சமையல் சிலிண்டருக்கான மானியம் குறைப்பு.. 710ரூ சிலிண்டருக்கு 25ரூ மட்டுமே மானியம் !

பரவிய செய்தி
2018 முதல் 2021 ஜனவரி வரை மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியத் தொகை எனப் பரவும் புகைப்படம்
மதிப்பீடு
விளக்கம்
மானியம் இல்லாத மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலண்டர் விலை ஏற்றம் காணும் போது, மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கும் மக்களுக்கு சிறிது விலை ஏற்றம் இருந்தாலும் மானியம் திரும்பி அளிக்கப்படும் என்கிற எண்ணத்தில் சிலர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால், கடந்த 2020 மே மாதத்தில் இருந்து மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியத் தொகையாக ரூ.25 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2018 மே மாதத்தில் இருந்து 2021 ஜனவரி மாதம் வரை சிலிண்டர் விலை மற்றும் அதற்கான மானியத் தொகை போக மீதமுள்ள தொகையை வரிசைப்படுத்தி இருக்கும் பக்கத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.
அரசாங்கத்தை பொறுத்தவரை, ” 2019-2020 நிதியாண்டு முழுவதும் ரூ.22,635 கோடியாக இருந்த சமையல் எரிவாயு மானியம் இந்த நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.1,126 கோடியாக குறைந்து விட்டது. அதேபோல், 2018-19ம் ஆண்டில் ரூ.31,447 கோடியாக இருந்த சிலிண்டர் மானியம் 2019-20ல் 28% அளவிற்கு வீழ்ச்சி அடைந்ததாக ” 2020 டிசம்பர் 8-ம் தேதி economictimes செய்தியில் வெளியாகி இருக்கிறது.
வைரல் செய்யப்படும் பட்டியலில் இடம்பெற்ற 2018 முதலான சிலிண்டர் விலையே iocl.com இணையதளத்திலும் இடம்பெற்று இருக்கிறது. மேலும், கடந்த 2019 முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத் தொகை விவரங்கள் தி ஹிந்து மற்றும் எகனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட செய்திகளில் இடம்பெற்று இருக்கிறது.
மேலும் படிக்க : LPG கேஸ் நேரடி மானியம் கொண்டு வந்தது காங்கிரஸா ? பிஜேபியா ?
2019-ம் ஆண்டு மார்ச் மாதம் கேஸ் சிலிண்டர் நேரடி மானியம் தொடர்பாக யூடர்ன் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், ” சென்னையில் 2019 பிப்ரவரி மாதம் வாங்கிய சிலிண்டரின் விலை ரூ.673 ஆக இருந்த போது அதற்கு அரசு மூலம் வங்கியில் செலுத்தப்பட்ட மானியத் தொகை 191.66 ரூபாயாகும். பிப்ரவரி மாதத்தில் மானியத் தொகை போக சிலிண்டர் விலை ருபாய் 481.34 ” எனக் குறிப்பிட்டு இருந்தோம். அந்த விலை மற்றும் மானியத் தொகை வைரலாகும் தரவிலும் சரியாக உள்ளது.
கொரோனா பெருந்தொற்று வந்த பிறகு கடந்த மே மாதத்தில் இருந்தே சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் வழங்கப்படாமல் இருந்து, 8 மாதங்களாக சிலிண்டர் விலை உயர்ந்தாலும் ரூ.25 மட்டுமே மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கட்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
வங்கி கணக்கை பரிசோதித்து விட்டு மானியத் தொகை குறைவாக இருப்பதை அறிந்த வாடிக்கையாளர்கள் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஏஜென்சிகளுக்கு சென்று வாக்குவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், பெட்ரோலிய அமைச்சகமே மானியத் தொகையை நிர்ணயம் செய்து வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு சிலிண்டர் மானியத் தொகையை உயர்த்த வேண்டும் என நுகர்வோர் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.