கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதான பரசுராம் வாக்மோர்..!

பரவிய செய்தி
கர்நாடகா எழுத்தாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி பரசுராம் வாக்மோர் ஸ்ரீ ராம சேனா அமைப்பை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மூத்தப் பெண் பத்திரிகையாளரான கௌரி லங்கேஷ் செப்டம்பர் 2017, 5-ம் தேதி அவரது இல்லத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கௌரி லங்கேஷ் இடதுசாரி சித்தாந்தங்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும், ஒடுக்கு முறைக்கு எதிராகவும் குரல் எழுப்பி வந்ததால் திட்டம் தீட்டி அவரை கொலை செய்துள்ளனர் என்று கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் சிறப்பு விசாரணை குழு கர்நாடகாவின் விஜயபுர மாவட்டத்தின் சிந்தாகி பகுதியைச் சேர்ந்த பரசுராம் வாக்மோர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. பரசுராம் வாக்மோர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் சந்தேகப்படும் 6-வது குற்றவாளியாவார்.
பரசுராம் வாக்மோர் கர்நாடகா போலீசிடம், “ கொலை செய்ய திட்டம் தீட்டிய நாளுக்கு முன்பாகவே கௌரி லங்கேஷ் வீடு திரும்பியதால் திட்டத்தில் மாற்றம் வந்து கொலை செய்யப்பட்ட முந்தைய நாள் தனக்கு துப்பாக்கி கைக்கு வந்தாகவும், கொலை செய்யப்பட்ட பின்பு துப்பாக்கி மற்றும் மீதம் இருந்த குண்டுகளை துப்பாக்கி வழங்கியவரிடமே திருப்பி வழங்கியதாக “ தெரிவித்துள்ளார்.
பரசுராம் வாக்மோர்க்கு துப்பாக்கி வழங்கிய நபர் ஹிந்து அமைப்பான ஹிந்து ஜன்ஜகுர்தி சமிதியின் முன்னாள் நடத்தாளர் 37 வயதான அமோல் காலே என்பவர் ஆவார். மேலும் பரசுராம் வாக்மோர்க்கு ஸ்ரீ ராம சேனா அமைப்புடன் தொடர்பு உள்ளது என்பது தெரியவந்துள்ளது. கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியே கர்நாடகா எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி கொலையிலும் பயன்படுத்தப்பட்டது என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கௌரி லங்கேஷ் கொலை சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக ஆறு முதல் ஒரு ஆண்டாக உன்னிப்பாக கனித்து திட்டம் தீட்டி செயல்படுத்தி உள்ளனர். இந்த கும்பல் குறைந்தது 60 பேரைக் கொண்டு மத்தியப்பிரதேசம், கர்நாடகா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் பரவி உள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் இதற்கு முன்பாக கர்நாடகா எழுத்தாளர் கே.எஸ்.பகவான் கொலை செய்த போது கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராம சேனா அமைப்புடன் பரசுராம் வாக்மோர்க்கு தொடர்பு இருப்பது பற்றி அந்த அமைப்பின் விஜயபுர மாவட்டத் தலைவர் ராகேஷ் மத் உடன் போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். சில நாட்களில் ராம சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முதாலிக் உடன் பரசுராம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இது குறித்து பேசிய முதாலிக், “ சிறப்பு விசாரணை குழுவிடம் அவர் என்னக் கூறினார் என்று எனக்கு தெரியாது. என்னுடன் பலரும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். எங்கள் அமைப்பில் வேலை செய்யாத சில பேரும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்” என்று தெரிவித்து இருந்தார்.
கௌரி லங்கேஷ் கொலை மட்டுமின்றி கே.எஸ்.பகவான், எம்.எம். கல்புர்கி பலரும் கொலை செய்யப்பட்டதில் தொடர்புகள் உள்ளன. ” 1992 முதல் 2018 வரை இந்தியாவில் 77 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தில் வேலைப் பார்ப்பவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்”. இந்தியாவில் சிலருக்கு எதிராக குரல் எழுப்பும் பத்திரிகையாளர்கள் மர்மமாகவும், கொடூரமாகவும் கொல்லப்பட்டனர்.