இதற்கு பெயர் தான் கோமாதா சங்கா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
இதற்கு பெயர்தான் கோமாதா சங்கு. பால் கறக்கவே வேண்டாம். மாட்டின் மடியில் காட்டினாலே தானாக பால் சுரக்கும் அதிசய சங்கு. வலம்புரி சங்கை விட புனிதமானது. இதை பார்ப்பதே புண்ணியம்.
மதிப்பீடு
விளக்கம்
வலம்புரி சங்கு கேள்விப்பட்டு இருப்போம், அது என்ன கோமாதா சங்கு !. இதன் பெயர் தான் கோமாதா சங்கு. பால் கறக்க வேண்டாம் அதற்கு பதிலாக மாட்டின் மடியின் கீழே இந்த சங்கை காட்டினாலே தானாக பால் சுரக்கும் . இந்த அதிசய சங்கை பார்ப்பது புண்ணியம். மேலும், வலம்புரி சங்கை விட புனிதமானது என கூறும் வீடியோ ஒன்று ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ கடந்த 2018-ம் ஆண்டிலேயே ட்விட்டர் உள்ளிட்டவையில் பதிவாகி இருக்கிறது. முகநூலில் பதிவாகி வரும் கோமாதா சங்கு குறித்த வீடியோ அதிக ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.
இதற்கு பெயர்தான் கோமாதா சங்கு ….
பால் கறக்கவே வேண்டாம் … மாட்டின் மடியில் காட்டினாலே தானாக பால் சுரக்கும் அதிசய சங்கு ….
வலம்புரி சங்கை விட புனிதமானது …. இதை பார்ப்பதே புண்ணியம் ….
அனைவருக்கும் பகவான் கிருஷ்ணர் அருள் கிடைக்கட்டும் …. pic.twitter.com/5Lt9xl3h6p
— ֆɛռTɦɨʟஆதிபன்😘😇 (@senthilaadhiban) December 4, 2018
இது உண்மையில் ஆச்சரியமான அல்லது அதிசய நிகழ்வா அல்லது எதனால் இப்படி நிகழ்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்ள ஆராய்ந்து பார்க்க தீர்மானித்து இருந்தோம்.
உண்மை என்ன ?
2018-ல் ட்விட்டரில் பதிவான 2.20 நிமிட வீடியோவில் 1 நிமிடத்திற்கு பிறகு மாட்டின் மடியில் இருந்து பால் வரும் இடத்திற்கு மட்டுமே சங்கினை கொண்டு செல்கிறார். பின்னர் சங்கை எடுத்த பிறகும் பால் வந்து கொண்டே இருக்கிறது.
இறுதியாக, சங்கை எடுத்து ஒரு காலெண்டர் உடன் காண்பிப்பதில் இருந்து தமிழகத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது. ஆனால், சங்கினை வைத்தால் பால் தானாக வரும் எனக் கூறுவது தவறானதே.
இப்படி முகநூலில் பரவிய வீடியோ பதிவின் கமெண்டில் பதிவிட்ட ஒருவர் ” கன்று ஈன்ற பிறகு ஒரு மாதம் அல்லது 40 நாட்கள் சில பசுக்களுக்கு கறைவைக்கான நேரம் வந்ததும் தானாக பால் வடிய செய்யும் . மடி கணமாக இருக்கும் பசுக்களுக்கு மட்டுமே இது பொருந்தும் ” எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பான பதிவை அனுப்பி கால்நடை மருத்துவர் பாலசுப்ரமணியன் என்பவரிடம் யூடர்ன் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு, ” இதனை நம்ப வேண்டாம். போலியான செய்தி ” என பதில் அளித்து இருந்தார்.
புதிதாய் கன்று ஈன்ற பசுவின் பால் மடி கணமாக இருக்கும் பட்சத்தில் கறவைக்கான நேரத்தில் பால் வடிவது இயற்கை. இதன் பிறகு மடியில் இருந்து பாலை கறந்தால் மட்டுமே லிட்டர் கணக்கில் பாலினை பெற முடியும். சங்கினை காண்பித்தால் அல்ல.
நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, கோமாதா சங்கு எனக் கூறி வைரலாகும் பதிவில் கூறுவது போன்று சாத்தியமில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது . பசுமாட்டின் பால் மடி அருகில் ஒரு சங்கினை வைத்து பாலை பிடிப்பதை வீடியோ எடுத்து மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.