கோவாவில் தயாரித்து விற்பனை செய்யப்படும் டூப்ளிகேட் முந்திரி பருப்பு எனப் பரவும் வதந்தி வீடியோ !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கோவாவில் டூப்ளிகேட்(போலியான) முந்திரி பருப்பை தயாரித்து விற்பனை செய்வதாக 3 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தேய்த்து வைத்த மாவில் இருந்து முந்திரி வடிவில் சிறுது சிறிதாக பிரித்து எடுத்து எண்ணெயில் வறுத்து கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
வடமாநிலத்தவர்கள், மார்வாடிகளை குறிப்பிட்டு இந்த 3 நிமிட வீடியோ ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில், ” Spoons of Indore ” எனும் பெயர் வாட்டர் மார்க்காக வைக்கப்பட்டு இருந்தது. அதை வைத்து தேடுகையில், 2023 மார்ச் 16ம் தேதி Spoons of Indore எனும் உணவு தொடர்பான சேனலின் முகநூல் பக்கத்தில் ” செயற்கையாக காஜு எப்படி செய்கிறார்கள் ” என இவ்வீடியோ பதிவிடப்பட்டு உள்ளது.
இதுபோன்று 2020-ம் ஆண்டிலும் செயற்கையாக முந்திரி பருப்பை தயாரிப்பதாக இயந்திரத்தில் முந்திரிப்பருப்பு அச்சில் உருவாக்கப்பட்டு தனியாக எடுக்கப்படும் உணவு பொருள் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும் படிக்க : இது செயற்கையாக உருவாக்கப்படும் முந்திரிப் பருப்பு அல்ல| உண்மை என்ன ?
உண்மையில் வீடியோவில் செய்வது போலியான முந்திரி பருப்பு அல்ல. அது முந்திரிப் பருப்பு வடிவில் தயாரிக்கப்படும் உணவு பொருள்(நொறுக்குத்தீனி) என விரிவான கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
இவை முந்திரி வடிவில் இருக்கும் பிஸ்கெட்களே. வடமாநிலங்களில் சிறிய அளவில் இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். உண்பதற்கு முன்பு அவற்றை வறுக்க வேண்டும். போலியான முந்திரிப் பருப்பாக இருந்தால் அளவு, சுவை ஆகியவற்றினை உங்களால் உணர முடியும்.
வைரல் செய்யப்படும் வீடியோவில் இயந்திரத்திற்கு பதிலாக கையில் முந்திரி வடிவில் அச்சு வைத்து எடுக்கிறார். வீடியோவின் இறுதியில் பார்த்தால் அதை வறுத்து மசாலா சேர்த்து கொடுக்கிறார். இது சாலையோர உணவுக் கடையில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.
வைரல் செய்யப்படும் வீடியோவைப் பதிவிட்ட Spoons of Indore முகநூல் பதிவில் ஒருவர், இதை தங்கள் வீட்டில் செய்து பார்த்ததாக புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு இருக்கிறார்.
playfulcooking எனும் இணையதளத்தில் முந்திரி வடிவிலான பிஸ்கெட்களை எப்படி செய்வது என்ற செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், கோவாவில் செய்யப்படும் போலியான முந்திரி பருப்பு எனப் பரப்பப்படும் தகவல் வதந்தியே. வைரல் செய்யப்படும் வீடியோவில் விற்பனை செய்வது முந்திரி வடிவிலான பிஸ்கெட் உணவு பொருளே என்பதை அறிய முடிகிறது.