ஜெர்மனி சாலைகளில் கார்களை நிறுத்தி பிரம்மாண்ட போராட்டமா ?

பரவிய செய்தி
ஜெர்மனியில் எரிபொருள் விலையை அந்நாட்டு அரசாங்கம் உயர்த்தியது. விலை உயர்த்தப்பட்ட சில மணி நேரங்களில் மக்கள் தாங்கள் சென்று கொண்டு இருந்த தெருக்களில் கார்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து நடந்தே வீடுகளுக்கு சென்று விட்டனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான கார்கள் வீதிகளில் நிறுத்தப்பட்டதன் விளைவால் அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்து விட்டது.
மதிப்பீடு
சுருக்கம்
சீனாவில் நிகழ்ந்த போக்குவரத்து நெரிசலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜெர்மனியில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் என தவறான தகவலுடன் இணையத்தில் பகிரப்படுகிறது.
விளக்கம்
இந்தியாவில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வது போன்றே ஜெர்மனியில் அந்நாட்டு அரசு எரிபொருள் விலையை உயர்த்திய போது அவர்கள் கண்டனம் தெரிவிக்கவோ, அரசுக்கு எதிராக போராடவோ இல்லை. அவர்கள் பயணித்த கார்களை சாலையில் செல்லும் இடத்தில் நிறுத்தி விட்டு சென்றால் ஆயிரக்கணக்கான கார்கள் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன. இதனால், நெருக்கடிக்கு உள்ளான ஜெர்மனி அரசு எரிபொருள் விலையை குறைத்து விட்டதாக ஓர் தகவல் பரவி வருகிறது.
இச்செய்தியுடன் கார்கள் நிறைந்த படமானது சமூக வலைத்தளங்களில் நீண்ட காலமாக பெரிய அளவில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இருப்பினும், ஜெர்மன் நாட்டில் எரிபொருள் விலையைக் கண்டித்து இவ்வாறான சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என்பதே உண்மை.
வாகனங்கள் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் நிகழ்வானது 2012 ஆம் ஆண்டில் செப்டம்பர் 30-ம் தேதி சீனாவில் நடைபெற்றப் போக்குவரத்து நெரிசலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே..!! சீனாவில் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட ஏழு நாள் தேசிய தின கொண்டாட்டத்திற்காக விடுமுறைக்கு பல பகுதிகளுக்கு மக்கள் பயணித்துள்ளனர். அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 750 மில்லியன் மக்கள் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
” விடுமுறை நாட்களை கழிக்க வேகவேகமாக சென்ற கார்கள் அந்நாட்டின் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் பெய்ஜிங்-ஹாங்காங்-மக்காவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல் கேட் பகுதியில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலை சந்தித்தது. சீனாவில் நடைபெற்ற விழாவிற்கு 125 இடங்களை சேர்ந்த 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சீனாவிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது “.
ஜெர்மனியில் எரிபொருள் விலைக்கு மக்கள் போராடவில்லை என்று கூறுவது தவறு. அந்நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்த பொழுது வாகனங்களில் அதற்கான கண்டனங்கள் இடம்பெற்றன. ஆனால், இணையத்தில் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட தவறான தகவல். அது சீனாவில் நடைபெற்ற போக்குவரத்து நெரிசல் மட்டுமே..!!
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருந்தாலும் ஆறுதலுக்காக மட்டுமே பைசா கணக்கில் விலை குறைப்பு செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை உயர்விற்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்களும், போராட்டங்களும் அதிகம் நிகழ்ந்தாலும் அவற்றால் எப்பயனும் இல்லை என்பது மக்களின் கருத்து.