கோவாவில் பசுவை விரட்டிய வெளிநாட்டு பெண்ணை சங்பரிவார்கள் தாக்கும் வீடியோவா ?

பரவிய செய்தி

கோவாவில் உல்லாச சுற்றுலா பயணிகளின் மீது இந்துத்துவா சங்பரிவார்கள் சரமாரியாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்த பெண்ணின் பொருட்களின் மீது உபத்திரம் செய்ய வந்த ஒரு பசு மாட்டை விரட்டியடிக்க முற்பட்டதால், அந்த வெளிநாட்டு பெண்ணின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இறுதியில் வெளிநாட்டினர்கள் அனைவர்களும் தாக்கப்பட்டார்கள்.

மதிப்பீடு

விளக்கம்

கோவாவிற்கு வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வந்த பெண்ணின் பொருட்களை அசுத்தம் செய்ய வந்த பசு மாட்டை விரட்டியடிக்க முயன்ற போது, அப்பெண் மட்டுமின்றி அங்கிருந்த வெளிநாட்டினர்கள் அனைவரையும் சங்பரிவார்கள் தாக்கியதாக 2 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?  

இந்தியாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் இந்துத்துவா அமைப்பினரால் தாக்கப்பட்டு இருந்தால் இந்திய அளவில் பரபரப்பான செய்திகளாக வெளியாகி மாறி இருக்கும் . மேலும், வைரல் வீடியோவில் தாக்குதலை நடத்தும் நபர்கள் இந்துத்துவா அமைப்பினரைப் போல் இல்லை, அங்கிருப்பவர்கள் அனைவரும் கடற்கரைக்கு ஏற்றவாறு உடையணிந்து இருக்கிறார்கள்.

ஆகையால், வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், கோவாவின் பாகா கடற்கரைப் பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் அங்கிருந்த இந்தியர்களிடம் சண்டையிடுவதாக 2016-ல் யூடியூப் சேனல் ஒன்றில் பதிவாகி இருக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டு கோவாவில் பசு மாட்டை விரட்டியதன் காரணமாக சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் இதே வீடியோ வைரலாகிய போது ஏபிபி செய்தியில், ” இந்த வீடியோ கோவாவில் எடுக்கப்பட்டது, ஆனால் பழைய வீடியோ. இது கடந்த 2012-ல் இருந்தே யூடியூபில் பதிவாகி இருக்கிறது. சுற்றுலா வந்த வெளிநாட்டவர்கள் அங்கிருந்த உணவகத்திற்கு சொந்தமான பெஞ்சுகளை பணம் செலுத்தாமல் பயன்படுத்தியதால் உணவகத்தின் உரிமையாளருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் உருவாகியது. பொதுவாக கோவாவில் உணவகத்தில் உணவு அல்லது பானங்களை ஆர்டர் செய்தவர்கள் அல்லது பணம் கொடுத்து உணவகத்திற்கு வெளியே உள்ள பெஞ்சுகளை பயன்படுத்த முடியும் ” என வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், கோவாவிற்கு வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்த பெண்ணின் பொருட்களின் மீது உபத்திரம் செய்ய வந்த ஒரு பசு மாட்டை விரட்டியடிக்க முற்பட்டதால் இந்துத்துவா சங்பரிவார்கள் சரமாரியாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர் எனப் பரப்பப்படும் வீடியோ தவறானது.

இது கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக கோவா கடற்கரை அருகே உள்ள உணவக உரிமையாளருக்கும், வெளிநாட்டினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader