பட்டப்பகலில் மரத்தில் பேயா !!

பரவிய செய்தி
பட்டப்பகலில் மரத்தின் உச்சியில் நின்றுக் கொண்டிருந்த பேய், பீதியில் மக்கள். இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ.
மதிப்பீடு
விளக்கம்
இறந்தவர்களின் ஆன்மாக்கள் பூமியில் சுற்றி வருகிறது என்ற நம்பிக்கை நீண்ட காலமாக மக்கள் மனதில் உள்ளது. அதிலும், சிறு வயதில் இருந்து தற்கொலை, விபத்து, கொலை என பாதி வாழ்க்கையில் நிறைவேறாத ஆசையுடன் இறப்பவர்கள் நிச்சயம் ஆவியாக அலைவார்கள் என்றெல்லாம் கேட்டு இருப்போம். அதையே தான் சினிமா படங்களும் பிரதிபலிக்கின்றன.
உச்சி வெயில், நடு இரவில் வெளிய போகாத காத்துக் கருப்பு அடிச்சுரும் என்பது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கூறும் அறிவுரைகள். எனினும், இயற்கையாக இறந்தவர்களுக்கு முறையான காரிய சடங்குகள் செய்தால் அவர்கள் ஆன்மா சாந்தி அடையும், பேயாக அலைய மாட்டர்கள் என்ற நம்பிக்கை நம் மக்கள் மனதில் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது.
என்ன பாஸ்! இந்த காலத்துல பேய் பிசாசுன்னு நம்பிட்டு இருக்கீங்க என கெத்தாக கூறும் யாராக இருந்தாலும், ராத்திரி நேரத்தில ஒரு அமைதியான இடத்தில தனிமையில் செல்லும் பொழுது மனதில் ஒருவித அச்சறுத்தல் இருக்க தான் செய்யும். வீரவசனம் பேசுறவங்க முக்கால்வாசி பேர் தனியா இருக்க பயப்படுறவங்க தான்.
ராத்திரி நேரத்தில சரி ஆனா, இங்க பகல் நேரத்தில உச்சி வெயில் அடிக்கும் போது ஒரு மரத்தோட உச்சியில் பெண் உருவத்தில் பேய் நிற்பதை கண்டு ஊர் மக்களே பீதியில் இருக்காங்க. மரத்தின் உச்சி கிளையில் பேய் நிற்பதாகவும், உச்சி வெயில் நேரத்தில் வீடியோ எடுத்ததால் மக்கள் பீதியிலும், குழப்பத்திலும் உள்ளனர் என்றுக் கூறி இந்த வீடியோ பதிவு வலைத்தளங்களில் வைரலாகி இருக்கு.
மர உச்சியில் ஒரு பெண்ணால் எவ்வாறு ஏறி நிற்க இயலும். அதனால் பேய் தான் நிற்கிறது என்றுக் கூறி சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் வீடியோ எடிட் செய்திருக்கிறதாக தெரிவித்தனர் ஆனால், மரத்தின் உச்சியில் நிற்பது பேயா.! அல்லது எடிட்டிங்கா ! என்ற குழப்பம் நீங்க விடைக் கிடைத்து உள்ளது.
சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ ஒடிசா மாநில கிராமம் ஒன்றில் மரத்தின் உச்சியில் ஏறி நின்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் வெளியாகியுள்ளது. மேலும், அந்த வீடியோவின் இறுதிக் காட்சியில் பெண் மரத்தில் ஏறுவதை காண முடிகிறது. வீடியோவில் இடம்பெற்ற பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். மேலும், அப்பெண்ணின் செயலால் ஊரில் மிகப்பெரிய கூட்டமே கூடியுள்ளதையும் காண முடிகிறது ”.
மேலே உள்ள முழு வீடியோவில் அந்தப்பெண் மரத்திலிருந்து தானே கீழே இறங்கி வந்து அழுகிறார். மிகவும் மனநிலை பாதிப்படைந்த நிலையில் காணப்படுகிறார். மேலும், அப்பெண்ணின் செயலால் ஊரில் மிகப்பெரிய கூட்டமே கூடியுள்ளதையும் காண முடிகிறது ”.
ஆக, பேயா!! எடிட்டிங்கா!! என விடை அறியாமல் வைரலாகி வரும் வீடியோவில் இருப்பது பேயும் இல்லை எடிட்டிங்கும் இல்லை. மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்று நிரூபணமாகியுள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது பேய் என்றுக் கூறி வீடியோ வைரலாகிய அதே சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்ட அருமையான கருத்தான, “பேய்க்கு கால் இல்லன்னு சொன்னாலும் நம்புவான், அதேநேரத்தில பேய் வரும் போது கொலுசு சத்தம் கேட்கும்னு சொன்னாலும் நம்ம ஆட்கள் நம்புவார்கள் ” என்பதே நினைவிற்கு வருகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.