This article is from Feb 18, 2021

இந்திய விவசாயிகளுக்காக ஜெர்மனியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியா ?

பரவிய செய்தி

டில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனியில் நடந்த டிராக்டர் பேரணி.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் மாதக்கணக்கில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனி நாட்டில் டிராக்டர் பேரணி நடைபெற்றதாக எம்.டி. ஜுவரியா கயல் என்பவரின் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட 18 நொடிகள் கொண்ட வீடியோ 17 ஆயிரத்திற்கும் மேல் ஷேர் ஆகி வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

ஜெர்மனியில் நடைபெற்ற டிராக்டர் பேரணி குறித்து தேடுகையில், Ruptly செய்தி சேனலில் 2021 பிப்ரவரி 5-ம் தேதி ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி தொடர்பான காட்சிகள் அடங்கிய 3 நிமிட வீடியோ வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் ஜெர்மனியின் தலைநகரில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியது உண்மைதான். ஆனால் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. அந்த நாட்டில் கொண்டு வரப்பட்ட புதிய வேளாண் கொள்கைக்கு(பூச்சிகள் பாதுகாப்பு தொடர்பாக) எதிராகவே.

பிப்ரவரி 10-ம் தேதி thelocal.de எனும் செய்தியில், ” பூச்சிக்கொல்லிகளின் பயன்படுபாட்டை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் ” பூச்சிகள் பாதுகாப்பு ” சட்ட வரைவிற்கு எதிராக நூற்றுக்கணக்கான விவசாயிகள் பெர்லினுக்குள் டிராக்டர்களை ஓடிச் சென்றதாக ” வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : இது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா ?

இதற்கு முன்பாகவும், ஜெர்மனியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் பழைய புகைப்படங்களை இந்தியாவில் நிகழ்ந்தாகவும், இந்தியாவிற்கு ஆதரவாக நிகழ்ந்ததாகவும் தவறாக பரப்பி இருந்தனர். அதுகுறித்து படிக்கவும்.

முடிவு : 

நம் தேடலில், டெல்லியில் போராடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனியில் டிராக்டர் பேரணி நடைபெற்றதாக வைரல் செய்யப்படும் வீடியோ தவறானது. ஜெர்மனியில் கொண்டு வந்த வேளாண் தொடர்பான கொள்கைக்கு எதிராக பெர்லினில் நடைபெற்ற டிராக்டர் பேரணி என அறிய முடிந்தது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader