This article is from Feb 22, 2018

கானா நாட்டின் பள்ளிக்கு இலவசமாக கணினி வழங்கியது Microsoft இல்லையாம் !

பரவிய செய்தி

ஆப்ரிக்கா நாடான கானாவில் உள்ள பள்ளி ஒன்றில் கரும்பலகையில் விண்டோஸ் பற்றி வரைந்து பாடம் நடத்தும் ஆசிரியரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் விளைவால், மைக்ரோசாப்ட் நிறுவனம் அந்த பள்ளிக்கு 5 கம்ப்யூட்டர்களை இலவசமாக வழங்கியுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

கானா நாட்டின் பள்ளி ஆசிரியர் அப்பையா, மாணவர்களுக்கு விண்டோஸ் பற்றி வரைந்து பாடம் நடத்தி வருவதை அறிந்து அப்பள்ளிக்கு இலவசமாக கம்ப்யூட்டர்கள் வழங்கியது என்.ஐ.ஐ.டி நிறுவனம்.

விளக்கம்

ப்ரிக்கா கண்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது கானா என்ற நாடு. கானா நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் word ப்ரோசெசிங் விண்டோஸ் குறித்த பாடத்தை கணினி இல்லாமல் கரும்பலகையில் வண்ண சாக்பீஸ் வைத்து வரைந்து பாடம் நடத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மாணவர்களும் கரும்பலகையில் இருப்பதை தங்களது நோட்டுகளில் வரைந்து கற்றுக் கொண்டு வருகின்றனர்.

33 வயதான ரிச்சர்ட் அப்பையா அகோடோ, செக்யிடோமஸ் நகரில் உள்ள பெட்டேனாஸ் எம்/ஏ ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப(ஐ.சி.டி) ஆசிரியராக 6 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இப்பள்ளி தொடங்கிய 2011 ஆம் ஆண்டில் இருந்தே கணினி வசதிகள் ஏதுமில்லாமல் இருந்து வந்துள்ளது. ஆனாலும், 14 முதல் 15 வயதுடைய மாணவர்கள் ஐ.சி.டி பாடப் பிரிவின் அக்கரா (கானா தலைநகர்) பொதுத் தேர்வுகளில் வெற்றி பெறவும் செய்துள்ளனர்.

பள்ளியில் கணினி வசதி இல்லையென்றாலும் “ விண்டோஸ் வேர்டு ” பற்றிய பாடத்தை கரும்பலகையில் வரைந்தே மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார் அப்பையா. இந்நிலையில், மாணவர்களுக்கு “ விண்டோஸ் வேர்டு ” பற்றி வரைந்து பாடம் எடுக்கும் புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அது எதிர்பாராத விதத்தில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது.

“ நான் வரைந்து பாடம் எடுப்பது இது முதல் முறை அல்ல. இதை பலமுறை வகுப்பறையில் செய்து வந்துள்ளேன். நான் செய்வதை படமெடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்வது எனக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனால், என்னுடைய செயல் மக்களுக்கு பிடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ” என்று அப்பையா கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு கணினி பற்றிய பாடத்தை கற்பிக்க அப்பையா எடுத்த முயற்சி கானாவில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு முன்னுதாரனமாகியது. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அப்பையாவை “Owura Kwadwo Hottish “ என்ற செல்லப் பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.

கானா பள்ளி ஆசிரியர் பற்றி அறிந்த பல அமைப்புகள் அப்பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, கானாவில் உள்ள என்.ஐ.ஐ.டி(NIIT) நிறுவனம், அப்பள்ளிக்கு நேரில் சென்று அப்பையாவை பாராட்டியும், மாணவர்கள் கணினி பற்றி கற்றுக் கொள்ள 5 கம்ப்யூட்டர்கள், 1 லேப்டாப் மற்றும் சில கணினி சார்ந்த புத்தகங்களை இலவசமாக வழங்கியுள்ளனர்.

akoto

என்.ஐ.ஐ.டி நிறுவனம் உதவி புரிவதற்கு முன்பாகவே,  இங்கிலாந்தின் University of leeds-ஐ சேர்ந்த கொடையாளியான அமிராஹ் அல்ஹார்த்தி என்பவர் கானா நாட்டின் பெட்டேனாஸ் எம்/ஏ ஜூனியர் உயர்நிலைப் பள்ளிக்கு லேப்டாப் ஒன்றை நன்கொடையாக வழங்கி உள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மாணவர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அப்பையா.

இதற்கிடையில், கானா பள்ளிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் இலவசமாக கம்ப்யூட்டர்கள் வழங்கியதாக சில செய்திகள் பரவி வருகிறது. அப்பள்ளிக்கு இலவசமாக கம்ப்யூட்டர்கள் வழங்கியது என்.ஐ.ஐ.டி நிறுவனம். எனினும், கானா பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இருப்பதாக மைக்ரோசாப்ட் ஆப்ரிக்கா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ” மைக்ரோசாப்ட் நிறுவனம் கானாவின் பெட்டேனாஸ் எம்/ஏ ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் முழு கணினி லேப்  அமைத்து முதற்கட்ட ஆதரவு மற்றும் பள்ளிக்கு தேவையான பயிற்சி அளிக்க முடிவெடுத்து, தற்போது கானாவின் கல்வி அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.  இதன் மூலம் மிகவும் பயனுள்ள வழியில் மாணவர்களுக்கு வழங்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.

கணினி இல்லையென்றால் என்ன ? கற்க நீ தயாராக இருந்தால் கற்று தர நான் தயார் என்ற நோக்கத்தில் மாணவர்களின் கல்விக்காக சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார் கானாவின் ஆசிரியர் அப்பையா.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader