ஜெர்மனியில் கிடைத்தது 40,000 ஆண்டுகள் பழமையான நரசிம்மர் சிலையா ?

பரவிய செய்தி

ஜெர்மனியில் கிடைத்தது 40,000 வருட நரசிம்மர் சிலை!. ஹிந்து மதம் இந்தியாவின் மதம் மட்டுமல்ல. அது உலகிற்கே முதன்மை மதம்.

மதிப்பீடு

விளக்கம்

இந்து மதத்தின் நம்பிக்கையில் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரத்தில் விஷ்ணு பகவான் மனித உடலில் சிங்கத்தின் தலையுடன் தோன்றியதாகக் கூறுகின்றனர். 40,000 ஆண்டுகள் பழமையான நரசிம்ம  சிலையொன்று ஜெர்மனியில் கிடைத்துள்ளதாக தமிழ் வார புத்தகமொன்றில் ” தெரிஞ்சுக்கோங்க ” என்ற தலைப்பில் வெளியான பக்கத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

Advertisement

உண்மையில், ஜெர்மனியில் நரசிம்ம அவதாரத்தின் சிலை கிடைத்ததா என்பதை ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றனர். வைரலாக செய்தி தொடர்பாக ஆராய்ந்த பொழுது 2018-ம் ஆண்டில் இருந்தே வார புத்தகத்தின் பக்கம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்துள்ளதை அறிய நேர்ந்தது.

Facebook link | archived link

அதேபோல், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் சிலையின் புகைப்படம் இணைக்கப்பட்டு நரசிம்ம அவதாரத்தின் சிலை என முகநூல், யூடியூப் உள்ளிட்டவையில் பரப்பி இருந்தனர்.

மேலும், வலதுசாரி ஆதரவு தளமாக போலிச் செய்திகளை அதிகம் பரப்பும் Postcard எனும் இணையதளத்திலும்  ” ஜெர்மனியில் 32000 ஆண்டுகள் பழமையான நரசிம்மர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ” என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்றிருந்தது.

Advertisement

உண்மை என்ன ? 

நரசிம்மர் சிலை என பரப்பப்பட்ட சிலையின் புகைப்படத்தை வைத்து தேடுகையில், ஜெர்மனியின் ஜூராவில் அமைந்துள்ள ஹோஹலேன்ஸ்டீன்-ஸ்டேடில் எனும் குகையில் Löwenmensch அல்லது சிங்க மனிதனின் சிலை கண்டெடுக்கப்பட்டதை அறிய முடிந்தது. ஆனால், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல.

2011-ல் Der Spiegel இணையதளத்தில் வெளியான தகவலின் படி, மாமத் தந்ததில் இருந்து செய்யப்பட்ட சிலையின் துண்டுகள் புவியியலாளர் ஓட்டோ வோல்ஸிங் என்பவரால் 1939-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது அந்த சிலை ஜெர்மனியின் Ulm அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் கூற்றுப்படி, சிங்க மனிதனின் சிலை 40,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மேல் பாலியோலிதிக் காலத்தைச் சேர்ந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் வலைதளத்தில் ” The Lion Man : an Ice Age masterpiece ” என்ற தலைப்பில் சிங்க மனிதனின் சிலை குறித்து வெளியிட்ட தகவலில், ” அவர் உடல் வடிவத்தில் இல்லாத, ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை குறிக்கும் ஒரு உயிரினத்தின் மிகப் பழமையான பிரதிநிதித்துவம்.. அவர் தெய்வமாக இருந்தாரா , ஆவி உலகத்தின் அவதாரம் , ஒரு படைப்பு கதையின் பகுதி அல்லது ஆவிகளை தொடர்பு கொள்வதற்கான பயணத்தில் அனுபவங்கள் கொண்ட மனிதரா என அக்கதை என்னவென்று அறிய இயலவில்லை ” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

சிங்க மனித சிலையானது பழமையான மத நம்பிக்கையின் ஆதாரமாக இருக்கும் என பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தெற்கு ஜெர்மனியில் 32,000 முதல் 40,000 ஆண்டுகள் பழமையான சிங்க மனிதன் சிலை கிடைத்தது உண்மையே. ஆனால், அந்த சிலை இந்து மதத்தைச் சேர்ந்த நரசிம்மர் சிலை என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை. சிங்க மனிதன் சிலை குறித்து வெளியான தகவலில் நரசிம்ம அவதாரம் குறித்து தகவல்கள் ஏதுமில்லை.

2018-ல் வெளியான வார புத்தகத்தின் பக்கத்தில் ஜெர்மனியின் குகையில் இருந்து சிங்க மனிதனின் சிலை எடுக்கப்பட்ட தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த சிலையையும், நரசிம்ம அவதாரத்தையும் ஒற்றுமைப்படுத்தி வெளியிட்ட கட்டுரை குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அந்த புத்தகத்தில் மேற்கு வங்கத்தின் இஸ்கான் மயப்பூர் கோவிலில் உள்ள நரசிம்ம சிலையின் புகைப்படத்தையும் அச்சிட்டு உள்ளனர்.

விஷ்ணுவின் அவதாரக் கதைகளில் வரும் நரசிம்மர் மற்றும் ஜெர்மனியில் கிடைத்த சிங்க மனிதன் சிலை ஆகிய இரண்டும் சிங்கம் மற்றும் மனித உடலமைப்புடன் இருந்தாலும் அச்சிலை நரசிம்மர் சிலை என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரமில்லை. மாமத் யானையின் தந்ததில் செய்யப்பட்ட அச்சிலை 40,000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த மனிதர்கள் விட்டுச் சென்ற உலகின் பழமையான தொல்பொருள். இந்து மத நம்பிக்கைக் கொண்ட இணையதளங்களில், பதிவுகளில் மட்டுமே இப்படி தவறான தகவலை முன்னிறுத்தி பதிவிட்டு உள்ளனர்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button