ரம்ஜானுக்கு மசூதியை பரிசாக அளித்த பஞ்சாப் கிராம மக்கள்.

பரவிய செய்தி
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சீக்கியர்கள் மற்றும் ஹிந்துகள் ஒன்றிணைந்து முஸ்லீம் மக்களுக்கு ரம்ஜான் பரிசாக மசூதி ஒன்றை வழங்கியுள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
மே, 2017 -ல் பஞ்சாப் கிராமத்தில் இருக்கும் முஸ்லீம் மக்கள் இறை வழிபாடு செய்வதற்காக மசூதி அமைக்கப்பட்டது அங்குள்ள சீக்கியர்கள், ஹிந்துகள், முஸ்லீம்களின் மத நல்லிணக்கத்தை பறைசாற்றுகிறது.
விளக்கம்
காலிப் ரான் சிங்க் வாள் என்ற கிராமம் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் மக்கள் தொகையில் சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்ணிக்கை அதிகம். 1300 பேரைக் கொண்ட இந்த கிராமத்தில் 700 சீக்கியர்கள், 200 ஹிந்துக்கள் மற்றும் 150 முஸ்லீம்கள் உள்ளனர். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போதே முஸ்லீம் மக்கள் இங்கு வாழத் தொடங்கியுள்ளனர். இக்கிராமம் பல்வேறு இன மக்கள் வாழும் பகுதியாகவும், மற்றவர்களுக்கு மதிப்பு அளிக்கும் உள்ளம் கொண்டவர் இருக்கும் இடமாகவும் திகழ்கிறது.
நாட்டில் மதம், சாதி சார்ந்த வேறுபாடுகள், கலவரங்கள் அதிகம் நிகழ்வதால் ஒவ்வொரு மதம் சார்ந்தவர்களின் இறை வழிபாடு செய்யும் இடங்கள் அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. காலிப் ரான் சிங்க் வாள் கிராமத்தில் வசித்து வரும் முஸ்லீம் மக்கள் தங்களின் இறை வழிபாடான “ தொழுகை ” செய்ய மசூதி இன்றி வேதனையுடன் இருந்து வந்துள்ளனர். தொழுகைக்காக பல கிலோமிட்டர் தொலைவில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் நிலையிலேயே வாழ்ந்துள்ளனர். கிராமத்தில் மசூதி அமைக்க வேண்டும் என்பது பலநாள் கோரிக்கையாகவும் இருந்து வந்துள்ளது.
1998-ல் கிராமத்தில் மசூதி அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எழுந்தது. அதன்பிறகு கிராம பஞ்சாயத்தில் அனைத்து மக்களின் ஒருமித்த ஆதரவோடு மசூதி அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், 2016 ஆம் ஆண்டின் மே மாதத்தில் தான் மசூதி அமைப்பதற்கான பணிகள் கிராம மக்களின் ஒற்றுமையால் துவங்கியது. இதன் பிறகே அக்கிராமத்தில் வசிக்கும் சீக்கியர்கள், ஹிந்துக்கள் என அனைத்து சமூகத்தினரும் தங்களால் முயன்ற நிதி வழங்குவது, கட்டிடப் பணிகளில் வேலை செய்வது போன்ற உதவிகளை செய்து அழகிய மசூதி ஒன்றை 2017 மே மாதத்தில் கட்டியுள்ளனர்.
தங்களுடன் வசித்து வரும் முஸ்லீம் மக்களுக்கு பரிசாக ஹஸ்ரத் அபு பக்கர் என்ற மசூதியை அவர்களின் புனித நாளான ரம்ஜான் பரிசாக வழங்கி மத நல்லிணக்கத்தை உலகறியச் செய்துள்ளனர் அக்கிராம மக்கள். இந்த மசூதி கிராம மக்களின் அன்பின் நினைவு சின்னமாகும்.
ரம்ஜான் பரிசு பற்றி அங்கு வசிக்கும் முஸ்லீம் மக்கள் கூறுகையில், “ எங்களின் நீண்ட நாள் கோரிக்கை கிராம மக்களின் ஒற்றுமையால் சாத்தியமாகியுள்ளது. இது எங்களின் மனதை நெகிழ வைத்துள்ளது மற்றும் கிராமத்தில் மக்களிடையே உள்ள சகோதரத்துவத்தை குறிக்கிறது. இத்தகைய மிகவும் அழகான மசூதி ரம்ஜான் பரிசாகக் கிடைத்துள்ளது. நாங்கள் தொழுகை செய்ய இடம் கிடைத்து விட்டது” என்று மனம் மகிழ்வு கொள்ள கூறியுள்ளனர்.
மதங்கள் இறை நம்பிக்கையின் வழியாக மனிதனை நல்வழிப்படுத்தவே உருவாகின. ஆனால், சிலரின் மதவெறி என்னும் புற்றுநோயால் இந்திய தேசம் பாதிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கம் மற்றும் மனித நேயம் போன்ற மருந்துகளே மதவெறியில் இருந்து தேசத்தை மீட்டெடுக்க வழிவகை செய்யும். மத நல்லிணக்கத்தை புரிய வைத்த பஞ்சாப் கிராம மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.