேதியிடப்பட்ட கடிதம், ‘நேஷனல் ஆர்க்கிவ்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற வாட்டர்மார்க் உடன் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தக் கடிதம் அப்போது அரசு கைதியாக இருந்துள்ள மகாத்மா காந்தியின் மீதான குற்றப்பத்திரிக்கையோடு தொடர்புடையது.
அப்பதிவுகளில், மகாத்மா காந்தி 1930-இல் ஆங்கிலேயர்களிடம் இருந்து மாதந்தோறும் ரூ.100 பெற்று தனிப்பட்ட செலவுகளை செய்து வந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளனர். பாஜகவின் சென்னை மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் பதிவிட்ட இப்பதிவை பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.
கொள்ளக்காரன் sorry வெள்ளக்காரன் கிட்டேந்து காந்தி மாசா மாசம் 100 ரூவா கூலி வாங்கினதுக்கான ப்ரூஃப் வெளியாகி இருக்கு. அன்றைக்கு இதோட மதிப்பு 2,88,000/- ரூவாயாம்.
இந்தாளத்தான் தேசபிதா, மகான்னு கொண்டாக்கிட்டு இருக்கோம்.
மார்க்கண்டேய கட்ஜு அப்பவே காந்தியை பிரிட்டிஷ் கூலின்னாறு pic.twitter.com/ZvmHPTsLXD
— கோமாளியின் கையில் ஊடகம் (@KsArun62260148) August 12, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் இந்த கடிதத்தின் புகைப்படத்தை, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இந்த கடிதம் கடந்த 2022-இல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதை காண முடிந்தது.
இக்கடிதம் குறித்து தேடியதில், இது ‘இந்திய கலாச்சாரம்‘ என்ற அரசாங்க இணையதளத்தில் உள்ள ‘நேஷனல் ஆர்க்கிவ்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற பட்டியலில் பக்கம் எண். 51-ல் இணைக்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.
எரவ்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.கே.காந்தியின் பராமரிப்புக்காக ரூ.100 உதவித்தொகை வழங்கப்பட்டதாக இந்தக் கடிதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கடிதத்தில் காந்தியின் தனிப்பட்ட செலவு என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, சிறையில் இருக்கும் எம்.கே.காந்தியின் பராமரிப்புக்கான உதவித் தொகை என்றே அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில், இத்தொகையை, ” 29 அரசியல் மத்திய அகதிகள் மற்றும் மாநில கைதிகள், பிற அகதிகள் மற்றும் மாநில கைதிகள் என்பதன் கீழ் தணிக்கை செய்யுமாறு இந்திய அரசாங்கத்திடம் முன்மொழியப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காந்தி அவர்களுக்கு அறிவித்தது போன்றே, வங்காள மாநில கைதியான சதீஷ் சந்திர பக்ராஷியின் பெயரிலும் 1927 ஜூன் 7 என்ற தேதியிடப்பட்ட மற்றொரு கடித எண். 1353/2-ம் அதே வைரல் கடிதத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்திய கலாச்சாரம்’ இணையதளத்தில், ‘நேஷனல் ஆர்க்கிவ்ஸ் ஆஃப் இந்தியா’ என்பதன் கீழ் இதே போன்று பல கடிதங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எனவே இந்த உதவித்தொகை பெற்ற அரசு கைதி காந்தி மட்டும் அல்ல என்பதை இது ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது.
மேலும் பக்கம் எண் 52-இல், “திரு. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் பராமரிப்புக்காக ஒரு மாதத்திற்கு நூறு ரூபாய் அனுமதிக்கப்படுகிறது. இந்த உதவித்தொகை எரவ்டா மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட வேண்டும். காந்தியின் ‘உடல்நலம் மற்றும் சிகிச்சையை’ கண்காணிப்பது பற்றியும் அதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.இதன் மூலம் காந்தி தனது தனிப்பட்ட செலவிற்காக நேரடியாகத் தொகையைப் பெறவில்லை என்பது தெளிவாகிறது.
இதுகுறித்து காந்தி எழுதியுள்ள கடிதமும் நமக்கு கிடைத்தது. ‘காந்தி ஹெரிடேஜ் போர்டல்‘ என்ற இணையதளத்தில் ‘மகாத்மா காந்தியின் சேகரிக்கப்பட்ட படைப்புகள்’ என்ற பட்டியலின் கீழ், 10 மே 1930 என்று குறிப்பிடப்பட்ட தேதியுடன் EE DOYLE-க்கு அவர் எழுதியதாக அந்த கடிதம் காணப்படுகிறது.
அதில், “முடிந்தவரை அரசாங்கத்தால் வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை நான் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அரசாங்கத்தால் வழங்கப்படும் புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களும் எனக்கு வேண்டாம்.” மேலும் அதில் பின்வருவனவற்றை விருப்பமான செய்தித்தாள்களாக அவர் பட்டியலிட்டுள்ளார்: தி பாம்பே குரோனிக்கல், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் சோஷியல் ரிஃபார்மர், மாடர்ன் ரிவியூ, யங் இந்தியா மற்றும் நவஜீவன் (இந்தி மற்றும் குஜராத்தி).
மேலும் அதில், “ மாதாந்திர உதவித் தொகையான ரூ100 அரசு பரிந்துரைத்துள்ளது. எனக்கு அப்படி எதுவும் தேவையில்லை என நினைக்கிறேன். நான் உண்ணும் உணவு விலை உயர்ந்ததாக உள்ளது என்பது எனக்குத் தெரியும். இது என்னை வருத்தப்படுத்துகிறது, ஆனால் இந்த உணவு என் உடலுக்கு தேவையானதாக இருக்கிறது ” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் எரவ்டா மத்திய சிறையில் அரசு கைதியாக இருந்தபோது காந்திக்கு வயது மூப்பின் காரணமாக அவரது சிகிச்சை, பராமரிப்புக்காக மாதம் ரூ.100 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது, ஆனால் அவர் அதை மறுத்துள்ளார் என்பதை இது உணர்த்துகிறது.
மேலும் படிக்க: காந்திக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தைப் பிரிட்டிஷ்காரர்கள் அளித்ததாகப் பரப்பப்படும் பொய் !
முடிவு:
நம் தேடலில், மகாத்மா காந்தி ஆங்கிலேயர்களிடம் மாதந்தோறும் ரூ100 உதவித் தொகையாக பெற்றதாக பரவும் தகவல்கள் தவறானவை. மாறாக இந்த தொகையானது அரசு கைதியான காந்தியை வயது மூப்பின் காரணமாக பராமரிப்பதற்காக எரவ்டா மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.
மேலும் இதுபோன்ற உதவித்தொகைகளை பெறும் அரசியல் கைதி அவர் மட்டுமல்ல, இது ஒரு பொதுவான நடைமுறை என்பதையும், பிரிட்டிஷ் அரசு வழங்கிய உதவித்தொகையை அவர் மறுத்துள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.