This article is from Sep 01, 2019

ஜெர்மனியில் 800 கோடி மதிப்பில் காமாட்சி அம்மன் ஆலயமா ?

பரவிய செய்தி

ஜெர்மனியில் 800 கோடி செலவில் ஶ்ரீகாமாட்சி அம்மன் திருகோயில். மிக வேகமாக வளரும் இந்து மதம்.

மதிப்பீடு

விளக்கம்

ஜெர்மனி நாட்டில் ரூ.800 கோடி மதிப்பில் ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயில் கட்டப்பட்டுள்ளதாக பல்வேறு முகநூல் பக்கங்கள் மற்றும் கணக்குகளில் கோவில் தொடர்பான ஆவணப்படத்தின் வீடியோ வெளியாகி வருகிறது. முதலில் ஜெர்மன் நாட்டின் காமாட்சி அம்மன் கோவில் பற்றியும், அந்த கோவிலின் மதிப்பு பற்றியும் தொடர்ந்து காண்போம்.

காமாட்சி அம்மனுக்கு என தனித்துவமான கோவில் ஒன்று ஜெர்மனி தேசத்தில் அமைக்கப்பட்டு இருப்பதை இங்குள்ள பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அங்கோ தமிழகத்தில் ஒரு அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாவை போன்று வெகு விமர்சையாக வழிபாடுகள் நடத்தி வருகிறார்கள்.

அமைந்துள்ள இடம் :

ஜெர்மன் நாட்டின் மேற்கு மாநிலமான நோட்டைன் வெஸ்ட் பேலியா மாநிலத்தில் உள்ள ஹம் நகரின் எல்லைக்குள் சுமார் 10 கி.மீ தொலைவில் அமைதியாக அமைந்து இருக்கும் உன்ட்ராப் கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் அமைந்து உள்ளது.

ஹம் நகரில் அமைந்து இருக்கும் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் ஐரோப்பியாவில் உள்ள மிகப்பெரிய இந்து ஆலயமாகக் கருதப்படுகிறது. அத்தகைய கோவிலுக்கு உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல் பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.

கட்டிடக்கலை :

இக்கோவிலின் கட்டிடக்கலையானது முழுக்க முழுக்க தென்னிந்திய கோவில்களின் கட்டிடக்கலை வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 1999-ம் ஆண்டு கோவிலின் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு 2002-ம் ஆண்டு கோவில் பணிகள் முழுமையடைந்தன. கோவிலின் கட்டுமானப் பணிகள் Hammer architect Heinz -Rainer Eichhorst நிறுவனத்தின் மூலம் நடைபெற்றது. இந்த கோவிலின் வடிவமைப்பு காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலை போன்று உருவாக்க முயற்சித்து உள்ளனர்.

கோவிலின் முக்கிய கடவுளின் சிலையானது க்ரானைட் கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் அதனை தமிழகத்தில் இருந்து கொண்டு சென்றுள்ளனர். இக்கோவிலில் 200-க்கும் அதிகமான தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

1980-களில் ஈழத்தில் நடைபெற்ற உள்நாட்டு போரால் அங்கிருந்து வெளியேறிய தமிழ் அகதிகள் ஜெர்மனியில் குடியேறினார்கள். தற்பொழுது ஜெர்மனியில் உள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கை தோராயமாக 40,000-ஐ தாண்டும். ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோவில் ஈழத்தமிழர்கள் மூலம் கட்டப்பட்டது எனக் கூறலாம்.

இலங்கையில் இருந்து ஜெர்மனியில் குடியேறிய ஈழத் தமிழரான சிவ பாஸ்கரன் என்பவரின் அயராத முயற்சியின் பலனே ஜெர்மன் ” ஸ்ரீ காமாட்சி அம்மன் ” கோவில். அத்தகைய கோவிலில் ” தமிழ் பாடல்கள் ” ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

சிவ பிரகாசம் உடைய நீண்டகால முயற்சியின் பலமாக ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் உருவாகியது. கோவிலின் கட்டுமானத்திற்கு 1.3 மில்லியன் யூரோவை பாஸ்கரன் அளித்து உள்ளதாக கூறப்படுகிறது. கோவிலுக்காக பலரும் பொருளுதவி அளித்து உள்ளனர்.

திருவிழா காலங்களில் காவடி, தீ சட்டி தூக்குவது, பல்லாக்கில் அம்மனை தூக்கிக் கொண்டு வலம் வருவது உள்ளிட்ட வழக்கமும் உள்ளது. மேலும், 30,000 பக்தர்கள் செல்லும் கோவிலின் திருவிழாவில் தேர் ஊர்வலமும் ஆரவாரமாய் நடைபெறுகிறது.

முடிவு :

நம்முடைய தேடலில், ஜெர்மனி நாட்டில் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகைத் தருகின்றனர்.

ஆனால், 800 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டது எனக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. கோவில் உருவாகி 17 ஆண்டுகளை கடந்து உள்ளது. 800 கோடியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்டதாக உறுதியான தகவல்கள் இல்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader