This article is from Nov 15, 2019

சிங்கப்பூரில் மரத்தின் உச்சியில் பெண் உருவில் பேயா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

சிங்கப்பூர் தானமேரா ரயில் நிலையம் அருகில் அடர்த்த காட்டு பகுதியில் பெண் உருவில் பேய் ஒன்று மரத்தில் மேல் நிற்பதை பாருங்க.

மதிப்பீடு

விளக்கம்

சிங்கப்பூரில் உள்ள தானமேரா ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் அடர்ந்த காட்டுப் பகுதியில் பெண் உருவில் பேய் ஒன்று மரத்தின் உச்சியில் நிற்பதை பாருங்கள் என ஓர் வீடியோ முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில், மரத்தின் உச்சியில் பெண் உருவம் ஒன்று நிற்பதும், ஆடுவதுமாக இருக்க, திகில் படங்களில் வரும் பேய்க்கான இசையை பின்னணியில் இணைத்து இருக்கின்றனர். Ajith raja என்பவர் மரத்தில் பேய் இருப்பதாக கூறும் வீடியோவை சில முகநூல் குழுக்களில் பகிர்ந்து உள்ளார்.


Twitter link | archived link  

இத்தகைய வீடியோ தமிழில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் பரவி இருந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. பிற மாநிலங்களில் பரவிய வீடியோவுடன் மலேசிய நாட்டில் உள்ள மரத்தில் பேய் இருப்பதாக இணைத்து இருந்தனர்.

உண்மை என்ன ? 

மரத்தின் உச்சியில் பேய் இருப்பதாக கூறி பகிரப்பட்டு வரும் வீடியோக்களின் கமெண்ட்களில் பலரும் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர். எனினும், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, அதில் இருப்பது என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள தீர்மானித்து ஆராய்ந்து பார்த்தோம்.

Facebook link | archived link 

அதில், மரத்தில் இருப்பது பேய் அல்ல, பெண் என்பதை அறிய முடிந்தது. இந்தியா முழுவதும் பரவிய வீடியோ குறித்து செப்டம்பர் 5-ம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள நியூஸ்24 என்ற ஹிந்தி சேனல் வெளியிட்ட வீடியோவில் மரத்தில் இருப்பது பெண் என்பதையும், அவர் மரத்தின் உச்சியில் ஏறுவது, இருப்பது உள்ளிட்ட காட்சிகளையும் வெளியிட்டு இருக்கின்றனர்.

மத்தியப் பிரதேசத்தின் ராட்லம் நகரைச் சேர்ந்த பெண் திடீரென மரத்தின் மேலே ஏறி அதன் உச்சியில் நின்றுக் கொண்டு சில மணி நேரம் கையை அசைத்து, நடனமாடிக் கொண்டு இருந்துள்ளார். அந்த பகுதியில் மரங்களுக்கு அருகே தர்கா இருக்கிறது. அந்த பெண் மரத்தின் மீது ஏறி வணங்கியதாகவும், மன்னிப்பு கோரியதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்து உள்ளனர்.

ஒரு பெண் மரத்தின் உச்சியில் நின்றது அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அங்குள்ளவர்கள் அதனை செல்போனில் படம் பிடித்து சாகச காட்சிகள் என இணையத்தில் பதிவிட, அந்த வீடியோ பேய் என தவறாக பரவி விட்டது.

மேலும் படிக்க : பட்டப்பகலில் மரத்தில் பேயா !!

கடந்த ஆண்டுகளில் ஒடிசாவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மரத்தின் உச்சியில் ஏறிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து மரத்தில் பேய் இருப்பதாக வதந்திகளை பரப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம்முடைய தேடலில், சிங்கப்பூரில் உள்ள அடர்ந்த காட்டில் இருக்கும் மரத்தின் உச்சியில் பெண் உருவில் பேய் இருப்பதாக பகிரப்பட்டு வரும் வீடியோ தவறானவையே. அந்த வீடியோ மத்தியப் பிரதேச மாநிலத்தில் தர்கா அருகில் இருந்த மரத்தின் மீது பெண் ஒருவர் ஏறி இருந்த பொழுது எடுக்கப்பட்டவை.

Please complete the required fields.




Back to top button
loader