கரூரில் ரசாயனம் கலந்ததால் சீல் வைக்கப்பட்ட விநாயகர் சிலை கிடங்கு.. மதரீதியாக பரப்பும் அண்ணாமலை !

பரவிய செய்தி
நமது பண்டிகைகளின் மூலம் கிடைக்கும் இத்தகைய வியாபரங்களை நம்பியிருக்கும் மக்களின் எண்ணங்களை சீர்குலைப்பதன் மூலம், திமுக சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பவர்களின் உணர்வுகளை புண்படுத்துவது மட்டுமல்லாமல், உள்ளூர் பொருளாதாரத்தில் பல மடங்கு விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஊழல் திமுக அரசின் இந்த அடக்குமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மதிப்பீடு
விளக்கம்
விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற செப்டம்பர் 18ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலை தயாரிப்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்ற சூழலில், கரூர் மாவட்டத்தில் உள்ள விநாயகர் சிலை தயாரிப்பாளர்களின் குடோனுக்கு தமிழக அரசு சீல் வைத்துள்ளது என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இங்கு வேலை செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் இவ்வாறு சீல் வைக்கப்பட்டதற்காக அழும் காட்சிகளையும் இந்த வீடியோவில் காண முடிந்தது.
இதனை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை உட்பட, பாஜகவினர் பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில், விநாயகர் சதுர்த்திக்கு சில தினங்களே உள்ள நிலையில், இத்தகைய சம்பவம் சனாதனத்திற்கு எதிராக, விநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்கும் அரசின் செயல் என்று கூறி விமர்சித்து எழுதியுள்ளதையும் காண முடிகிறது.
HINDU Dharma in Danger.
CM @mkstalin Why dimwit DMK is afraid of Vinayaka Chathurthi.
pic.twitter.com/of7IwQNplS— Amar Prasad Reddy (@amarprasadreddy) September 15, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், கரூர் மாவட்டத்தின் சுங்ககேட் பகுதியில் அமைந்துள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான சிலைகள் தயாரிப்பு கிடங்கில் தான் இந்த சோதனை நடந்துள்ளது என்பதையும், அங்கு ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டதற்காகவே, வருவாய்த் துறையினா், மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையினா் மற்றும் சுற்றுச்சூழல் உதவி பொறியாளா் ஜெயகுமாா் ஆகியோர் அடங்கிய குழு தலைமையில், இத்தகைய ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிந்தது.
எனவே இதுகுறித்த உண்மைத் தன்மையை அறிய, யூடர்ன் தரப்பிலிருந்து கரூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரியான கண்ணனை தொடர்பு கொண்டு பேசுகையில், “கரூர் சுங்ககேட் பகுதியில் ரசாயனம் கலந்த கலவையால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை விற்பதாக அங்குள்ள மண்பாண்ட ஊழியர்கள் மூலமாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் வந்தது.
எனவே அந்த புகார் தொடர்பாக, அங்குள்ள கிடங்கை ஆய்வு செய்தோம். அதில் அங்குள்ள விநாயகர் சிலைகள் தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருள் கலந்த கலவையால் செய்யப்பட்டிருந்ததைக் கண்டறிந்தோம். இதையடுத்து விநாயகா் சதுர்த்திக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த சிலைகள் கொண்ட கிடங்கிற்கு சீல் வைத்தோம். சிலை தயாரிப்பவர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படையக்கூடாது. எனவே விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் இந்த சிலைகள் அவர்களிடமே ஒப்படைக்கப்படும்” என்றும் உறுதிப்படுத்தினார்.
மேலும், ஆய்வில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் எனும் ரசாயனப் பொருள் கலந்து சிலைகள் செய்து இருப்பதால் கிடங்கிற்கு சீல் வைக்கப்பட்டதாக தினமணி உள்ளிட்ட செய்திகளிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
2018-இல் இருந்தே தொடரும் சிலை பறிமுதல் சம்பவங்கள்:
இவ்வாறு ரசாயனம் கலந்த சிலைகள் செய்யப்பட்டதற்காக திருநெல்வேலியிலும் கடந்த செப்டம்பர் 13 அன்று ஒரு கிடங்கிற்கு சீல் வைத்துள்ளனர். இதே போன்று கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியிலும் தடையை மீறி செய்த 12 ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை நகரசபை கமிஷனர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் 2023ல் மட்டும் புதுச்சேரி, ஒரிசா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் செய்வதற்காக தடைகள் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2018ல் அதிமுக ஆட்சியின் போதும் திருப்பூர் மாவட்டத்தில் விற்கப்பட்ட விநாயகர் சிலைகளில், நிறத்தை அதிகரிப்பதற்காக அதிகளவில் ரசாயன மூலப் பொருட்கள் கலந்ததற்காக பல லட்சம் மதிப்பிலான 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளும்:
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி, பின்னர் அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் கரைப்பதை ஒரு வழக்கமான நிகழ்வாக பொதுமக்கள் உட்பட சில குறிப்பிட்ட இந்து அமைப்புகள் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
அதன்படி அதிகபட்சமாக ஒவ்வொரு வருடமும் பெங்களூருவில் சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகளும், மும்பையில் சுமார் 1,50,000 சிலைகளும், ஹைதராபாத்தில் சுமார் 40,000 சிலைகளும் என இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான நகரங்களிலிருந்து பல லட்சம் கணக்கில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.
எனவே கடந்த செப்டம்பர் 11 அன்று இந்த சிலைகள் கரைக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சிலைகள் எந்தப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்த விதிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தங்களுடைய இணையதளங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட்டுள்ளன.
அதில், “நச்சுத்தன்மையற்ற, கனிம மூலப்பொருட்கள் இல்லாத இயற்கையான, அழிக்கக்கூடிய வகையில் உள்ள, சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை செய்யவே ஊக்குவிக்கப்பட வேண்டும். மேலும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (POP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரீன்) ஆகியவற்றில் செய்யப்பட்ட சிலைகள் தடை செய்யப்பட வேண்டும்.
இந்த பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் ஜிப்சம், சல்பர், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற இரசாயனங்கள் உள்ளன. மேலும் சிலைகளுக்கு வண்ணம் பூச பயன்படுத்தப்படும் சாயங்களில் பாதரசம், காட்மியம், ஆர்சனிக், ஈயம் மற்றும் கார்பன் போன்ற வேதிப் பொருட்களும் உள்ளன. சிலைகளை அலங்கரிக்க பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய பொருட்கள் மக்கும் தன்மை கொண்டவை அல்ல, நீர்நிலைகளில் கரையும் போது இவை நச்சுத்தன்மையை ஏற்படுத்துகின்றன. எனவே, சிலைகளை கரைப்பதற்கு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது.” என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்படும் சிலைகளை தவிர்ப்பதோடு, தடையை மீறி பல்வேறு ரசாயனங்கள் கலந்து இவ்வாறு செய்யப்படும் சிலைகளை அரசு பறிமுதல் செய்வதற்கும் ஒத்துழைப்பு தர வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் நடைபெற்றது போலவே, தமிழ்நாட்டிலும் ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிமுறைகளின் படி, கரூரில் தடைசெய்யப்பட்ட ரசானயம் கலந்த விநாயகர் சிலைகளை செய்ததற்காகவே வருவாய்த் துறையினா் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையினர் அடங்கிய குழு அந்த கிடங்கிற்கு சீல் வைத்துள்ளது.
ஆனால் இதனை வகுப்புவாதத்தைத் தூண்டும் வண்ணம் அண்ணாமலை உட்பட பாஜகவினர் பலரும் மதரீதியாக திசை திருப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.