மாநில அரசுகளின் நல்லாட்சி குறியீட்டில் தமிழ்நாடு 18வது இடமா ?

பரவிய செய்தி

மாநில அரசுகளின் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியல் ஒன்றை Good Governance Index என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அசாம் 1வது இடம், தமிழ்நாடு 18-ம் இடம்.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் உள்ள மாநில அரசுகளின் நிர்வாகம் குறித்து வெளியிடப்பட்ட நல்லாட்சி குறியீட்டு தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 18-வது இடத்தைப் பிடித்து உள்ளதாகவும், அதே பட்டியலில் பாஜக ஆளும் அசாம் மாநிலம் முதலிடம் பிடித்து உள்ளதாக ஓர் ஒப்பீடு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021-ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை டிசம்பர் 25-ம் தேதியன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டதாக Pib.gov-ல் வெளியாகி இருக்கிறது. இதில், நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் ஏ குழு மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாகவும் இடம்பெற்று இருக்கிறது.

மாநிலங்களின் நல்லாட்சிக் குறியீடு ஆனது, விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகள், வணிகம் & தொழில்கள், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிர்வாகம், சமூக நலன் & மேம்பாடு, நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை என 10  துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது.

அதுமட்டுமின்றி இந்த நல்லாட்சிக் குறியீடு 2020-2021 ஆனது குழு ஏ மாநிலங்கள், குழு பி மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலைசார் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.

நல்லாட்சிக் குறியீடு 2020-2021-ன் ஒருங்கிணைந்த தரவரிசைப் பட்டியலில், 10 மாநிலங்கள் கொண்ட குழு ஏ பிரிவில் தமிழ்நாடு 7-ம் இடத்தில் இடம்பெற்றுள்ளது. அதேபோல், வடகிழக்கு மற்றும் மலைசார் மாநிலங்கள் பிரிவில் அசாம் மாநிலம் 7-ம் இடத்தில் உள்ளது.

2021 டிசம்பர் 25-ம் தேதி வெளியான நல்லாட்சிக் குறியீடு ஆனது 2020-21-ம் ஆண்டு குறித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. அதில், தமிழ்நாடு 18வது இடம் என்பது தவறான தகவல். இக்குறியீட்டில் பாஜக ஆளும் அசாம் மாநிலமும் மலைசார் மாநிலங்கள் பிரிவில் 7-ம் இடத்திலேயே உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், மாநில அரசுகளின் நிர்வாகம் குறித்த நல்லாட்சிக் குறியீட்டு தரவரிசைப் பட்டியலில் அசாம் 1-ம் இடமும், தமிழ்நாடு 18-ம் இடமும் எனப் பரப்பப்படும் தகவல் தவறானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader