” காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் ” – குஜராத் பள்ளித் தேர்வில் கேள்வி !

பரவிய செய்தி
காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? – குஜராத்தில் 9 ஆம் வகுப்பு தேர்வில் சர்ச்சை கேள்வி
மதிப்பீடு
விளக்கம்
குஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட கேள்வித்தாளில் காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்வி இடம்பெற்றது நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் , இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
குஜராத்தில் உள்ள காந்தி நகரில் சபலம் ஷாலா விகாஸ் சங்குல் எனும் அரசு மானியத்தை பெற்று இயங்கி வரும் சுயநிதிப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அமைப்பின் கீழ இயங்கி வரும் பள்ளிகளில் உள் மதிப்பீடு தேர்வு(internal assessment examination) சமீபத்தில் (சனிக்கிழமை) நடைபெற்றது.
அதில், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட கேள்வித்தாளில் , ” காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் (Gandhijiye aapghaat karwa maate shu karyu – how did Gandhiji commit suicide ) ” எனக் கேட்டுள்ளனர். இந்த கேள்வி மட்டுமின்றி சட்டவிரோதமான மதுபானம் குறித்த கேட்ட மற்றொரு கேள்வியும் குஜராத் கல்வி அதிகாரிகளை கோபப்படுத்தி இருக்கிறது .

காந்தி தற்கொலை செய்து கொண்டது எப்படி என்றும் , சட்டவிரோதமான மது விற்பனை குறித்த சர்ச்சையான கேள்விகள் அனைவருக்கும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து , பள்ளி நிர்வாகம் மீது விசாரணை துவங்கப்பட்டுள்ளது .
” சுயநிதி பள்ளிகளில் நடைபெற்ற உள் மதிப்பீடு தேர்வுகளுக்கான கேள்வித்தாளில் மிகவும் மோசமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கேள்விகள் மிகவும் ஆட்சேபணைக்குரியவை , கேள்வித்தாள் அமைக்கப்பட்டது குறித்து விசாரணையை தொடங்கி உள்ளோம் விசாரணை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கேள்வித்தாள்கள் சபலம் ஷாலா விகாஸ் சங்குல் பள்ளிகள் நிர்வாகத்தினால் அமைக்கப்பட்டவை. இதற்கும் மாநில கல்வித் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ” என காந்தி நகரின் மாவட்ட கல்வி அதிகாரி பாரத் வாதர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
காந்தி பிறந்த மண்ணில் இருக்கும் ஒரு பள்ளியிலேயே அவரின் இறப்பு குறித்து தவறான கேள்விகள் கேட்கப்பட்டது அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கோபத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகிறது .