கஜினி முகமது படையெடுப்பை பிருத்விராஜ் சௌஹான் தடுத்ததாகப் பரப்பப்படும் தவறான தகவல் !

பரவிய செய்தி
18 முறை படையெடுத்து வந்த கஜினி முஹம்மது பற்றிய வரலாறு மட்டும் இருக்கிறது… அவனை 17 முறை செருப்பால அடித்து விரட்டிய ப்ரித்விராஜ் சவ்கன் வரலாறு மறைக்கப்பட்டது ஏன்??யாரால??
Twitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
இந்துஸ்தான் மீது 18 முறை படையெடுத்த கஜினி முகமதுவை 17 முறை மன்னர் பிருத்விராஜ் சௌஹான் தடுத்து விரட்டி அடித்ததாகவும், அந்த வரலாறு மறைக்கப்பட்டு வருவதாகவும் இப்பதிவு சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
கஜினி முகமது வரலாறு குறித்து தேடுகையில், ஒன்றிய அரசின் NCERT கீழ் வரும் 11ம் வகுப்பு வரலாற்று புத்தகத்தின் பாடம் 5 (Chapter 5 – The Age OF Conflict)ல், கஜினி முகமது ஆட்சி காலம் ஆனது கி.பி. 998 முதல் கி.பி 1030 வரை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. துருக்கியர் வழி வந்த கஜினி முகமதுவின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஈரான், மத்திய ஆசிய, மேற்கத்திய நாடுகளின் பகுதியில் இடம்பெற்று இருந்துள்ளன.
அடுத்ததாக, சௌஹான் வம்சத்தை சேர்ந்த மன்னர் பிருத்விராஜ் சௌஹான் ஆட்சி காலம் கி.பி 1168 முதல் கி.பி 1192 வரை என NCERT புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஜ்மெரை தலைமையிடமாகக் கொண்ட பகுதியை அவர் ஆட்சி செய்து உள்ளார். இவர்கள் இருவரின் ஆட்சி காலமானது முரண்பாடாக உள்ளதை தெளிவாக அறிய முடிகிறது.
பிருத்விராஜ் சௌஹானின் சமகால துருக்கிய அரசராக இருந்தவர் முகமது கோரி. இவர்கள் காலத்தில் நடைபெற்ற முக்கிய இரண்டு போர்களில் முதல் தாரைன் போர் கி.பி 1191ல் பிருத்விராஜ் சௌஹான் வெற்றிப் பெற்றார். ஆனால், இரண்டாம் தாரைன் போர் கி.பி 1192ல் கோரி வெற்றிப் பெற்றார். இதன் பின்னர், பிருத்விராஜ் சௌஹான் கி.பி 1192ல் மரணம் அடைந்தார். இதை மையமாக வைத்து நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் திரைப்படமும் எடுக்கப்பட்டது.
இந்துஸ்தான் மீது கஜினி முகமது காலத்தில் 18 முறை நடத்தப்பட்ட படையெடுப்புகளின் போது எதிர்த்துப் போரிட்டவர்களில் ஜெயா பால, ஆனந்த பால ஆகிய மன்னர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. கஜினி முகமதுவின் 18 முறை படையெடுப்புகள் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது.
முடிவு :
நம் தேடலில், கஜினி முகமதுவின் 18 முறை படையெடுப்பில் 17 முறை மன்னர் பிருத்விராஜ் சௌஹான் விரட்டி அடித்ததாகப் பரப்பப்படும் தகவல் தவறானது. கஜினி முகமது இறந்து ஒரு நூற்றாண்டிற்கு பிறகே பிருத்விராஜ் சௌஹான் பிறந்துள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.