கங்கை இறங்கும் காட்சி எனப் பரப்பப்படும் நியூசிலாந்தில் எடுக்கப்பட்ட வீடியோ !

பரவிய செய்தி
கங்கை இறங்கும் காட்சி
மதிப்பீடு
விளக்கம்
இந்துக்கள் புனித நதியாகக் கருதும் கங்கை நதி இமயமலையில் உற்பத்தியாகி உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் என பல்வேறு மாநிலங்கள் வழியாக சுமார் 2,500 கி.மீ நீளம் பாய்கிறது. இதனைச் சுத்தம் செய்ய ஒன்றிய பாஜக அரசு பல ஆயிரம் கோடியை நிதியாக ஒதுக்கியுள்ளது.
கங்கை இறங்கும் காட்சி🙏🙏🙏 pic.twitter.com/QdHNmOJXOJ
— கைப்புள்ள (@kaippulla123) July 5, 2023
இந்நிலையில், ‘கங்கை இறங்கும் காட்சி’ என மலையில் இருந்து நீர் வடியும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
கங்கை நதி என சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், அவ்விடம் நியூசிலாந்தில் இருப்பதை அறிய முடிந்தது.
கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடுகையில் ‘NZ Pocket Guide’ எனும் யூடியூப் பக்கத்தில் கங்கை எனப் பரவக் கூடிய இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவின் தலைப்பில், ‘Milford Sound – New Zealand’ என்றுள்ளது.
அந்த வீடியோவின் 5வது நிமிடத்திற்கு மேல் மில்ஃபோர்ட் சவுண்ட் சாலையில் உள்ள ‘Homer Tunnel’ பற்றிக் குறிப்பிடுகின்றனர். அந்த சுரங்கப் பாதைக்கு வெளியே உள்ள சிக்னலில் காத்திருக்கும் போது அருகில் உள்ள மலையில் இருந்து நீர் வடியும் காட்சிகள் காண்பிக்கப்படுகிறது. அந்த இடம் பரவக் கூடிய வீடியோவில் உள்ள இடத்துடன் ஒத்துப் போகிறது. அதுமட்டுமின்றி இரண்டிலும் சுரங்கப் பாதையின் நுழைவாயில் இருப்பதைக் காண முடிகிறது.
‘Orest Kotylo’ என்ற யூடியூபில் மில்ஃபோர்ட் சவுண்ட் சாலையில் எடுக்கப்பட்ட வீடியோவிலும் இதே காட்சிகளைக் காண முடிகிறது. மேற்கொண்டு இதுகுறித்துத் தேடியதில், ‘Trip Advisor’ எனும் இணையதளத்திலும் மில்ஃபோர்ட் சவுண்ட் சாலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அப்படத்தையும் பரவக் கூடிய வீடியோவுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் இரண்டும் ஒரே இடம் என்பதை உறுதி செய்ய முடிகிறது.
நியூசிலாந்தில் உள்ள Homer Tunnel பகுதியைக் கூகுள் மேப் ஸ்ட்ரீட் வீவ் மூலமும், அதில் பதிவிடப்பட்டுள்ள படங்களைக் கொண்டும் ஒப்பிட்டுப் பார்த்ததில் கங்கை எனப் பரவக் கூடிய வீடியோ அப்பகுதியில் தான் எடுக்கப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், மலையிலிருந்து கங்கை வழியும் காட்சி எனப் பரவக் கூடிய வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல. அது நியூசிலாந்தில் உள்ள மில்ஃபோர்ட் சவுண்ட் எனும் பகுதியில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.